பாழாய்ப் போன அந்த ரவிக்கு போன் வரும்போதெல்லாம் நான் ஏகத்துக்கும் டென்ஷன் ஆகி விடுவேன். காலையில் ஆபிஸ் போகிற அவசரத்தில், ” ரவி, அமெரிக்கன் க்ரெடிட் யூனியன் பாங்க்கிலிருந்து பேசுகிறோம். கடந்த மார்ச் மாசத்திலிருந்து உங்கள் கடன் தொகை நிலுவையிலிருக்கிறது. உடனே கட்டாவிட்டால் லீகல் நோட்டீஸ் வரும். ” என்பார்கள். சாயந்தரம் சாவகாசமாய் உட்கார்ந்து ” எவ்ரிபடி லவ்ஸ் ரேமண்ட் ” டிவி தொடர் பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கும்போது, ” ஏம் ஐ ஸ்பீக்கிங் டு ரவி? நியூஜெர்சி பாயிண்ட் ப்ளஸண்ட் ஹோட்டலில் இருந்து பேசுகிறோம். உங்கள் ஆனுவல் மெம்பர்ஷிப்பை புதுப்பிக்க இன்னும் பத்தே நாட்கள்தான் உள்ளன. ” என்று போன் வரும். அவ்வளவுதான், அடுத்த அரை மணி நேரத்துக்கு டிவியில் ரேமண்ட் என்ன சொன்னாலும் சிரிப்பே வராது. மூட்அவுட். டென்ஷன். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ராத்திரி ஒரு மணிக்கு போன் அலறும். பதறியடித்துக் கொண்டு போய் எடுத்தால், ” ரவிகாரு, இண்டியாலிருந்து கருணாகாரு மாட்லாடுத்துன்னாரு… ” என்று நட்டநிசியில் காதில் சுந்தரத் தெலுங்கு மழை. இவர்கள் எல்லோருக்கும் பொறுமையாய், ” நான் ரவி இல்லை ஸார். இதற்கு முன்னால் அவர் இந்த அபார்ட்மென்ட்டில் குடியிருந்திருப்பார் போல. போன் நம்பரை இன்னும் மாத்தாம (மாத்தித் தொலைக்காம என்று மனசுக்குள்) வெச்சிருக்கார். ” என்று பதில் சொல்வதற்காகவே அந்த ரவிகாரு எனக்கு மாசம் ஆயிரம் டாலர் சம்பளம் தர வேண்டும்.
ரவி என்ற பேரைக் கேட்டதுமே – பரம எதிரியைப் பார்த்து விட்டது போல் தொண்டை இறுகிப் போய் விடும் நான், அந்த வசீகரிக்கும் ஆங்கிலக் குரலால் சற்றே தடுமாறித்தான் போனேன். ” ஆமாம், நான் ரவிதான் பேசறேன். என்ன வேணும்? ” என்று என்னை அறியாமல் உதடுகள் பொய் சொல்லி விட்டது.
” ஹேய் ரவி, நான் எமிலி. அமெரிக்கன் சிங்கிள்ஸ் டாட்காமில் உன்னோட ப்ரொபைல் பார்த்தேன். என்னோட ப்ரொபைல் பார்த்து சந்திக்கலாமான்னு நீ கேட்டிருந்தே. ஸாரி என்னால அப்போ உடனே பதில் சொல்ல முடியலை. ஐயாம் இன்ட்ரஸ்ட்டட் நெள. டூ யூ ? நாளைக்கு சர்க்கிள் சென்ட்டர் மாலில் நேர்ல சந்திச்சுப் பேசுவோமா? “
தாயே கருமாரி, இதென்ன திருவிளையாடல். ” சரி சந்திக்கலாம். ” என்று பலியாடு மாதிரி தலையாட்டி விட்டேன். சர்க்கிள் சென்ட்டர் மால் புட் கோர்ட்டில், தென் கிழக்கு மூலையில், தண்ணீர் பவுண்ட்டன் பக்கத்தில், பிங்க் நிற கர்ச்சீப்பின் மேல் மூலையில் சிவப்பு நிறத்தில் எமிலி என்று எம்ப்ராய்டர் பண்ணி பிடித்துக் கொண்டிருப்பேன் என்று வாஸ்து சாஸ்திரம் கணக்காய் ஒரு அடையாளம் சொன்னாள். ஒரு வெள்ளைக்காரியுடன் அம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது போல ராத்திரி கனவு.
அடுத்த நாள் இந்தியாவிலிருந்து கொண்டு வந்த அரப்புத் தேய்த்து ஷவரில் குளித்து விட்டு – சிடியில் கந்தர்சஷ்டி கவசம் பத்துத் தடவை போட்டுக் கேட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ” முருகா, பிள்ளையாரப்பா… நானா தேடிப் போகலை. நீயா குடுத்த சான்ஸ். நினைச்சாலே கிளுகிளுப்பா இருக்கு. விபரீதமாயிடுமோன்னு பயமாவும் இருக்கு. எல்லாம் நல்லபடியா நடக்கணும். என்னைக் காப்பாத்தப்பா. ” திருநீறை நெற்றியில் லேசாய்க் கீறிக் கொண்டு காரை ஸ்டார்ட் பண்ணினேன்.
கர்ச்சீப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த எமிலி ரம்பா மிடி மாதிரி கொஞ்சமே கொஞ்சம் ஸ்கர்ட்டும், சிம்ரன் ஜாக்கெட் போல கர்ச்சீப் சைசில் மேலாக்கும் போட்டுக் கொண்டு நின்றதுதான் என்னை அதிர வைத்தது. இந்த அல்ட்ரா அமெரிக்கன் மாடர்ன் எல்லாம் நமக்குத் தாங்குமா? விதி யாரை விட்டது. ” எமிலி, நான் ரவி. ” என்று அவளிடம் கையை நீட்டி விட்டேன்.
