மெரில் அப்போதும் என்னை விடவில்லை. ” கமான், டான்ஸ் மேன். ” என் இடுப்பை கைகளால் வளைத்துக் கொண்டு இசைக்கேற்றபடி மெதுவாய் அசைந்து கொண்டே இருந்தாள். வேலியில் போகிற ஓணானை எடுத்து மடியில் கட்டிக் கொள்வது இதுதானா?
ஃபோட்டோகாப்பி எந்திரம் அருகே அவள் எடுத்து முடிக்க காத்திருந்த போது – எதையாவது பேச வேண்டுமே என்பதற்காக, ” மெரில், வார இறுதிகளில் நீ என்ன பண்ணுவே? ” என்று அந்த வெள்ளிக் கிழமையின் சாயந்தரத்தில் கேட்டு வைக்கப் போக, இந்த விபரீதம் ஆரம்பித்தது.
” இரண்டாயிரம் சதுர அடி சொர்க்கம். ” என்றாள்.
” என்ன அது ? “
என்னை அற்பமாய் ஒரு கீழ்ப் பார்வை பார்த்து விட்டுச் சிரித்தாள். ” இந்தியாவில் உங்களுக்கெல்லாம் கம்ப்யூட்டரைத் தவிர வேற ஒண்ணுமே சொல்லித்தர மாட்டாங்களா? டூ பேட். இந்த down town-ல பிரசித்தி பெற்ற பார் அட்டாச்டு டான்ஸ் க்ளப் மேன். அதைப் பத்தித் தெரியலைன்னா நீ இன்னும் வயசுக்கு வரலைன்னு அர்த்தம். “
ஒரு சம்மட்டி எடுத்து என் பின்னந்தலையில் ணங் ணங் ணங் என்று பத்துத் தடவை அடித்திருந்தால் கூட இத்தனை வலித்திருக்காது. கொஞ்சம் பிசிறடிக்கிற குரலில், ” நீ இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவ. நான் அப்படி இல்லை. இங்கே பிழைக்க வந்தவன். “
பத்து விரலையும் என் முகத்துக்கு நேராய்க் காட்டி சத்தமாய்ச் சிரித்தாள். ” ஓக்கே, கூல் டவுன். இன்னிக்கு நான் உனக்கு அந்த சொர்க்கத்தைக் கண்ணில் காட்டறேன். “
” வாட்? “
” ஓ கமான் மேன். இத்தனை நேரமா என் பாய் ஃப்ரெண்ட்ஸ் அத்தனை பேர்க்கும் போன் பண்ணி போன் பண்ணி கட்டை விரல் தேய்ஞ்சதுதான் மிச்சம். ஒருத்தனும் மாட்டலை. கம்பெனி கொடேன். “
மெரில் என்கிற அந்தப் பதினெட்டு வயது மெழுகுச் சிலை மறுபடி என் ஆண்மையைப் பற்றித் தாறுமாறாய் எதுவும் சொல்லி விடும் முன் வேகமாய்த் தலையாட்டி வைத்தேன்.
மெரிடியன் தெருவிலிருந்த அந்தப் புண்ணிய ஸ்தலத்துக்குள் நுழைந்ததும் – எங்கே நான் தொலைந்து விடப் போகிறேனோ என்கிற மாதிரி என் கையைப் பிடித்துக் கொண்டாள் மெரில். அரையிருளை ஊடுருவும் மங்கலான மஞ்சள் வெளிச்சம். முற்றத்திலேயே ஒரு ஆணும் பெண்ணும் அவசரமாய் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உள்ளே செல்லச் செல்ல திட்டுத் திட்டாய் ஜோடிகள். எல்லோரும் தனித் தனித் தீவுகளாய் தங்கள் இருவரைத் தவிர வேறு யாருமே அங்கில்லை என்கிற மாதிரி இசைக்கு ஆடியபடி, சே !
