சத்யராஜ்குமார்
எழுதியவை
சத்யராஜ்குமார் பற்றி


சிறுகதை தொகுப்பு

குமுதம்

விகடன்

கல்கி

சாவி

துகள்கள்

 

என்னை எழுதியவர்கள்

மைய விலக்கு

கல்லறை ஆட்டம்

3D கதைகள்

 

இன்று

 
எக்ஸானந்தா

1 ஆகஸ்ட் 2009

ரூம் மேட் பலராமனால் வந்த வினை. சுவாமி எக்ஸானந்தாவின் அதி தீவிர பக்தன். ஆபிஸ் கம்ப்யூட்டரில் ஒரு ஃபார் லூப் எழுதுவது கூட அவரின் மகிமையால்தான் என்று பலமாக நம்பிக் கொண்டிருக்கிறான். டெஸ்க்டாப்பிலிருந்து, பர்சுக்குள் வரை அவனிடம் அவர் திருவுருவப் படம்.

எக்ஸானந்தா பக்தர்களுக்கு அருள் பாலிக்க அமெரிக்கா வரும்போதெல்லாம் பலராமன் பிசி ஆகி விடுவான். போஸ்டர் ஒட்டுவதிலிருந்து சுவாமிகளும், அவர் அடிபொடிகளும் தங்க இடம் பார்ப்பது வரை பம்பரமாய் சுழல்வான்.

அப்போதெல்லாம், ''வா திருச்சேவை செய்யலாம்.'' என்று என்னை அழைத்திருக்கிறான்.

போன வருஷம் என்றால் திமிராக பேசியிருப்பேன்.

''போடா புண்ணாக்கு. அந்த ஆள் உன்னையும், என்னையும் போல ரெண்டு கை ரெண்டு கால் அஞ்சு விரல் உள்ள ஒரு பிறவிதான். காவி டிரஸ் போட்டதும் ஒளி வட்டம் சுத்த ஆரம்பிச்சிடுமா? உன்னை மாதிரி பத்து பேரால இப்ப நாட்டுல லட்சம் சாமியார். காசி, ராமேஸ்வரம்ன்னு திரிஞ்சிட்டிருந்தவன்களை அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா வரைக்கும் நடமாட வெச்சிட்டிங்களே!'' என்று எகத்தாளம் பேசி, பாப்கார்ன் கொறித்துக் கொண்டே கவுச்சில் கவிழ்ந்து ரியாலிட்டி டிவி பார்த்திருப்பேன்.

நான் வளர்ந்த பாசறை அப்படி.

சைட் அடிக்கக் கூட கோயில் பக்கம் ஒதுங்காதவன். கிட்டத்தட்ட அது மாதிரி பையன்கள் பலரும் இங்கே வந்த பின், சனிக்கிழமை சுவாமி நாராயணா பூஜை, செவ்வாய்க்கிழமை அனுமார் விரதம், வியாழக்கிழமை லலிதா சகஸ்ரநாமம் என சட்டென்று பக்திப் பழங்கள் ஆகி விடும் மர்மம் புரியாமல் தவித்திருக்கிறேன்..

ஆறு மாச வேலையில்லாத் திண்டாட்டத்தில் என் கொள்கைகள், சித்தாந்தங்கள் எல்லாம் கத்தரிக்காய்ப் பச்சடி ஆகி விட்டன. நியூயார்க், நியூஜெர்சி பகுதி தவிர வேறெங்கும் வேலை பார்க்க மாட்டேன் என்ற பிடிவாதம் வலுவிழந்தது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து, மேற்கு கடற்கரை வரை எங்கே வேண்டுமானாலும் போகத் தயார் என்று என்னைக் கடை விரித்தும் கொள்வாரில்லை.

இது மாதிரி பலவீன தருணத்தில் யாராவது கழுதைக்கு கால் கழுவிவிடச் சொன்னாலும் மறுபேச்சுப் பேசப்போவதில்லை. சுவாமி ஸ்ரீ ஸ்ரீ எக்ஸானந்தா அதை விட மேலான அவதாரம்.

''இன்ட்டர்வியூ கால் வரும் பலராமா!'' என்று சால்ஜாப்பு சொல்லி தப்பிக்கப் பார்த்தேன்.

காச் மூச்சென்று திட்டித் தீர்த்து விட்டான். ''ஆறு மாசமா வராத கால் இப்ப சுவாமிகளுக்கு சேவை செய்யற ரெண்டு நாளில் வந்துடுமா? ஒரு உண்மையை தெரிஞ்சிக்கோ. நீ வேலை இல்லாம திண்டாடறதுக்கு காரணம் ரிசெஷன் இல்லை. இத்தனை நாளா திமிரோட பேசின பாவத்துக்குக் கிடைச்ச பலன்.''

இதற்கு என்னிடம் இப்போது பகுத்தறிவு பதில் இல்லை. இதே ரிசெஷனில் அவன் படு ஸ்ட்ராங்கான ஒரு வேலையில் இருக்கிறான். அவன் டீமில் ஒரு வேலை காலியாகப் போவதாக வேறு சொல்லியிருக்கிறான். எக்ஸானந்தாவை ஏதாவது சொல்லப் போக, கோபித்துக் கொண்டு அந்த வேலைக்கு சிபாரிசு செய்யாமல் போனாலும் போய் விடுவான்.