” ஹாய் ரவி. ” என்று என்னை இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டாள். ” லெட்ஸ் கோ டு ஹோட்டல் ராக்பாட்டம். ஏதாச்சும் சாப்பிட்டே பேசலாம். ஏய், உனக்கு ஒரு முத்தம் கொடுக்கவா? ” என் பேயறைந்த முகத்தைப் பார்த்து விட்டு, ” ஓக்கே. அப்றமா வெச்சிப்போம். நான் ரொம்ப அவசரப்படறேன் இல்லே? ” நிக்கல் நாணயங்களைக் கொட்டின மாதிரி சிரித்தவள் நடக்க நடக்க திடீரெனக் கேட்டாள். ” ஆமா, நீ எவ்வளவு உயரம்? “
” உ… உயரம்… அஞ்சடி… ஆறங்குலம். “
” கரெக்ட். அவ்வளவுதான் இருப்பே. ஆனா ப்ரொபல்ல ஆறடி உயரம் போட்டிருந்தியே? “
ரவிகாரு… உன் உயரம் ஆறடியா? இன்னும் என்னவெல்லாம் ப்ரொபைலில் போட்டு வைத்திருக்கிறாய். எமிலி என்கிற புலி வாலைப் பிடித்து விட்டேனா? எனக்கு உதறலெடுக்க ஆரம்பித்தது. ” அது வந்து… “
” ஓக்கே. எனக்கும் உனக்கும் உயர வித்தியாசம் ரொம்ப இருக்குமோன்னு கவலைப்பட்டேன். ஆனா அப்படி இல்லை. ஏய் ரவி, உன் நெத்தியில் என்னவோ பட்டிருக்கு. துடைக்கவா? “
பழநி சித்தநாதன் விபூதியை அழிக்க வந்த எமிலியை பதறிப் போய்த் தடுத்தேன். ” நோ. இது ஹோலி ஆஷ். இதை வேணுமின்னே அழிக்கக்கூடாது. “
” இன்ட்ரெஸ்ட்டிங் ” – ராக்பாட்டம் ஹோட்டலை அடைவதற்குள் என் நெற்றியையே நாலைந்து முறை விநோதமாய்ப் பார்த்தாள். ” என்ன பேசவே மாட்டேங்கிற ரவி? “
” நா… நான் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். தப்பா நினைச்சுக்காதே எமிலி. “
அவள் முகம் லேசாய் மாறியது. ” என்ன? நீ ரிசர்வ்ட் டைப்பா? ஒரு செக்கண்ட் கூட மூச்சு விட அவகாசமில்லாம பேசிட்டிருப்பேன்னு உன் ப்ரொபைல் சொல்லுது. உன் உயரம் மாதிரியே அதுவும் பொய்யா? “
” வந்து… “
” ஷிட். ” லேசாய் டென்ஷன் ஆகி சிகரட் கேசிலிருந்து இரண்டை உருவி ஒன்றை அவள் வாயில் வைத்துக் கொண்டு இன்னொன்றை என்னிடம் நீட்டினாள். ” சிகரட் எடுத்துக்கோ. “
” நீ சிகரட்டெல்லாம் பிடிப்பியா எமிலி? நான் மாட்டேன். சிகரட் வாசம்ன்னா எனக்குக் குமட்டிட்டு வரும். “
அவள் முகம் சிவந்தது. ” ஓ மேன். இது அடுத்த பொய்யா? செயின் ஸ்மோக்கர்ன்னு இல்லே போட்டிருந்தே ? ” ஜாக்கெட்டில் மடித்து வைத்திருந்த ரவியின் ப்ரொபைல் ப்ரிண்ட் அவுட்டை என் மூஞ்சிக்கு நேரே நீட்டினாள். ” சொல்லு. இதிலே இன்னும் என்னல்லாம் பொய்? “
” வீக் எண்ட் கனேடியன் விஸ்கி… அக்கேஷனலி அபின்… ” நான் அழாத குறையாய் அவளிடம் சொன்னேன். ” நாங்க ரொம்ப ஆச்சாரமான குடும்பம் எமிலி. என்னவோ தெரியலை போனில் உன் குரலைக் கேட்டதும் மந்திரம் போட்ட மாதிரி சந்திக்க ஒப்புக்கிட்டேன். மது அருந்த மாட்டேன்னு எங்கம்மாவுக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டுதான் நான் அமெரிக்காவுக்கு ப்ளைட் ஏறினேன். இந்த மாதிரி உடம்பைக் காட்டற டிரஸ் கூட எனக்குப் பிடிக்காதாக்கும். “
” யூ டாமிட். புளுகு மூட்டை. ப்ளைண்ட் டேட்டிங்ன்னா என்ன தெரியுமா? இதான். முதல் சந்திப்பிலேயே ரிலேஷன்ஷிப் முடிஞ்சு போற இதுதான். ப்ராடு. ச்சீட். ” இன்னும் எ̀ப் வார்த்தை வரைக்கும் போனாள் எமிலி. ” கோ டு ஹெல் மேன். கெட் லாஸ்ட். “
வியர்வையில் சொதசொதத்துப் போன நான் அமெரிக்க பத்ரகாளியாய் நின்றிருந்த எமிலியிடம் கடைசியாய் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு – நான் ரவி இல்லை என்ற உண்மையையும் சொல்லி விட்டு அரக்கப் பரக்க காருக்கு ஓடினேன்.
- சத்யராஜ்குமார்
Friday, April 30, 2004

