” உன் கூட கொஞ்சம் பேசணும். ப்ரேக் ரூமுக்கு வரியா? ” என்றாள் டெய்ஸி.
நிர்வாகக் குழுவிலிருக்கும் அவளோடு பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. வழியில் தென்பட்டாலோ, ஆல் ஹேண்ட்ஸ் மீட்டிங்கில் பார்த்துக் கொண்டாலோ லேசாய்ப் புன்னகைத்து ஹலோ சொல்லிக் கொள்வதோடு சரி. இன்ட்டர்காமை வைத்து விட்டு ப்ரேக் ரூமுக்குப் போன போது – கோக் பாட்டிலோடு உட்கார்ந்திருந்தாள்.
என்னைப் பார்த்து, ” கங்ராட்ஸ். ” என்று சிரித்தாள்.
” எதுக்கு? “
” நேத்திக்கு ஒயிட் எலிஃபென்ட் கிப்ட் எக்சேன்ஜ்ல விலையுயர்ந்த பரிசுப் பொருள் உனக்குக் கிடைச்சதுக்காக. அந்த குட்டி எல்சிடி டிவியை வாங்கி வெச்சது நான்தான். பொதுவா இந்த விளையாட்டுக்காக பத்துப் பதினஞ்சு டாலர்க்கு மேல யாரும் செலவு பண்ண மாட்டாங்க. ஆனா நான் காரணத்தோடதான் நூறு டாலர் குடுத்து அதை வாங்கினேன். ஒரு சின்ன சோதனை பண்ணிப் பார்த்தேன். “
” என்ன சோதனை? நீ பேசறது எனக்குப் புரியலை டெய்ஸி. “
அவள் உதடுகளில் நிலைத்த புன்னகை. ” அந்த டிவி எத்தனை பேர் கைக்கு மாறினாலும் கடைசியில் உன் கைக்குத்தான் வந்து சேரும்ங்கறது என்னோட கணிப்பு. அது உண்மையாயிடுச்சு. நான் உன்னோட அதிர்ஷ்டத்தை ரொம்ப நாளா கவனிச்சிட்டு வரேன். நம்ம ஆபிசில் எந்த நிகழ்ச்சியின் பொருட்டு லக்கி கேம்ஸ் நடந்தாலும் அதில் ஜெயிக்கிறது நீதான். எல்லாத்துக்கும் உன்னோட ஸ்டார் சைன்தான் காரணம். அதிலும் இந்த வாரம் உனக்கு அதிர்ஷ்டம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. “
என்னிடம் அதிகம் பேசாத ஒரு பெண் என்னைப் பற்றி இவ்வளவு தீவிரமாக ஆராய்ந்து வந்திருப்பது எனக்கு ஆச்சரியமாயிருந்தது. ” தாங்க்ஸ் டெய்ஸி. இதைச் சொல்லத்தான் கூப்பிட்டியா? “
” நான் இன்னும் விஷயத்தை ஆரம்பிக்கவே இல்லை. உன்னோட ஹவர்லி ரேட் எவ்வளவு? முப்பத்தஞ்சு டாலரா? “
” ஆமா. “
” நான் உனக்கு மணிக்கு நாப்பது டாலர் தரேன். என் கூட நாளைக்கு நீ ஒரு அஞ்சு மணி நேரம் செலவழிக்க முடியுமா? “
குழப்பமாய் அவளைப் பார்த்தேன். ” என்ன சொல்றே டெய்சி ? “
” என்னோட பட்ஜெட் ஆயிரம் டாலர். நாம அட்லான்ட்டிக் சிட்டிக்குப் போறோம். உனக்கு சம்பளம் இருநூறு டாலர் போக மீதி எண்ணூறு டாலரை வெச்சு அங்கே உள்ள கேசினோக்களில் நீ இஷ்டம் போல விளையாடலாம். நீ ஜெயிக்கிற பணம் எல்லாம் எனக்குத்தான். “
அமெரிக்காவில் லாஸ்வேகாஸ்க்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கேசினோ நகரம் அட்லான்ட்டிக் சிட்டி. இங்கிருந்து அரை மணி நேர கார்ப் பயணம்தான். இது நாள் வரைக்கும் நான் போக நினைத்ததில்லை. அது ஒரு போதையாக மாறி வாரா வாரம் போய் டாலர்களைப் பறி கொடுத்து வரும் நண்பர்களை எனக்குத் தெரியும்.