இப்போதைக்கு எக்ஸானந்தாவை நம்பி விடுவதுதான் சரியான பகுத்தறிவுப் பாதை. தவிர கடவுள் நம்பிக்கைதானே எனக்கு இல்லை. எக்ஸானந்தா மேல் மனித நம்பிக்கை வைத்தால் என்ன தப்பு? வாயைத் திறக்காத சாமி சிலைகளை விட எக்ஸானந்தா ஒரு படி மேல்தான். இப்படியெல்லாம் என் தடம் புரளலுக்கு சமாதானம் செய்து கொண்டேன்.

''நான் திருந்திட்டேன். என்னை மன்னிச்சிரு பலராமா.'' என்று 1960 வசனம் பேசி அவன் கோபத்தை ஆற்றி விட்டு லேசான ஆற்றாமையோடு புலம்பினேன். ''ஆறு மாசம் ஆறு நிமிஷம் மாதிரி ஓடிப் போயிருச்சுடா. பேங்க் பாலன்ஸ் தரை தட்டப் போகுது. இதுக்கு மேல என்னால தாக்குப் பிடிக்க முடியாது. இன்னும் ரெண்டு வாரத்தில் ஒரு ஜாப் மாட்டலைன்னா பெட்டியை கட்டிட்டு இந்தியாவுக்கு திரும்பிப் போக வேண்டியதுதான்.''

''ஒண்ணும் கவலைப்படாதே. சுவாமியோட ரெண்டு நாள் இருக்கப் போறோமில்லையா! நிச்சயமா அவர் ஏதாவது அருள்வாக்கு தருவார். கண்டிப்பா உனக்கு ஒரு வழி கிடைக்கும்.''

அப்படி ஏதாவது அற்புதம் நடப்பதுதான் மிச்சமிருக்கும் கடைசி சந்தர்ப்பம் என்று எனக்கும் தோன்றியது. யார் கண்டது எக்ஸானந்தா மாதிரி கார்ப்பொரேட் சுவாமிகளின் காலில் பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் மாதிரி கார்ப்பரேட் முதலைகள் வந்து விழுந்தாலும் வியப்பதற்கில்லை.

''ஸ்டீவ், இது நம்ம பையன்தான். ஆப்பிள்ல ஒரு வேலை போட்டுக் குடு.'' என்று எக்ஸானந்தா ஒரு கட்டளை போட்டாலும் போடலாம்.

கற்பனை ஒரு பக்கம் தாறுமாறாய் விரிந்தாலும், இன்னோரு பக்கம் இனம் புரியாத பயமும் புகை மாதிரி பரவியது. எக்ஸானந்தாவிடம் இருப்பதாக பலராமன் சொல்லும் அசாத்திய திருஷ்டிதான் பயத்துக்கு காரணம்.

பலராமனை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தாலே அவன் கூட இருப்பவர்களைப் பற்றி டாப் டு பாட்டம் சொல்லி விடுவாராம். நான் சகட்டுமேனிக்கு அவரைத் திட்டியதெல்லாம் தெரியுமோ?

அவர் வருகை குறித்து இந்தியன் ஸ்டோர்சில் போஸ்டர் ஒட்டப் போகும்போதும், மெட்ரோ ரயில் நிலைய வாசலில் நின்று ஃப்ளையர் விநியோகம் செய்யும்போதும் அந்த பயம் மனசுக்குள் ஈஷியபடி இருந்தது.

அப்படி ஏதாவது திருஷ்டியால் பார்த்து சொல்லுவாரென்றால் தடாலென்று காலில் விழ வேண்டியதுதான். சோத்துக்கு சிங்கியடிக்கும்போது பகுத்தறிவாவது வெங்காயமாவது!

எப்படியும் அவரிடம் அருள்வாக்கு பெற்று விட வேண்டும்.

பத்தாம் தேதி பலராமனின் SUV-யை எடுத்துக் கொண்டு நியூவார்க் ஏர்போர்ட்டுக்குப் போனோம். நினைத்ததை விட சற்று இளமையாகத்தான் இருந்தார் எக்ஸானந்தா. பளீரென்று காவி அங்கி. கருகருவென்று தோள் வரை புரளும் தலை முடி. நெஞ்சு வரை வழியும் தாடி. நீள் செவ்வக மூக்குக் கண்ணாடி.

ருத்திராட்சக் கொட்டையும், பிளாஸ்டிக் மாலையுமணிந்து அவர் பின்னாலேயே இரண்டு வெள்ளைக்கார சிஷ்யைகள். எப்படி மடக்கிப் போட்டார்? நானும், ஹூட்டர்ஸ், டிஜிஐ என்று இடம் பாக்கியில்லாமல் அலைந்ததுதான் மிச்சம். பூச்சி சைசில் இருக்கும் இந்தோனேஷிய யுவதிகள் கூட என்னை ஒற்றை செல் அமீபா போல அலட்சியமாய்த்தான் பார்க்கிறார்கள்.

