திரும்பிப் பார்த்தபோது, ஷங்கரின் முகத்திலும் அதே பயத்தை உணர முடிந்தது. இன்ஷ்யூரன்ஸ் கார்டைக் காட்டி விட்டு, மெதடிஸ்ட் ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வந்தோம்.
காருக்கு வந்து, ஜார்ஜ் டவுன் சாலையில் வழுக்கிச் செல்லும் போதும் இருவரும் அமைதியாகவே இருந்தோம். ஆனால் என்னுடைய மவுனமும், ஷங்கரின் மவுனமும் நிறைய பேசிக் கொண்டன.
” கடைசியில் அந்த நாள் வந்தே வந்துருச்சு ஷங்கர். “
” கலைக்கலாம் கலைக்கலாம்ன்னு நான் எத்தனை முறை சொல்லியிருப்பேன். “
” முதல் முதலா துளிர்த்திருக்கு. என் மனசு ஒத்துக்கலை. “
” அதுக்குள்ளே இது எதுக்கு? இன்னும் வாழ்க்கை எவ்வளவு இருக்கு. நிரந்தரமில்லாத சாஃப்ட்வேர் கான்ட்ராக்டர் பிழைப்பு. க்ரீன்கார்ட் வாங்கற வரைக்கும் இதெல்லாம் வேண்டாமேன்னுதான் சொன்னேன். “
” தள்ளிப் போ, தள்ளிப் போன்னு சொன்னப்ப இதையெல்லாம் யோசிச்சியா ஷங்கர்? வாழ்க்கைல எதுதான் நிரந்தரம் சொல்லு? “
” தத்துவமெல்லாம் பேசறதுக்கு நல்லாத்தான் இருக்கும். கடைசியில் கஷ்டப்படப் போறது நீதான். முதல் பிரச்சனை வேலையை விடணும். போன முறை ப்ராஜெக்ட் கிடைக்க நீ எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு யோசிச்சுப் பாரு. பிரசவம்ங்கறது அத்தனை சுலபமான விஷயமில்லை. தன்னந்தனியா இருக்கோம். இந்த கன்ட்ரில யார் நமக்கு உதவப் போறாங்க? “
” விசிட்டர் விசாவில் அம்மாவை கூப்பிட்டுப்போமே? “
” ஆர் யூ ஏ மேட்? பிரசவ செலவு எவ்வளவு ஆகும்ன்னு தெரியாது. அதுக்கப்புறம் உனக்கு திரும்ப எப்ப வேலை கிடைக்கும்ன்னும் தெரியாது. உன்னோட சம்பாத்தியம் எல்லாம் பெஞ்ச் பீரியட்ல தண்ணியா கரையும். இதில் ஃப்ளைட் டிக்கட்டுக்கு செலவு பண்ணி அம்மாவைக் கூட்டிட்டு வர்றதெல்லாம் நடக்கிற காரியமா? “
வழியில் சிவிஎஸ் ஃபார்மசி ட்ரைவ் த்ரூவில் ப்ரிஸ்க்ரிப்ஷன் காட்டி மருந்தும், டேக்கோ பெல்லில் சிக்கன் விங்ஸ், பரிட்டோவும் வாங்கிக் கொண்டோம். அபார்ட்மென்ட் வாசலில் காரை நிறுத்தும் போதுதான் நிசப்தத்தை உடைத்தான் ஷங்கர்.
” லீவு குடுப்பாங்களா? “
” மொத்தமா குடுப்பாங்க. ஷங்கர், குழந்தை வேற வந்துருச்சுன்னா செலவெல்லாம் எகிறும். நீ இப்ப ஏதாவது ஒரு வேலைக்குப் போயே ஆகணும். “
” உன்னோட டிப்பண்டன்ட்டா வந்திருக்கேன். சட்டப்படி நான் வேலைக்குப் போக முடியாதே. அதானே பல்லைக் கடிச்சிட்டு வீட்டில் உக்காந்திருக்கேன். “
” மறுபடி நான் சம்பாதிக்கிற வரைக்கும் கவுரவம் பார்க்காம பில்லிங் வேலைக்கோ, ரெஸ்ட்டரன்ட் வேலைக்கோ நீ போய்த்தான் ஆகணும். பே ரோல்ல போடாம கைல காசு குடுத்துருவாங்க. மசாலா க்ரில் ஸோகைல் பாயோட ஸ்ரீதருக்கு நல்ல பழக்கம் இருக்கு. இப்ப சொன்னா நாளைக்கே அங்க வேலை வாங்கித் தருவார். என்ன யோசிக்கறே ஷங்கர்? இதிலே யோசிக்க ஒண்ணுமே இல்லை. “
வளைகாப்பு சீமந்தம் இல்லாமல், ஒரு நாள் கூட திருஷ்டி கழித்து முச்சந்தியில் வீசியெறியாமல் எனக்குக் குழந்தை பிறந்தே விட்டது. ரோஜாப்பூ மாதிரி அசைகிறதே அது ஷங்கர் ஜாடையா, என் ஜாடையா என்று கேட்பதற்கெல்லாம் யாருமில்லை.
