ப்ரிட்ஜ் வாட்டர் கோயிலில் பிரம்மாண்டமாய் நின்றிருந்த லார்ட் வெங்கடேஷ்வராவின் முன்னால் கண்களை மூடி, ” வெங்கடாசலபதிப் பெருமானே, நீ இருக்கிற நியூஜெர்சியையே திருப்பதியா நினைச்சு வந்து சேர்ந்திருக்கேன். இந்த ப்ராஜெக்ட் குறைஞ்சது பதினெட்டு மாசத்துக்குப் போகணும். அதுக்குள்ளே இங்கே நல்ல நல்ல நண்பர்கள் கிடைக்கணும். கழுத்துக்கு நேரா எந்நேரமும் கத்தி தொங்கிட்டிருக்கும் இந்த சாப்ட்வேர் கான்ட்ராக்டர் பிழைப்பை விட்டுட்டு கூடிய சீக்கிரமா க்ரீன்கார்டும், பர்மனன்ட் உத்தியோகமுமா செட்டில் ஆகணும். ” என்று மனமுருக ப்ரார்த்தித்துக் கொண்டு கண்களைத் திறந்த போதுதான் அந்தக் குரல் கேட்டது.
எனக்கு நேர் எதிரே – அப்பாஸ் போல மொழுக் முகத்தோடு, உதடுகள் நிறைய சிநேகச் சிரிப்புடன் அந்த இளைஞன். என் மூளைக்குள் க்ராபிக்ஸ் த்ரீ டி மாடலிங் மென்பொருள் ஒன்று விருட்டென இயங்க ஆரம்பித்து – அவனுக்கு மீசை வைத்து, தாடி வைத்து, மழித்து, கிருதாவை நீட்டி, கன்னத்தை ஒடுக்கி, கண்களுக்கு கண்ணாடி மாட்டிவிட்டு, இன்னும் 60, 70 ப்ரேம்களுக்கு அனிமேஷன் பண்ணிப் பார்த்துத் தோற்றுப் போனது.
” ஸாரி, நினைவில்லை. உங்க பேரு…? “
அவன் கையை நீட்டினான். ” என் பேர் தியாகு. அநேகமா உங்களை நான் இந்தியாவில் பார்த்திருக்கேன்னு நினைக்கிறேன். உங்க ஊரு… “
” கோயமுத்தூர் பக்கத்தில் பொள்ளாச்சி. “
” கரெக்ட். அங்கே ஒரு டெய்லர் கடைல வெச்சு உங்களைப் பார்த்திருக்கேன். “
எனக்குள் வேகமாய் மலரும் நினைவுகள். மெக்கானிக்கல் என்ஜினீரிங் வேலையை உதறி விட்டு – கம்ப்யூட்டர் துறைக்குள் காலை வைக்க திட்டம் தீட்டிக் கொண்டிருந்த நாட்கள். அப்புவின் டெய்லரிங் ஷாப்தான் இந்த மாதிரி வெட்டி ஆபிசர்களின் ஆலமரத்தடி. அங்கே வைத்து எத்தனையோ அறிமுகங்கள் நடந்திருக்கின்றன. பல அறிமுகங்கள் அற்பாயுசில் முடிந்து போயிருந்தன. வியப்புடன் சொன்னேன்.
” உங்க ஞாபகசக்தி எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. நான் இந்த ஊருக்குப் புதுசு. நான் எப்பவுமே நல்ல நண்பர்கள் கிடைக்கணும்ன்னுதான் சாமியை வேண்டிப்பேன். இந்த வெங்கடேஷ்வரா ரொம்ப பவர்புல் சாமி. கும்பிட்டு கண்ணைத் திறக்கறேன், நீங்க கூப்பிடறிங்க. உங்களுக்கும் சொந்த ஊர் பொள்ளாச்சிதானா? டெய்லர் அப்புவை உங்களுக்கு எப்படித் தெரியும் ? “
தியாகு சிரித்தான். ” எனக்கு சொந்த ஊர் திருச்சி. என் ஒய்போட சித்தப்பாவோட மாமா ஒருத்தர் பொள்ளாச்சில இருக்கார். அவர் வீட்டுக்கு வந்திருந்தப்பதான் சொந்தக்காரப் பையன் அந்த டெய்லரிங் ஷாப் கூட்டிட்டுப் போனான். என்னவோ தெரியலை, உங்க முகம் எனக்கு பதிஞ்சு போச்சு. மறுபடியும் இங்கே அமெரிக்காவில் சந்திக்கணும்ன்னு இருக்கு. சொந்த பந்தத்தை எல்லாம் விட்டுட்டு ஆயிரக்கணக்கான மைல் தள்ளி பிழைக்க வந்திருக்கிறப்ப இப்படிப் பரிச்சயமான முகத்தைப் பார்க்கிறதில் கிடைக்கற சந்தோஷமே அலாதி. இல்லே. “
” கண்டிப்பா. “
” கொஞ்சம் இருங்க. என் ஒய்பை அறிமுகப்படுத்தறேன். ஒரு பொள்ளாச்சிக்காரரைப் பார்க்கறதில் அவளும் சந்தோஷப்படுவா. “
அப்போதுதான் சனிபகவானை சுற்றி முடித்த அந்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் யுவதியை அழைத்தான் தியாகு.
