கடிதத்தைப் படித்து விட்டு ரத்தி பயமாய் என்னைப் பார்த்தாள்.
மார்ஷ் பல்பொருள் அங்காடியில் வாங்கிய வாரச் சாமான்களை நானும், அவளும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த போதுதான் அதைப் பார்த்தோம்.
அபார்ட்மென்ட் கதவில் ஏ4 அளவில் ஒரு பேப்பர் ஒட்டியிருந்தது.
-5 டிகிரி ·பாரன்ஹீட்டில் ரொம்ப நேரம் நிற்கத் திராணி இன்றி கதவில் ஒட்டியிருந்த அந்த லெட்டரை சரக்கென்று கிழித்துக் கையிலெடுத்துக் கொண்டு உள்ளே வந்தோம்.
கொட்டை கொட்டையாய் ஆங்கில எழுத்துக்கள்.
|
அன்புள்ள அண்டை வீட்டுக்காரருக்கு,
நேற்றிரவு நடந்த ஆனால் - இதற்காக இனி உபத்திரவமளிக்க மாட்டேன் என்று |
” கம்ப்ளைண்ட் பண்ணினிங்களா ? ” விழிகளில் பயத்தைத் திரட்டிக் கொண்டு கேட்டாள்.
” யார் இந்த நிக்கோலஸ்? ” என்றேன்.
” #B- க்கு குடி வந்திருக்காங்க. ஆள் எருமைக்கடா மாதிரி இருக்கான். அவன் பெண்டாட்டி… “
” லவ்வர். “
” ஏதோ ஒரு கருமம். அதுவா இப்ப முக்கியம். அவ ஒரு ஜெர்சி மாடு. கடுகடுன்னுதான் பார்க்கிறா. உங்களுக்கு ஏங்க இந்த வம்பெல்லாம்? எதுக்கு கம்ப்ளைண்ட் குடுத்திங்க. “
” இடியட். நான் எங்கே புகார் கொடுத்தேன்? நேத்து ராத்திரி ரொம்ப சத்தம் கேட்டுச்சா என்ன? “
” தெரியலையே. நான் அசந்து தூங்கிட்டேன். “
” வேற யாரோ கம்ப்ளைண்ட் பண்ணியிருக்கணும். அவன் தப்பிதமா நாமதான்னு நினைச்சு நம்ம கதவில் ஒட்டிட்டான். “
” நைட் கிளப்ல வேலை பார்க்கிற ஆளாம். இந்த மாதிரி ஆசாமிங்க கொஞ்சம் எக்சென்ட்ரிக்கா இருப்பாங்க. நமக்கு எதுக்குங்க பொல்லாப்பு. நாங்க புகார் தரலைன்னு போய் சொல்லிட்டு வந்துடுங்க. “
ரத்தி சொன்னது நியாயமாய்ப்பட்டது. பிழைக்க வந்த தேசத்தில் ஏன் அநாவசிய வம்புகள். கழற்ற இருந்த லெதர் ஜாக்கெட்டின் ஜிப்பை மேலிழுத்து விட்டுக் கொண்டு, பக்கத்து வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். இரண்டு முறை மணியடித்த பின், மேஜிக் துளையில் பார்த்து, கதவை லேசாய்த் திறந்தவளிடம் அந்தக் காகிதத்தை ஆட்டிக் காண்பிக்க, ” கமின் ! ” என்றபடி வழி விட்டாள். ” நிக்கோலஸ். ” என்று அருகாமை அறையை நோக்கிக் கத்தினாள்.
அங்கே – வெறும் ஷார்ட்ஸோடு ஒரு மாமிச மலை ட்ரெட்மில்லில் வியர்வை வழிய ஓடிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவளுடைய குரலைக் கேட்டு ஓட்டத்தை நிறுத்தி விட்டு – டவலால் வழியும் ஈரத்தை ஒற்றிக் கொண்டே – ” என்ன டார்லிங், துப்பாக்கியை சுத்தம் பண்ணிட்டியா ? ” என்றான்.
அப்போதுதான் கவனித்தேன், அந்தப் பெண் கழற்றிப் போட்டிருந்த ரிவால்வரின் பாகங்களை துடைத்துப் பளபளப்பாக்கும் வேலையைத் தொடர ஆரம்பித்திருந்தாள்.
எனக்கு உள்ளுக்குள்… அதென்னது குலையா… அது நடுங்க ஆரம்பித்திருந்தது. காகிதத்தை நிக்கோலஸிடம் நீட்டி சொன்னேன். ” இது… கதவில் ஒட்டியிருந்தது. “
அவன் முகத்தை கெஞ்சலாக்கி, ” ஐயாம் வெரி ஸாரி மை ·ப்ரெண்ட். இந்த மர வீடுகளில் ஹோம் தியேட்டர் எவ்வளவு அதிரும் ! உன் வேதனை எனக்குப் புரியுது. “
” இல்லை நிக். யு நோ… நான் கம்ப்ளைண்ட் பண்ணவே இல்லை. நான் இங்க பிழைக்க வந்த ஆள். வாரம் பூரா வேலை, வாரக் கடைசியில் இண்டியன் டெம்ப்பிள், ரெண்டு நாளைக்கொரு தரம் இந்தியாவுக்கு டெலிபோன். இதுக்கு மேல கவலைப்படவோ, சட்டம் பேசவோ, உரிமையை நிலை நாட்டவோ நான் முயற்சிக்கப் போறதில்லை. வேற யாரோ புகார் தந்திருக்காங்க. அதை விளக்கி சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன். “
” ரியலி? எனி வே ஐயாம் ஸாரி. ஐ அப்ரிஷியேட் யுர் பேஷண்ஸ் ! ” என்றான்.
அதற்கடுத்த நாளிலிருந்துதான் தினமும் திம் திம்மென்று மாடிப்படியில் சப்தமும், நேரங்கெட்ட நேரத்தில் ஹோம் தியேட்டரும் அதிர்ந்தன.
- சத்யராஜ்குமார்
Tuesday, January 18, 2005