ஷங்கரின் முகத்தில் ஏனோ களையே இல்லை. குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி இன்னும் பார்க்கவே இல்லை. மசாலா க்ரில் வேலை பிடிக்கலை என்று வார்த்தைக்கு வார்த்தை புலம்புவதைத் தவிர அவன் வேறெதையும் பேசுவதில்லை.
என்ன செய்ய? இது இன்னும் கொஞ்சமே கொஞ்சம் பெரிசாக வேண்டும். டே கேர் சென்ட்டரில் விடும் அளவுக்கு ஆன பின் எப்படியாவது அடித்துப் பிடித்து ஒரு ப்ராஜெக்ட் வாங்கி… இல்லை. அதெல்லாம் நடக்கவில்லை.
எண்ணி அறுபதாவது நாள், ” நான் வேலையை விட்டுட்டேன். ” என்றான் ஷங்கர். ” எம்பிஏ படிச்சிட்டு கல்லாவில் பில் போடறதே ஒரு கேவலமான பிழைப்பு. கூட்டமில்லாதப்ப பாய் என்னை உள்ளே போய் மட்டன் வெட்டித் தரச் சொல்றார். என்னால இதெல்லாம் முடியாது. “
நான் கவலையோடு, ” ஷங்கர்? ” என்றேன்.
” டோன்ட் வொர்ரி. திடுதிப்ன்னு வேலையை விடற அளவுக்கு நான் அவ்வளவு பொறுப்பில்லாதவனா? இன்னொரு ஏற்பாடு பண்ணிட்டேன். அல்லையன்ஸ் யுஎஸ்ஏ ப்ராஜெக்ட் மேனேஜர் ரெஸ்ட்டரென்ட்டுக்கு ரெகுலர் கஸ்டமர். அவரோட ப்ராஜெக்ட்ல டாட் நெட்டுக்கு ஆள் வேணுமாம். நான் உன்னோட ஸ்கில் செட் பத்தி அவர் கிட்டே சொல்லியிருக்கேன். “
அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தேன். ” ஷங்கர், குழந்தைக்கு ரெண்டு மாசம்தான் ஆகிறது. உன்னாலே பார்த்துக்க முடியாது. டே கேர்ல மாசத்துக்கு ஆயிரத்தி ஐநூறு டாலர் கொட்டற அளவுக்கு நமக்கு வசதியும் இல்லை. “
ஷங்கர் ரொம்ப நாளைக்கப்புறம் சிரித்தான். ” அதையெல்லாம் நான் யோசிக்காம இருப்பேனா? பத்தாம் தேதி ஸ்ரீதர் குடும்பம் ஊருக்குப் போறாங்க. குழந்தையைக் குடுத்து விட்டுருவோம். இந்தியாவில் உன்னோட அம்மா கிட்டே வளரட்டும். “
ஏர்போர்ட்டிலிருந்து திரும்பி வந்தோம். இன்னமும் எனக்கு நெஞ்சமேல்லாம் விம்மிக் கொண்டே இருந்தது. குழந்தை சத்தமின்றி அபார்ட்மென்ட் அதி நிசப்தமாயிருக்க, எல்லாவற்றையும் மொத்தமாய் இழந்து விட்ட உணர்வு.
ஷங்கர் மட்டும் உற்சாகமாய் விசிலடித்துக் கொண்டிருந்தான். ப்ரிட்ஜைத் திறந்து ஒரு பெக் ரம்மை ஊற்றிக் கொண்டு, ” எத்தனை நாளாச்சு. இன்னிக்கு செம மூடில் இருக்கேன். ” என்னை சோபாவில் தள்ளி மேலே விழுந்தான்.
- சத்யராஜ்குமார்
Wednesday, September 01, 2004