” ஹனி, ஸார் பொள்ளாச்சிக்காரர். ஷி ஈஸ் மேனகா. “
லிப்ஸ்டிக்காய்ப் புன்னகைத்து கை கூப்பினாள். கண்கள் விரிய என்னைப் பார்த்தாள்.
” இசிட்? எனக்கு ரொம்பப் பிடிச்ச ஊருங்க. அதுவும் அந்தப் பச்சை வயல் கிராமங்கள்… வாவ். இங்கே கான்க்ரீட் கட்டிடங்களுக்கு நடுவே நிறைய இழக்கிறோம் இல்லே? ஒரு ஒரு லட்சம் டாலர் சம்பாதிச்சு பாங்க் பாலன்சை ஏத்திட்டு இந்த கன்ட்ரியை விட்டு ஓடிப் போயிரணும். அதான் நான் இவர் கிட்டே அடிக்கடி சொல்லுவேன். “
” ஒரு லட்சம் டாலர்? ” நான் சிரித்தேன். ” மேனகா, நீங்க நிறைய கவிதை எழுதுவிங்களோ? கவிதை ஆசாமிங்கதான் இப்படி கனவுலகத்தைப் பத்தியே எப்பவும் பேசுவாங்க. “
” நான் கவிதை எழுதறவ இல்லை. ஆனா படிப்பேன். கனவு நிறைய காணணும். நம்ம பிரசிடென்ட் கூட அதானே சொல்றார். புஷ் இல்லேங்க, கலாம். எல்லா கனவுகளுமே கொஞ்சம் கொஞ்சமா நனவாகும். நம்ம மூணு பேரும் ஒரே அலைவரிசைல இருக்கோம்ன்னு நினைக்கறேன். நீங்க இன்னிக்கு சாயந்தரம் வீட்டுக்கு வாங்களேன். வி வில் கெட் டு கெதர். தியாகு, இவரை வீட்டுக்குக் கூப்பிட்டிங்களா?
தியாகு மோவாயை வழித்துச் சிரித்தான். ” அதான் நீ முந்திக்கிட்டியே ஹனி. ப்ளீஸ் கம் ஹோம். “
நிமிஷ கதியில் ஒட்டிக் கொண்டு விட்டார்கள். என்ன ஜோவியலான தம்பதிகள். சாயந்தரம் அவர்கள் வீட்டுக்குப் போன பின்பும் எனக்கு எல்லாமே கனவில் நடக்கிற மாதிரித்தான் இருந்தது. ஆப்பிள் துண்டங்கள், ஜுஸ், பெர்ரி, பிட்சா, சீஸ் ரோல்கள்… தடபுடலான டின்னர். அவர்கள் அன்பு மழையில் நான் திக்குமுக்காடிப் போனேன். மேனகா வெனிலா யோகர்ட்டை நீட்டிக் கொண்டே கேட்டாள்.
” எத்தனை நாளைக்கு இப்படி மணிக்கு இருபது டாலருக்கும், முப்பது டாலருக்கும் நாய் படாதபாடு படுவிங்க? நீங்க நினைச்சா ஆறு மாசத்தில் ஒரு லட்சம் டாலர் சம்பாதிச்சிடலாம். நாம ஒரு பிசினஸ் பண்ணுவோம். இந்த பிசினசில் உங்களுக்கு நீங்கதான் பாஸ். ” தியாகு அவளுக்குத் துணைக்கு வந்தான். ” ரெண்டாயிரம் டாலர் கட்டி நீங்க ஏஜன்ட்டா மாறணும். நீங்க யோசிக்கறது புரியுது. இது ஆம்வே இல்லை. ஆனா அதை விட சூப்பரான கான்சப்ட். “
எனக்கு சாப்பிட்டதெல்லாம் குமட்டிக் கொண்டு வர – சீட் நுனிக்கு வந்து, ஓடத் தயாராகி, வாசல் கதவு எந்தப் பக்கம் என்று தேட ஆரம்பித்தேன்.
- சத்யராஜ்குமார்
Thursday, May 06, 2004