என் சிந்தனையில் குறுக்கிட்டாள் டெய்ஸி. ” என்ன யோசிக்கறே? உனக்கு நஷ்டம் எதுவுமில்லை. நீ ஜெயித்தாலும் தோத்தாலும் உனக்கு இருநூறு டாலர் கண்டிப்பா உண்டு. “
ஐஸ்க்ரீம் தின்னக் கூலியா? சம்மதித்தேன்.
மறுநாள் பிரம்மாண்ட கேசினோக்களில், சர விளக்குகளின் வெளிச்சத்தில், ஸ்லாட் மெஷின்களின் கடகட சத்தத்தில் ஐந்து மணி நேரம். ஸ்லாட்களிலிருந்து முன்னூறு டாலர்கள் அள்ளிப் போட்டாள் டெய்ஸி. கொஞ்ச நேரம் போக்கர், கொஞ்ச நேரம் ப்ளாக் ஜாக், கொஞ்ச நேரம் ரெளலட் சக்கரம். டெய்ஸிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஜெயித்த ப்ளாஸ்டிக் டோக்கன்களைக் கவுன்ட்டரில் கொட்டி, கிட்டத்தட்ட எட்டாயிரம் டாலர்களை மூட்டை கட்டினாள். போனால் போகிறதென்று எனக்கு ஒரு கோக் மட்டும் வாங்கிக் கொடுத்து விட்டு, ” தாங்க்ஸ் வெரி மச். லெட்ஸ் கோ? ” என்றாள்.
பிரமிப்பு தாளவில்லை. எனக்கு அதிர்ஷ்டம் எப்போது வேலை செய்யும் என்று துல்லியமாய்க் கணக்கிட்டு எவளோ ஒருத்தி பலனடைகிறாள். இந்த ஐந்து மணி நேரத்துக்கு சம்பளமாய் அவள் தந்த இருநூறு டாலர் என் பாக்கெட்டில் உறுத்தியது. ” நீ போய்ட்டு வா டெய்ஸி. நான் அப்புறமா பஸ் பிடிச்சு வந்துக்கிறேன். “
ஒரு ஜாக்பாட் அடித்து மில்லினேர் ஆகி விடுவேனோ என்ற நப்பாசைதான். என் கையிலிருந்த 200 டாலர் அடுத்த அரை மணி நேரத்துக்குக் கூட தாக்குப் பிடிக்கவில்லை. அத்தனை நேரம் பணமாய்க் கொட்டிய அத்தனை விளையாட்டுக்களும் முதலை மாதிரி பணத்தை விழுங்கிக் கொண்டன.
சை. அதிர்ஷ்டக்காரன் நானா இல்லை டெய்சியா? அடுத்த நாள் ஆபிஸ் போகிற வரை மூளைக்குள் வரமிளகாயைத் தேய்த்ததைப் போல எரிச்சல்.
ஆபிசில் சொன்னார்கள். ” அட்லான்ட்டிக் சிட்டியிலிருந்து திரும்பி வரப்போ ஒரு டிரக் பிரேக் ஃபெயிலியராகி கொலிஷன்ல அஞ்சு கார் அப்பளமா நொறுங்கிருச்சு. டெய்ஸி எமர்ஜென்சி வார்டில் இருக்கா.
- சத்யராஜ்குமார்
Saturday, May 15, 2004