” என்ன மேன், திரு திருன்னு முழிக்கிறே. இந்தப் பக்கம் வா. ” என்னைத் தரத் தரவென்று பானங்கள் வழங்கப்படும் மேஜை நோக்கி இழுத்துச் சென்றாள். ரம்பா மிடி அணிந்த வெயிட்டர் பெண்கள் தட்டில் ஏந்திய கண்ணாடிக் கோப்பைகளோடு மெய் மறந்த ஜோடிகளுக்கு நடுவே ரொம்ப ஜாக்கிரதையாய் வேலை பார்த்தார்கள். கிரெடிட் கார்டை நீட்டி, ” டூ லார்ஜ் ப்ளெண்ட்டட் விஸ்கி ப்ளீஸ். கார்டை க்ளோஸ் பண்ண வேண்டாம். ” என்றாள் மெரில். நிரப்பப்பட்ட பொன்னிற திரவத்தின் மேற்பரப்பு ஆட, என்னிடம் நீட்டினாள். ” இது ரெண்டு அவுன்ஸ் உள்ளே போச்சுன்னா அப்படியே மிதக்கற மாதிரி இருக்கும். அந்த மிதப்போட குறைஞ்சது ஒரு மணி நேரத்துக்காவது ஆடணும். டு யு ஹேவ் ஸ்டாமினா? “
சீண்டுகிறாள். அவளுக்கு பதிலளிப்பதைப் போல் ஒரே மடக்கில் அந்தக் கோப்பையைக் காலி பண்ணி முடித்து, ” வா ஆடலாம். ” என்றேன். அதே சமயம் திடீரென சற்றுத் தள்ளி ஆக்ரோஷமாக ஆங்கிலக் குரல்கள் குழாயடிச் சண்டை கணக்காய்க் கேட்க ஆரம்பித்தது. திரும்பிப் பார்த்தேன். இரண்டு பெண்களும், ஒரு ஆணும் யாரை யார் தாக்குகிறார்கள் என்பது புரியாத படி கோபத்தோடு கத்தியபடி, முடியைப் பிடித்து உலுக்கியபடி, மாறி மாறி முகத்திலும் வயிற்றிலும் குத்து விட்டபடி… பெரும் கூச்சல். சட்டசபை மாதிரி அமளி. கண்ணாடிக் கோப்பைகள் உடையும் சப்தம். நிமிஷத்தில் அந்தப் பெண்ணுக்கும், ஆணுக்கும் மண்டை உடைந்து முகமெல்லாம் ரத்தாபிஷேகம் நடக்க ஆரம்பித்தது.
” மெரில், என்ன இது? “
மெரில் ஆடுவதையும், என்னை ஆட்டுவிப்பதையும் நிறுத்தவே நிறுத்தாமல் புன்னகைத்தாள். ” கண்டுக்காதே, இதெல்லாம் இங்கே சகஜம். “
” ரத்தம் ஃபவுண்ட்டன் மாதிரி கொட்டுது மெரில். என்ன பிரச்சனை? “
” அவ ஒரு இம்மெச்சூர்ட் இடியட். அந்தப் பையன் பொண்ணை மாத்திட்டான்னு தகராறு. இன்னும் கொஞ்ச நேரத்தில் காப் வந்து அவங்களை கவனிச்சிப்பாங்க. உன்னை இங்க கூட்டிட்டு வந்தது தப்பாப் போச்சு. ஜாஸ் இசை உன் காதில் விழலை? நீ பாட்டுக்கு ஆடு மேன். “
முதல் முதலாய் எனக்கு வியர்த்தது. மெரிலின் பாய் ஃப்ரெண்ட் எவனாவது வந்து என் மண்டையை உடைத்து வைக்கப் போகிறான் என்று உள்ளுணர்வு அலற ஆரம்பித்த போதே – நெடுநெடுவென அர்னால்ட் சைசில் அந்த காப் வந்தார். அந்த ரத்த கோஷ்டி மூன்று பேரையும் புறங்கையைப் பின்னால் மடக்கி கை விலங்கை மாட்டி விட்டு எதேச்சையாய் எங்களைப் பார்த்தார். ஒரு விநாடி நெற்றியைச் சுருக்கினவர் – நேராய் எங்களிடம் வந்தார்.
எனக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை புரட்டிப் போட ஆரம்பித்தது. அந்த போலிஸ்காரரைப் பார்த்து மெரில், ” டாடி. ” என்றதும், எனக்கு ஜன்னியே கண்டது.
நான் ஒதுங்க நினைத்தாலும் மெரில் என்னை விட்டபாடில்லை. இறுக்கமாய்ப் பிடித்து வைத்து, ஆடிக் கொண்டே இருந்தாள்.
பேட்ரியாட்டிக் லாவில் தூக்கி உள்ளே போட்டு ஈராக்கியக் கைதியைப் போல முழு நி. ஆக்கி துண்டு துண்டாய் அறுக்கத்தான் போகிறார். பலியாடு மாதிரி நான் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருக்க – அவர் என்னை ஒரு ஜந்துவாகக் கூட மதிக்காமல், மெரிலை மட்டுமே பார்த்து, இறைஞ்சலான குரலில், ” டோன்ட் கோ க்ரேஸி ஹனி. ராத்திரி பத்திரமா வீட்டுக்குப் போய் சேரு. ” அவள் முதுகில் செல்லமாய் ஒரு தட்டுத் தட்டி விட்டு, வேலையைப் பார்க்கப் போனார்.
– சத்யராஜ்குமார்
Friday, May 21, 2004

