சத்யராஜ்குமார் பற்றி


சிறுகதை தொகுப்பு

குமுதம்

விகடன்

கல்கி

சாவி

துகள்கள்

 

என்னை எழுதியவர்கள்

மைய விலக்கு

கல்லறை ஆட்டம்

3D கதைகள்

 

இன்று

நியூஜெர்ஸியில் ஒரு இலக்கிய சந்திப்பு

12 ஜூலை 2009

காருக்குள் கலர் கலராய் வெளிச்சமடிக்க, ''டேய் கோபி, போலீஸ்டா!'' - செல்போனில் அலறினேன். நட்ட நடுநிசியில் 95 நெடுஞ்சாலையில் விர் விர்ரென பறக்கும் இத்தனை கார்களுக்கு நடுவில் - தட்டுத் தடுமாறி ஓட்டிச் செல்லும் நானா கிடைத்தேன்?

''பதறாதே. ஓரங்கட்டி நிறுத்து.'' என்று ஆலோசனை வழங்கினான் கோபி.

''இலக்கியம் வெங்காயமெல்லாம் வேண்டாம்ன்னு முதல்லயே சொன்னேன். கேட்டியா நீ?''

''அதை அப்புறம் பேசிக்கலாம். புலம்பாம காரை ஓரமா நிறுத்து. ஸ்டீரிங்கை விட்டு கையை எடுக்க வேணாம். காரை விட்டு இறங்காதே. அப்புறம் காப் பயந்து போய் உன்னை சுட்டாலும் சுட்டுருவான்.'' கோபி சொன்னதைக் கேட்டு எனக்கு உடம்பு எச்1என்1 ஜுரம் தாக்கிய மாதிரி வெடவெடவென்று நடுங்கியது.

நான் அமெரிக்கா வந்து ஆறு மாதம் கூட ஆகவில்லை. நாலு தடவை பெயிலாகி போன மாசம்தான் ஒரு வழியாய் கார் ஓட்ட லைசென்ஸ் வாங்கினேன். ஆபிஸிலிருந்து வீட்டுக்கு வரவும், வீட்டிலிருந்து ஆபிஸ் போகவும் மட்டுமே தெரியும். அதற்கு மேலே ஒரு பத்து கெஜம் போனாலும் தலை சுற்றி, கண்ணாமுழி திருகி, ஏழெட்டு பேராவது ஹார்ன் மழை பொழிய, ரோலர் கோஸ்ட்டரில் போய் வந்ததைப் போல் வயிறெல்லாம் கலங்கிப் போய் வீடு திரும்புவேன்.

அப்படிப்பட்ட என்னிடம், ''சனிக்கிழமை வேந்தன் நியூஜெர்ஸி வர்றாரு. ஒரு வாசகர் சந்திப்பு ஏற்பாடு பண்ணிருக்கோம். உன் ப்ரெண்ட்ஸை அழைச்சுட்டு வாடா.'' என்றான் கோபி.

''வேந்தனா? யாருடா அது?'' என்றேன்.

''பிரபல எழுத்தாளர் வேந்தனை பார்த்து யாருன்னு கேக்கறியே? கொழுப்பா?'' - போனிலேயே கர்ஜித்தான் கோபி.

''ஸாரிடா. நான் கதை புஸ்தகம் எல்லாம் படிக்கிறதில்லை. எனக்கு ராஜேஷ்குமாரையும், சுஜாதாவையும் தவிர வேற யாரையுமே தெரியாது. அவங்க கதையையும் நான் படிச்சதில்லை. போஸ்டர்ல பார்த்ததோட சரி. இவர் ரொம்ப பிரபலமோ?''

''இவர் நவீன இலக்கிய எழுத்தாளர்டா. ஹூம். நீ இந்த கூட்டத்துக்கு அவசியம் வரணும். அப்பதான் இலக்கியம்ன்னா என்ன, எழுத்தாளர்ன்னா யாருங்கிற அறிவெல்லாம் வளரும்.''

