டிவியில் அலாரம் வைத்து இன்று காலை துயிலெழுந்தேன். கூகிள் டிவி.
கிட்டத்தட்ட ஒரு வருட தவம். ஒரு வழியாய் ஹனிகோம்ப் 3.1 வந்து சேர்ந்தது.
ஏகப்பட்ட வாக்குறுதிகளோடு ஸோனி தயாரித்து, இண்ட்டல் சிப்பில் ஆண்ராய்ட் இயங்குதளத்தை அடக்கி வைத்து அமர்க்களமாக கடந்த ஆண்டு வெளியானது கூகிள் டெலிவிஷன் சாதனம்.
உண்மையைச் சொல்லப் போனால் அது டெலிவிஷன் தோல் போர்த்திய கம்ப்யூட்டர். டிவி என்பது நோட்பேட் போல், பிரவுசர் போல் அதனுள் இருக்கும் மற்றுமோர் அப்ளிகேஷன், அவ்வளவே. டிவி தவிர, போட்டோ ஆல்பம் (பிக்காசா, ஃப்ளிக்கர் அக்கவுண்ட்டில் உள்ள நிழல் படங்களைப் பார்த்து மகிழ!), பண்டோரா ஆன்லைன் வானொலி, நெட்ஃப்ளிக்ஸ், ட்விட்டர் என சொற்பமே சொற்பம் செயலிகளோடு நடந்த குறைப்பிரசவம் அந்த டிவி.
இருந்தாலும் பூவை வைத்த இடத்தில் பொன்னை வைத்தது போல் க்ரோம் பிரவுசர்தான் இந்த இயங்குதளத்தின் இடைமுகம் என்பதால் ரிமோட்டில் இருக்கும் ‘தேடு’ பொத்தானை அழுத்தினால் விருட்டென்று க்ரோமின் அட்ரஸ் பார் டிவி திரையில் தோன்றும். அதில் ஒரு வார்த்தையை உள்ளிட்டால் நொடியில் அந்த வார்த்தை சம்பந்தப்பட்ட டிவி சேனல் ப்ரொக்ராம்கள் என்னென்ன, இணைய விடியோக்கள் என்னென்ன, இணைய தளங்கள் என்னென்ன என்று தனித்தனியாய் ரகம் பிரித்து அள்ளிக் கொண்டு வந்து திரையில் கொட்டும். முதலைக்கு தண்ணீரில் பலம் என்பது போல் கூகிளின் பலம் தேடல்!
சேனல் ரிசல்ட்டை அழுத்தினால் சட்டென்று அந்த சேனல் ஒளிபரப்பாகத் துவங்கும். விடியோ ரிசல்ட்டை அழுத்தினால் க்ரோமோடு சேர்த்துத் தைக்கப்பட்ட ஃப்ளாஷின் உதவியால் யூ ட்யூப் அல்லது இன்ன பிற ஆன்லைன் விடியோ ஓடத் துவங்கும். வெப் ரிசல்ட்டை அழுத்தினால் திரை பூராவும் எழுத்துக்களாய் வெப்சைட் விரியும்.
இந்த டிவி வாங்கின பிறகு சேனல் எண்களை ஒரு போதும் நான் நினைவில் வைத்திருக்க தேவையில்லாமல் போனது. சி.என்.என் வேண்டுமா, ஹெச் பி ஓ வேண்டுமா, கடகடவென எழுத்துகளை அடித்தால் தேடல் முடிவில் அந்தந்த சேனல் முன்னால் வந்து நிற்கும். நியூஸ் என்று டைப் செய்தால் எந்தெந்த சேனலில் செய்திகள் கிடைக்கும் என்று பட்டியல் வரும். தற்சமயம் ஓடிக் கொண்டிருந்தால் அந்த சேனலுக்கு உடனே தாவ இயலும். இன்னும் ஒரு மணி நேரம் கழித்துதான் நீங்கள் தேடிய ப்ரொக்ராம் ஓடுமெனில் டிவிஆரில் ரெக்கார்ட் செய்யச் சொல்லி உத்தரவிட்டு விடலாம்.
ஆனால் இதற்காகவெல்லாம் இந்த டிவியை கொஞ்சம் ப்ரீமியம் விலை கொடுத்து வாங்கவில்லை. ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ஸ்டோர் மூன்று மாதத்தில் இந்த டிவிக்கும் சேர்த்து திறந்து விடப்படும் என்ற கூகிளின் வாக்குறுதியை நம்பித்தான் வாங்கினேன்.
ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் ஓடும் லட்சக்கணக்கான அப்ளிகேஷன்கள் இந்த டிவி திரையிலும் ஓடும் என்பது எவ்வளவு பெரிய விஷயம். குட்டியூண்டு ஃபோன் திரையில் ஜாலங்கள் நிகழ்த்தும் ஆண்ட்ராய்டின் மிகப் பெரிய டெவெலப்பர் சமூகம் இவ்வளவு பெரிய திரை கிடைத்தால் என்னென்ன மாயங்களெல்லாம் செய்யப்போகிறதோ என்று கற்பனை வெள்ளத்தில் மிதக்க ஆரம்பித்தேன்.
ஆனால் மாதங்கள் மூன்று போனதேயொழிய கூகிள் சொன்னபடி எதுவும் செய்யவில்லை.
