மகள் லிசியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு என்னையும் அழைத்திருந்தாள். கிறிஸ்டி கல்யாணமானவள் என்றால் நம்புவது கஷ்டம். தினமும் அரை மணி நேரம் ஒர்க்அவுட் பண்ணி உடம்பை சிக்கென்று வைத்திருந்தாள். பொறுக்கியெடுத்து அவள் அணியும் உடைகளை வேறு எந்தப் பெண் உடுத்தினாலும் அது ஆபாசம் போலாகி விடும். இதை நான் அவளிடமே சொல்லியிருக்கிறேன். ட்யூப்லைட் போட்டதைப் போலப் பளீரென்று சிரித்தாள்.
” கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் இடையில் மெல்லிசா ஒரு கோடு இருக்கு. அதைப் புரிஞ்சிக்கலைன்னா அசிங்கமாயிடும். “
” கிறிஸ்டி, நீ ஹாலிவுட்டுக்கு முயற்சி பண்ணினா ஒரு ஜென் லோ மாதிரி, ஒரு ப்ரிட்டினி ஸ்பியர்ஸ் மாதிரி மொத்த உலகத்தையும் கிறங்கடிச்சிருவே. “
இப்படி நான் சொன்னதும் – அவள் முகம் வாடிப் போகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ” காலேஜ் முடிக்கிற வரைக்கும் என்னோட லைப் டைம் டார்கெட்டே அதுவாத்தான் இருந்தது. எல்லா வழியிலும் முட்டி மோதிப் பார்த்துட்டேன். ப்ச். நாலு ஏஜன்ட்டோட படுத்ததுதான் மிச்சம். எனக்கு அந்த யோகம் இல்லே. ” முதல் முதலாய் அவளை சோகமாய்ப் பார்த்தது அப்போதுதான். கொஞ்ச விநாடிகள்தான். அதற்கப்புறம் மறுபடி கலகலப்பாகி விட்டாள். அதுதான் கிறிஸ்டி. ” இப்போ நான் டிவி மீடியாவில் ட்ரை பண்ணிட்டிருக்கேன். ஒரு டிவி ப்ரொட்யூசர் ஜோக் சொல்றேன் கேளு. ஒரு மெகா சீரியல் எடுக்கிற ப்ரொட்யூசர் இருந்தார்… “
அவள் ஒரு விவகாரமான பெண். எதற்கெடுத்தாலும் உதாரணத்துக்கு ஒரு ஜோக் சொல்வாள். அது பெரும்பாலும் ‘அந்த’ மாதிரித்தான் இருக்கும். ” கிறிஸ்டி, நாம காபி சாப்பிடப் போறப்ப இந்த ஜோக்கை சொல்லு. இப்ப ஆபிஸ்ல வேணாம். ” நான் நழுவிக் கொண்டேன்.
அவள் குறும்பாகச் சிரித்து என் கன்னத்தில் தட்டினாள். ” ஓக்கே, மறக்காம பர்த்டே பார்ட்டிக்கு வந்துரு. “
” இந்த வருஷமும் அதே மாதிரி பார்ட்டிதானா? “
” பின்னே ? நல்லா என்ஜாய் பண்ணலாம் வா. “
போன வருஷம் பர்த்டே பார்ட்டிக்குப் போயிருந்தேன். மகளின் பிறந்த நாள் என்பது சும்மா ஒரு சாக்குத்தான் என்பது அங்கே போன பின்புதான் எனக்குப் புரிந்தது. கேக் வெட்டி முடித்த பின்பு பரிசுப் பொருட்களோடு அவள் மகளையும் வந்திருந்த பொடிசுகளையும் பொம்மைகள் நிறைந்த ஒரு அறைக்குள் அனுப்பி விட்டு, மற்றொரு பக்கம் இவர்கள் அடித்த கூத்து. மது, டான்ஸ், கொஞ்சல்கள், முத்தங்கள், உரசல்கள்.
கட்டாயம் போகத்தான் வேண்டுமா என்று யோசித்தேன். கிறிஸ்டி கோபித்துக் கொள்வாள். அப்புறம் டைம் ஷீட்டில் கையெழுத்துப் போட பிகு பண்ணிக் கொள்வாள். சாயந்தரம் அங்கே ஆஜராகி விட்டேன். மகளுக்குப் பிறந்த நாளா, இல்லை கிறிஸ்டிக்கா என்று சந்தேகம் வரும்படி மாய்ந்து மாய்ந்து தன்னை அழகுபடுத்திக் கொண்டிருந்தாள் கிறிஸ்டி. பிறந்த நாள் கேக்கின் மேல் சொருகியிருந்த நியூமரிக் மெழுகுவர்த்தியைப் பார்த்து நான் துணுக்குற்றேன். ஒன்பது என்ற எண் சொருகப்பட்டிருந்தது. இவள் ஆட்டம் பாட்டம் போடத்தான் பார்ட்டி என்பது உண்மைதான். அதற்காக மகளின் பிறந்த நாள் கணக்கில் கூடவா இத்தனை அலட்சியம் ? கிறிஸ்டியை ஓரமாய்க் கூப்பிட்டேன்.
பரபரப்புக்கிடையில் என்னிடம் ஒதுங்கி வந்தவள், ” என்ன? ” என்றாள்.
” இங்க ஒரு பெரிய தப்பு நடந்திருக்கு கிறிஸ்டி. “
” என்ன தப்பு? “
” போன வருஷம் உன் மகளுக்கு ஏழாவது பிறந்த நாள் கொண்டாடினே. இப்ப அவளுக்கு எட்டு வயசுதானே ஆகிறது? பர்த்டே கேக் மேல 9-ன்னு கேண்டில் சொருகி வெச்சிருக்கு. “
கிறிஸ்டி அதிர அதிர சிரித்தாள். ” அது என்னோட பழைய கணவரோட மகள். அவரை டைவர்ஸ் பண்ணிட்டேன். இது வேற பொண்ணு. அதோ நிக்கறாறே என்னோட புதுக் கணவர், அவரோட பொண்ணு. அவர் ஒரு டிவி ஏஜன்ட். இங்கே நிறைய டிவி ப்ரொட்யூசர்ஸ் வந்திருக்காங்க. யு நோ வாட்? அழகு கெட்டுப் போயிடும்ன்னு இது வரைக்கும் நான் குழந்தையே பெத்துக்கிட்டதில்லை. ஓக்கே, நாம அப்புறமா பேசலாம். ” ஓடிப் போய் யாரோ ஒரு தயாரிப்பாளனை ஆரத் தழுவி முத்தம் கொடுத்து, ” வார்ம் வெல்கம். ” என்று வரவேற்றாள்.
அவளுடைய ஒன்பது வயதுப் புதுக் குழந்தை கேக்கை வெட்டும் ஆவலோடு கத்தியும் கையுமாய் தேமே என்று நின்றிருந்தது.
- சத்யராஜ்குமார்
Sunday, May 09, 2004