''எதுக்கு?'' என்று கேட்டதற்கு அவனிடமிருந்து பதில் வராததால், ''கோபி, வாசகர் சந்திப்புன்னு சொல்றே... நான் வாசகன் இல்லை. எழுத்துக் கூட்டி தமிழ் படிக்கிற ஆளு. இலக்கியத்துக்கும் எனக்கும் ரொம்ப தூரம்டா. ஆளை விடு.''

சட்டென கோபியின் டோன் மாறியது.

''என்னடா நம்ம மக்கள் எல்லாரும் ஒரே மாதிரி இருக்கீங்க? எவனைக் கேட்டாலும் தமிழ் எழுத்தாளரான்னு மோவாயை சொறியறிங்க? இந்த கூட்டத்துக்கு நான் பொறுப்பாளராகித் தொலைச்சுட்டேன். க்ரவுட் இல்லைன்னா வேந்தன் மனசொடிஞ்சுடுவார். ப்ளீஸ், உன் ப்ரெண்ட்ஸை கூட்டிட்டு வந்துருடா. இதை இலக்கிய சந்திப்புன்னெல்லாம் நினைக்க வேண்டாம். நீ இது வரைக்கும் அமெரிக்காவில் ரோட் ட்ரிப் போனதில்லையே? அஞ்சு மணி நேர கார்ப் பயணம் ஒரு சுகமான அனுபவம்.''

என்னுடைய ஹை வே போபியா பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லியும் அவன் விடவில்லை. நெடுஞ்சாலை 95-ஐ பிடித்தால் வந்து சேர்ந்து விடலாம். ஒரே ரோடுதான். வழி நெடுக போனில் துணைக்கு இருக்கிறேன். வந்துதான் ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றான்.

என்னுடன் வேலை பார்க்கும் தமிழர்களிடம் பேசிப் பார்த்தேன். நயன்தாரா என்றால் வருவேன் என்றார்கள். கதை படித்தால் என்ன கிடைக்கும், அஜாக்ஸ் படித்தால் அடுத்த வேலை கிடைக்கும் என்று திருப்பியடித்தார்கள்.

கோபியிடம் சொன்னதற்கு, ''நல்ல பாயிண்ட். வேந்தனிடம் இது மாதிரி கேடு கெட்ட இளைஞர்களை கவர அஜாக்ஸ் இலக்கியம் ஒண்ணு எழுதச் சொல்லணும்.'' என்றான்.

சனிக்கிழமை காலையில் மீட்டிங் என்பதால், வெள்ளிக்கிழமை இரவோடிரவாக பிரயாணித்து வந்து விடச் சொன்னான். அன்றைக்குப் பார்த்து ப்ரொடக்ஷன் பிரச்சனை வந்து மாட்ட, வீடு திரும்ப ஒன்பது மணியாகி விட்டது.

ஜி பி எஸ் யோகம் இன்னும் அடிக்காததால் மேப் க்வெஸ்ட்டில் டர்ன்-பை-டர்ன் அச்சடித்துக் கொண்டு புறப்படும்போது இரவு பத்து மணி. கோவை டு சென்னை தூரம். கிட்டத்தட்ட முன்னூத்தி சொச்சம் மைல்களை கடக்க ஐந்து மணி நேரங்கள் பிடிக்கும் என்று எழுதியிருந்தது.

என்னைப் போன்ற ஆமைகளுக்கு எட்டு மணி நேரம் ஆனாலும் ஆச்சரியமில்லை. நல்ல வேளை. ஸ்நோ, மழை போன்ற உபத்திரவங்கள் இல்லாத சூடான ஜூலை மாத இரவு. தண்ணீரும், ஜூஸும் செவென் லெவெனில் வாங்கி வைத்துக் கொண்டு, இண்டியன் ஸ்டோர்ஸ் எலுமிச்சம்பழத்தை டயருக்கடியில் நசுக்கி, கருப்பராயனை வேண்டிக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்து விட்டேன்.

என்ன புண்ணியம். 95-ஐ பிடித்த சில நாழிகளிலேயே இப்படி போலிசிடம் மாட்டிக் கொண்டேனே! டார்ச் அடித்தபடியே அருகில் வந்து கார் முழுவதையும் எக்ஸ்ரே கண்களால் ஊடுருவிய அந்த போலிஸ் அதிகாரி லைசென்ஸை வாங்கிப் பார்த்து விட்டு, ''ஹெட்லைட் ஹை பீம்ல இருக்கு. சட்டப்படி இந்த நெடுஞ்சாலையில் ஹை பீமில் ஓட்டக் கூடாது.'' என்றார்.

