Sathyarajkumar

Sathyarajkumar-சத்யராஜ்குமார்

Close

சிங்கம்டா!

தமிழோவியம்.காம்-ல் வெளியான கட்டுரை

ஒரு காதலியைப் போல வாஞ்சையாய்த் தடவுவதும், ஆசையாய்க் கிள்ளுவதும், செல்லமாய் ஒரு தட்டு தட்டுவதும் ஐபோனில் ஆரம்பித்தது. முத்தம் கொடுப்பதும், கண்ணடிப்பதும்தான் பாக்கி. 

தடவினால் திரை நகரும். கிள்ளினால் படம் சிறிதாகும். ஐகானைத் தட்டினால் அப்ளிகேஷன் உயிர் பெறும்.

ஆப்பிள் அறிமுகப்படுத்திய Gesture UI என்ற புரட்சி, தொடு திரை செல்போன்களின் புதிய யுகம் ஒன்றை ஆரம்பித்து வைத்தது. அது காறும் இருந்த விண்டோஸ் தொடுதிரை போன்களும், ஸ்டைலஸ் கொண்டு மாரடித்து வந்த இன்ன பிற PDA-க்களும் இருந்த இடம் காணாமல் தொலைந்தன. கையசைத்து நடத்தும் சைகை பரிபாஷைகள் போன்களுக்குப் புரிய ஆரம்பித்தன.

பெரிய எழுத்து சித்ர புத்ர நாயனார் கதை படித்து வந்த பாட்டிகள் கூட ஐபோன் பிரவுசரில் கையைத் தடவி எழுத்துருவைப் பெரிதாக்கி இண்ட்டர்னெட் மேய ஆரம்பித்தார்கள். மழலை பேசும் குழந்தைகள் அதில் அ ஆ இ ஈ அல்லது A B C D ஒலி ஒளியுடன் கற்றார்கள். 

ஐபோனின் மிகப் பெரிய வெற்றி ரகசியம் அதன் எளிமையான திரை பொருள் வடிவமைப்பு. சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்பது போல அதை இயக்க எந்த செயல் விளக்கப் புத்தகமும் தேவையில்லை. 

ஐபோன் வாங்கியவர்களில் கணிசமானவர்கள் அதன் கவர்ச்சிகரமான இயங்கு முறையால் கவரப்பட்டு காலம் காலமாய் குலாவி வந்த விண்டோஸை விவாகரத்து செய்தார்கள். சட்டென  மேக் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்புக்கு மாறினார்கள். 

அடிப்படையில் ஐபோன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மேக் இயங்கு தளத்தின் ஒரு விள்ளல்தான். மேக்கிற்கு மாறியவர்கள் எங்கே என்ன இருக்கிறதென திக்குத் தெரியாமல் முதலில் அதை இயக்கத் திணறி, சற்றே வெறுப்படைந்தாலும் – தமிழ் சினிமாவில் மோதலுக்குப் பின் காதல் போல – கூடிய சீக்கிரம் அதன் கலையழகில் கிறங்கிப் போனார்கள். 

அப்புறம் மேக் இல்லாமல் நானில்லை என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு ஐபோனுக்கும் லேப்டாப்புக்கும் இடைப்பட்ட ஏதோ ஒன்றுக்கான ஏக்கம் தானாகவே உருவாகியது. இதுதான் தருணம் என்று பலகைக் கணினியான ஐ பேட் கருவியை ஆப்பிள் அறிமுகப்படுத்தியது. விண்டோஸ், ஹெச் பி போன்றவர்கள் கையைச் சுட்டுக் கொண்ட டேப்ளெட் மார்க்கெட்டை வெண்ணெயை அள்ளி வாயில் போடுவது போல ஆப்பிள் எடுத்துப் போட்டுக் கொண்டது. 