அய்யோ, அய்யோ. மானசீகமாய் ணங் ணங்கென்று என் தலையில் நானே குட்டிக் கொண்டேன். இந்த மாதிரி நான் யோசிப்பது எக்ஸானந்தாவின் ஞானக் காதுகளில் விழுந்து தொலைத்து விடப் போகிறது.

முகத்தில் வழியும் மெல்லிய புன்னகையோடு எக்ஸானந்தா என்னையே பார்த்தார். அவர் கேட்கும் முன் பலராமன் முந்திக்கொண்டான்.

''சுவாமிஜி, இவன் என் ரூம்மேட். இப்பதான் இவனுக்கு உங்க மேல ஈர்ப்பு வந்திருக்கு. பாவம் ஆறு மாசமா வேலை இல்லாம இருக்கான்.''

''தெரியும்.'' என்றார் லேசாக சிரித்தபடி. அது எனக்கு மர்மப் புன்னகை போல பட்டது.

சிஷ்யகோடிகளையும் அவரையும் ஹாம்ப்ட்டன் இன்ன் ஹோட்டலில் ஓய்வெடுக்க விட்டு விட்டு, அடுத்த நாள் நியூ ப்ரன்ஸ்விக் கம்யூனிட்டி ஹாலுக்கு அழைத்துப் போனோம். ஆங்கிலத்தில் அரை மணி நேரம் ஆன்மீக சொற்பொழிவு. மடை திறந்த வெள்ளம் போல் பெருக்கெடுத்த அமெரிக்க ஆக்சென்ட் கேட்டு ஆடிப் போய் விட்டேன். R-ஐ எப்படியெல்லாமோ குழைத்துப் போட்டாலும் எனக்கு சிக்க மாட்டேனென்கிறது. சந்தேகமில்லாமல் சாமியார்களுக்கு அபூர்வ சக்திகள் இருக்கின்றன என்று என் நாத்திக மனசு ஒப்புக் கொண்டு விட்டது.

ஏராளமான கூட்டம். நாள பூராவும் பூஜை, பஜனை. மந்தை மந்தையாய் வந்து அவர் காலில் விழுந்தார்கள். ஆண் பெண் பேதமின்றி எல்லாரையும் இறுக்கிக் கட்டிப் பிடித்து ஆசிர்வாதம் பண்ணினார் எக்ஸானந்தா.

அவருடைய அருள்வாக்கு பூடகமாய் இருக்கும் என்று பலராமன் சொல்லி இருந்ததால் நான் ஒன் பாத்ரூம் கூட போகாமல், காதைத் தீட்டிக் கொண்டு முடிந்த வரை அவர் கூடவே இருந்தேன்.

காணிக்கையாய் கொட்டிய டாலர்களையும், செக்குகளையும் முறைப்படுத்தி அடுக்க சிஷ்யகோடிகளுக்கு உதவினேன். அன்றைக்கு ராத்திரி வரைக்கும் அவர் என்னிடம் எதுவும் சொல்லவேயில்லை.

அடுத்த நாள் வாஷிங்டன் டிசியில் பக்தர்கள் கேம்ப்.

''நானும் வரேண்டா பலராமா!'' அருள்வாக்கு கிடைக்கும் வரை அமெரிக்காவில் அவர் பின்னால் அலைந்தே தீர்வதென்று முடிவு செய்தேன்.

டிசி போகிற வழியில் அந்த ஃபுட் எக்சிட் பார்த்ததும், ''காரை அங்கே விடுங்க.'' என்றார் எக்ஸானந்தா. சிக்னல் விளக்கில் இடது கைப்பக்கம் திரும்பச் சொன்னார். பலராமன் குழப்பமாய் அவர் சொன்ன திசையில் காரை ஓட்டிச் சென்றான்.

ரிவர் விண்ட் அபார்ட்மென்ட்ஸ் என்ற பெயரில் அடுக்கு வீடுகள் இருந்த பகுதியை அடைந்தோம். காரை விட்டிறங்கி அங்கே பிரம்மாண்டமாய் கிளை பரப்பி விரிந்திருந்த மேப்பிள் மரத்தினடியில் போய் நின்றார் எக்ஸானந்தா.

சிஷ்ய கோடிகளும், நாங்களும் அவர் பின்னாலேயே போனோம். அண்ணாந்து பார்த்து கண்ணை மூடி நின்றார். ஆழமாய் மூச்சிழுத்து மேப்பிள் மரக்காற்றை அனுபவித்த எக்ஸானந்தா, லேசாக முணுமுணுத்தது எனக்கு மட்டும் கேட்டது

''போன முறை ரிசெஷன்ல இந்த ஊர்லதான் கடைசியா வேலை பார்த்தேன். இந்த மேப்பிள் மரத்தடியில்தான் எனக்கு ஞானம் கிடைச்சது.''

எனக்கும்தான்.■

-சத்யராஜ்குமார்
1 ஆகஸ்ட் 2009


தொடர்புடைய பதிவு: இன்று - Today >> எக்ஸானந்தா