நான் பதறிப் போய் எல்லா சுவிட்சையும் அழுத்தினேன். என் தடுமாற்றம் பார்த்து, ஹை பீமை அணைக்க அவரே உதவினார். மஞ்சள் காகிதத்தில் எச்சரிக்கை நோட்டீஸ் மட்டும் தந்து விட்டுப் போனார்.

கோபி செல்போனில் சிரித்தான்.

''ப்ரெண்ட்லி வார்னிங்தானே? டிராபிக் டிக்கெட் வாங்கலையேன்னு சந்தோஷப்படு.'' என்றான்.

இடுப்பில் அங்கவஸ்திரம் சுற்றியதைப் போல துப்பாக்கிகளை தொங்க விட்டிருக்கும் ஆஜானுபாகுவான போலிஸை அருகில் பார்த்த படபடப்பு இன்னும் எனக்கு தீரவில்லை. ''நான் இப்படியே திரும்பி போயிடறேண்டா கோபி.'' என்றேன்.

''முட்டாள். கால்வாசி தூரம் கடந்தாச்சு. இன்னும் இருனூத்தம்பது மைல்தான். ரெண்டு சர்வீஸ் ஏரியா தாண்டியதும் மறுபடி கூப்பிடு. நான் ஒரு குட்டித் தூக்கம் போடறேன்.''

போனை வைத்து விட்டான். இருட்டுக்குள் இளையராஜா பாட்டை கேட்ட படி காரை செலுத்தினேன். டோல் கேட்டில் ஈஸி பாஸ் லேனில் தெரியாமல் நுழைந்து, பின்னால் தேங்கிய கார் ஓட்டுனர்களிடம் திட்டு வாங்கி, சர்வீஸ் ஏரியாவில் ஸ்டார் பக்ஸ் காபி குடித்து, அப்படியும் தூக்கம் கண்ணை சுழற்றவே இரண்டு ஓய்விடங்களில் பத்து நிமிஷம் கண்ணசந்து விட்டு காரைக் கிளப்பினேன். ஆக்ஸிலேட்டரை அழுத்தி அழுத்தி கால் நரம்புகள் வலித்தன. முதுகுத்தண்டு முடியும் இடத்தில் யாரோ ஊசி வைத்து குத்துவது போலிருந்தது.

கொட்டாவி விட்டுக் கொண்டே கண்ணை நன்றாக விழித்துப் பார்த்த போது, லேசாய் விடிவதற்கான அறிகுறி தெரிந்தது.

செல்போனில் கோபி. ''ஸாரிடா. நல்லா தூங்கிட்டேன். எங்க இருக்கே?''

''95-லதான்.''

''முப்பது மைல் வேகத்துல வந்திருந்தா கூட இன்னேரம் நீ வீடு வந்திருக்கணுமே? எக்சிட் நம்பரைப் பாரு. இல்லே ஊர் பேரை பார்த்து சொல்லு.''

''ராலே பத்து மைல்ன்னு போட்டிருக்கான்.''

நான் சொன்னதும் அவன் தூக்கி வாரிப் போட்டது போல் அலறினான். ''என்னது ராலேயா? 95- நார்த்தா சவுத்தா?''

''சவுத்.'' என்று பார்த்து நானும் சேர்ந்து அலறினேன். ''நார்த்லதான் இருந்தேன். எப்ப திசை மாறினேன்னு தெரியலைடா கோபி.''

''அடப்பாவி முன்னூறு மைல் வடக்கே வர்றதுக்கு பதிலா முன்னூறு மைல் தெற்கே போயிருக்கே! பத்து மணிக்கு இலக்கிய மீட்டிங்.''

என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, முணுமுணுத்தேன். ''எனக்கும் இலக்கியத்துக்கும் ரொம்ப தூரம்ன்னு முதல்லயே சொன்னேன் கேட்டியா?'' ■

-சத்யராஜ்குமார்
12 ஜூலை 2009