இளம் மனைவி அனிதாவுக்கு இன்னும் நிறைய விநோதங்கள் இங்கே அமெரிக்காவில் மிச்சமிருந்தன.
தேங்க்ஸ் கிவிங் டே – க்காக வெள்ளைக்காரனை விட ஆவலாகக் காத்திருந்தாள். அதையொட்டி இனி வரும் நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் ஆபிஸ் சற்றே மந்தகதியில்தான் இருந்தது. அனிதாவிடமிருந்து இதற்குள் நான்கு முறை போன் வந்து விட்டது.
” என்னங்க, எந்த கடையில் என்ன மலிவாக் கிடைக்கும்ன்னு ஃப்ளையர்ஸ் கொண்டு வந்து போடுவாங்கன்னிங்க. அப்படி ஒண்ணுமே வரலையே ? “
” பரவாயில்லை. ஃப்ளையர்ஸ் எல்லாம் கடையிலும் வெச்சிருப்பாங்க. சாயந்தரம் எல்லா கடைக்கும் நாம ஒரு வெள்ளோட்டம் போய்ட்டு வருவோம். “
எனக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அமெரிக்காவுக்கு வந்ததிலிருந்து அனிதா எது கேட்டாலும் ‘ தேங்க்ஸ் கிவிங் டே’ ஸேல்ல பார்த்துக்கலாம் என்று சொல்லியிருந்தேன்.
கேம் கார்டர், ஹோம் தியேட்டர் என்று அவளிடம் பெரிய விஷ் லிஸ்ட் உள்ளது. நான் வேறு பொழப்புக்குத் தேவையான சில கம்ப்யூட்டர் உபகரணங்களும், மென்பொருட்களும் வாங்கித் தொலைக்க வேண்டியிருக்கிறது.
வருடா வருடம் இந்த நாள் ஒரு இன்பமான வலி.
அதிகாலை ஐந்தரை ஆறு மணிக்குத் திறக்கப் போகும் கடை வாசலில் – நவம்பர் கடுங் குளிரில் – திருப்பதி க்யூ மாதிரி மூன்று மணியிலிருந்தே மக்களோடு மக்களாய்க் காத்திருக்கா விட்டால் இன்ஸ்டன்ட் தள்ளுபடியிலும், மெயில்-இன்-ரிபேட்டிலும் வாங்கத் திட்டமிட்டிருந்த பொருட்கள் இந்த வருடத்துச் சிறந்த கனவாகக் காணாமல் போய் விடும்.
அனிதாவிடம் இன்றைக்கு ஒரு சின்ன பட்ஜெட் உரை நிகழ்த்தி, என்னதான் தள்ளுபடி விற்பனை என்றாலும் எதெல்லாம் வாங்க இயலும் எதெல்லாம் முடியாது என்று முன்னமே அவளைக் கொஞ்சம் தயார்ப்படுத்தி வைப்பது நல்லது என்று தோன்றியது.
மனதில் தோன்றியதையெல்லாம் செயல்படுத்த முடிகிறதா என்ன? நான் வீட்டுக்குப் போனபோது கார்ப்பெட் பூராவும் ஃப்ளையர்களைப் பரப்பிக் கொண்டு நடுவே உட்கார்ந்திருந்தாள். எங்கே மலிவாய் என்ன விற்கிறார்கள் என்று கத்தை கத்தையாய்த் தகவல்.
” நம்ம வீட்டைத் தவிர எல்லா இடத்திலும் இதைப் போட்டுட்டு போயிருக்கான். கீழே மெக்சிகோகாரி கிட்டே பேசறப்பதான் தெரிஞ்சது. அவங்க ஊருக்குப் போறாங்களாம். நீ வேணா எடுத்துட்டுப்போன்னுட்டா. “
குப்பை கொட்டுகிற வேலை மிச்சம் என்று அப்பாவி அனிதாவிடம் தள்ளி விட்டாள்.
” நாம லிஸ்ட் போட்டு வெச்சிருக்கிற ஐட்டம் எல்லாமே ஒண்ணு பெஸ்ட் பை-ல இல்லைன்னா சர்க்யூட் சிட்டியில்தாங்க இருக்கு. ப்ளாட்டினம் கிரெடிட் கார்டு அப்ளை பண்ணியிருந்திங்களே ! கரெக்டா அதுவும் இன்னிக்கு தபால்ல வந்து சேர்ந்துருச்சு. “
முழு உற்சாகத்தில் இருந்த அனிதாவிடம் பட்ஜெட் பேச்செல்லாம் எடுபடுமா தெரியவில்லை.
அதிகாலை மூணரை மணிக்கு அலாரம் வைத்து விட்டு அது அடித்து விட்டதா என்று அடிக்கடி எழுந்து பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு டாலர், தசமங்கள், எண்கள், கூட்டல், கழித்தல், வகுத்தல் குறிகள் கண் முன்னால் கொசகொசப்பாய் ஆடிக் கொண்டிருந்ததில் தூங்க முடியவில்லை.
ஒரு வழியாய் கவசங்களை மாட்டிக் கொண்டு அதிகாலை நாலு மணிக்கெல்லாம் வீட்டை விட்டு வெளியே வந்தோம். காரின் மேல் அரை அங்குலத்துக்குக் கொட்டியிருந்த பனியை அப்புறப்படுத்த இருபது நிமிஷங்கள் போராட வேண்டியிருந்தது.
” காசு போனா போகட்டும். இன்னிக்கு ஒரு நாளைக்கு க்ளோஸ்ட் பார்க்கிங்கில் நிறுத்தச் சொல்லலாம்ன்னு நினைச்சேன். மறந்துட்டேன். ” என்று அவஸ்தைப்பட்டாள் அனிதா.
என்னுடைய தொண்ணூற்றைந்து மாடல் கார் அந்த ஸீரோ டிகிரி குளிரில் நிறைய இருமி, விக்கி பிறகுதான் ஸ்டார்ட் ஆனது.
லேசாய்த் தூறல் வேறு விழ ஆரம்பித்திருக்க, வைப்பரைப் போட்டுக் கொண்டு அனிதாவின் ஆர்வத்துக்கும், அவசரத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் மிக மெல்லத்தான் ஊர்ந்து கொண்டிருந்தேன்.
ஆனால், அந்த சிக்னலில் பிரேக் பிடித்த போது – ஏபிஎஸ் செயலிழந்து காரின் சக்கரங்கள் தனக்கும், பனியும், மழை ஈரமும் படர்ந்த அந்தச் சாலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்று சொல்லி விட்டு ரொம்ப சரியாய் ஓரமாக இருந்த இரண்டடி பள்ளத்தில் போய் ‘கட்டக்’கென்று பெரிய சப்தத்தோடு முட்டிக் கொண்டு நின்றது.
அந்த தேங்க்ஸ்கிவிங் டே -யில் டைமிங் பெல்ட், ஃப்ரண்ட் ஆக்சில் பூட், ட்ரான்ஸ்மிஷன் கேஸ், டேன்ஜர் லைட் முதலானவற்றை ப்ளாட்டினம் க்ரெடிட் கார்டில் தள்ளுபடி ஏதுமின்றி வாங்கினோம்.
- சத்யராஜ்குமார்
Sunday, November 28, 2004