ஐபேட் ஒரு பெரிய சைஸ் ஐபோன், அதே சமயம் சின்ன சைஸ் மேக். மேக்கில் மட்டுமே இயங்கி வந்த பல மென்பொருள்கள் ஐபேடில் இயங்கின. ஐபோனுக்காக உருவாக்கப்பட்ட அனைத்து மென்பொருள்களும் ஐபேடிலும் இயங்கின. இந்த வருட இறுதிக்குள் இருபத்தெட்டு மில்லியன் ஐபேட்கள் விற்றுத் தீரும் என்று கணிப்புகள் சொல்கின்றன. ஐபோனில் நுழைந்தவர்களை மேக், ஐபேட் என்று சுழல் போல இழுத்துக் கபளீகரம் செய்து கொள்கிறது ஆப்பிள்.  இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பது இதுதானா?

கதை இத்தோடு நிற்கவில்லை. 

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன தடவுவதும், கிள்ளுவதும், தட்டுவதுமே இத்தனை பெரிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது என்ற வெற்றி ரகசியத்தை அறிந்திருக்கும் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன், ஐபேடில் கிடைக்கும் அதே மகோன்னத அனுபவம் லேப் டாப் அல்லது டெஸ்க்டாப்பிலும் கிடைக்கும் பட்சத்திலேதான் ஏற்கெனவே மயங்கிக் கிடக்கும் கோடானு கோடி மக்களை அதே கிறக்கத்தில் நீட்டித்து வைத்திருக்க முடியும் என்பதை உணர்ந்து சென்ற வருடம் மேஜிக் ட்ரேக் பேட் என்ற சாதனத்தை டெஸ்க்டாப்களுக்கு அறிமுகப்படுத்தியது.

இது ஐபோன் திரை போலவே செயல்படும். அதாவது தடவினால், கிள்ளினால் கிளுகிளுப்படைந்து இது வேலை செய்யும்.  எப்படி போன் அல்லது PDA-க்களில் ஆப்பிள் ஸ்டைலஸைக் கொன்றதோ அது போல கொஞ்சம் கொஞ்சமாய் மவுஸ் எனும் சாதனத்தை இந்த ட்ரேக் பேட்  கொன்று விடும் வாய்ப்புள்ளது. 

இரு விரல்களால் தடவினால் ஓர் அர்த்தம், மூன்று விரல்களால் தடவினால் இன்னோர் அர்த்தம். மேலிருந்து கீழே தடவினால் ஓர் அர்த்தம். கீழிருந்து மேலே தடவினால் வேறோர் அர்த்தம். இதன் மேஜிக்கைப் பற்றி மேலும் அறிய இங்கே சென்று பார்க்கலாம்.  

இத்தனைக்கும் உச்சமாக சின்ன வீட்டுக் கவர்ச்சியில் பெரிய வீடு சின்னாபின்னமாவது போல் போன வாரம் மேக் இயங்கு தளம் ஐபோன் இயங்கு தளத்தைப் போன்ற அவதாரத்தை எடுத்துப் பூசிக் கொண்டது. Lion என்ற மேக்கின் புத்தம் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம். 

ட்ரேக் பேடைத் தடவினால் திரை நகரும். கிள்ளினால் படம் சிறிதாகும். ஐகானைத் தட்டினால் அப்ளிகேஷன் உயிர் பெறும். இப்போது மேக் டெஸ்க்டாப்பின் இடைமுகம் ஐபோன் அல்லது ஐபேட் போலவே மாறிவிட்டது.

ஐபோன், ஐபேட், மேக் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் என நீங்கள் எதைத் தொட்டாலும் இனி மேல் உங்களுக்கு கிடைப்பது ஒரே மாதிரி அனுபவம்தான். ஒன்றைக் கையாளத் தெரிந்தால் போதும், இன்னொன்றைக் கையாள்வதில் எந்தக் குழப்பமும் இனியில்லை. 

தனது கவர்ச்சி ரகசியம் எது எனப் புரிந்து அதைக் காட்டி மயக்கி வைத்து விட்ட ஜாலக்காரி மாய மோகினி ஆப்பிள். இந்த மயக்கத்தைப் போக்க இன்னொரு ஆரஞ்சு வருமா? ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற சிங்கம் இருக்கும் வரை அது நடக்காது.

♦♦♦♦

Copyright ©சத்யராஜ்குமார். கருத்துக்களை அனுப்ப srk.writes@gmail.com