பத்திருபது நாளுக்கொரு தடவை An update is ready for your TV. Do you want to install? என்றொரு செய்தி திரையில் தோன்றும். ஆர்வமாக அந்த அப்டேட்டை நிறுவி விட்டு தேடிப் பார்த்தால் ஒரு மாற்றமும் பெரிதாக இருக்காது. பொசுக்கென்று இருக்கும். இந்த மாதிரி விஷயங்களில் கூகிள் ஒரு மர்ம தேசம். செயலியின் அப்டேட்கள் வந்தபடி இருந்தன. எனினும் ஆண்ட்ராய்ட் மார்க்கெட் வந்தபாடில்லை. மூன்று மாதத்தில் வந்து விடும் என்று கூகிள் சொன்னது தேர்தல் கால் அரசியல் வாக்குறுதி போல காற்றோடு போனது.
கூகிள் டிவி தோல்வியடைந்தது என்று செய்திக் கட்டுரைகள் வெளியாகத் துவங்கின. இந்த சமயத்தில் எனக்கிருந்த ஒரே ஆறுதல் க்ரோமின் ஹெச்டிஎம்மெல் 5 சப்போர்ட். இந்த புதிய ஹெச்டிஎம்மெல் தொழில்நுட்பம் கொண்டு கூகிள் டிவிக்கு உகந்த இணைய தளங்களை உருவாக்கலாம். அப்படிப்பட்ட தளங்கள் கொஞ்சம் இருந்தன. ஆனாலும் இவை ரத்தமும் சதையுமாய் உள்ளே ஒட்டியிருக்கும் ஆண்ட்ராய்ட் நேட்டிவ் செயலிகளுக்கு இணையாகாதே!
இன்னொரு ஆறுதல் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களுக்கு ரிமோட் செயலியை வெளியிட்டது கூகிள். அதாவது அந்த செயலியை நிறுவிக் கொண்டால் ஃபோனை இந்த டிவிக்கான ரிமோட்டாகவும் உபயோகிக்கலாம். என்னுடைய ஆண்ட்ராய்ட் ஃபோனும், மகனின் ஐபோனும் உபரி ரிமோட்களாக ஜென்ம சாபல்யம் அடைந்தன.
இருப்பினும் இந்த சமயத்தில் கன்சாலிடேட் செய்கிறேன் பேர்வழி என்று கூகிள் தனது சேவைகளில் பலவற்றை இழுத்து மூட ஆரம்பித்தது, வேவ் என்னும் அலை ஓய்ந்தது. கூகிள் ஹெல்த் நோய்வாய்ப்பட்டு இறந்தது. We love to fail, We are not afraid of failing என்றெல்லாம் ஜபர்தஸ்த்தாக பேட்டி கொடுத்தார்கள். எனக்கு வயிற்றில் அமிலத்தைக் கரைத்துக் கொட்டியது. இலவச சேவைகளை அவர்கள் என்னமோ செய்து கொள்ளட்டும். காசு கொடுத்து வாங்கிய இந்த டிவியை அம்போ என்று விட்டு விட்டால் எங்கே போய் முட்டிக் கொள்வது.
இந்த டிவி இனியும் பொலிவடையும் என்ற நம்பிக்கையை இழந்து நான் என் App market ஆசையைத் துறந்தேன். செய்திகளில் கூகிள் டிவி அடிபட்டால் போடா போடா புண்ணாக்கு, போடாதே தப்புக் கணக்கு என்று ராஜ்கிரண் பாட்டைப் பாட ஆரம்பித்தேன்.
திடீரென்று நாலு நாள் முன்னால் கூகிள் டிவி டீமிடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல். முதல் தலைமுறை கூகிள் டிவியை வாங்கியவர் என்ற முறையில் உங்களை நினைத்து நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். உங்களின் இத்தனை நாள் பொறுமைக்கு தலை வணங்குகிறோம் என்றெல்லாம் ஐஸ் வைத்து விட்டு, Stay tuned, finally you are going to get exciting updates in the next couple of days…
மறுபடி ஒருமுறை ஏமாற விருப்பமில்லாததால் பரபரப்பில்லாமல் அந்த மெயிலை ஆர்க்கைவ் செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கலானேன். ஆனால் இந்த முறை அந்த இமெயில் பொய்க்கவில்லை. சொன்ன மாதிரியே நேற்று ஹனிகோம்ப் 3.1 அப்டேட் டிவிக்கு வந்து சேர்ந்தது.
இனி ஆண்ட்ராய்ட் ஃபோனுக்கும், ஆண்ட்ராய்ட் டேப்ளெட்டுக்கும், இந்த டிவிக்கும் பெரிய வித்தியாசமில்லை. எப்படி ஃபோன் என்பது இனிமேல் வெறும் போன் இல்லையோ அப்படியே டிவி என்பதும் வெறும் டிவி இல்லை. மானாவாரியாக ஆண்ட்ராய்ட்சந்தையில் கொட்டிக் கிடக்கும் அப்ளிகேஷன்களில் உகந்ததைப் பொறுக்கி டிவியில் நிறுவிக் கொள்ளலாம். டிவிக்கென்றே பிரத்யேக அப்ளிகேஷன்கள் தற்சமயம் ஐம்பத்தி சொச்சமே இருந்தாலும், அந்த எண்ணிக்கை வெகுவிரைவில் உயர்ந்து விடும் என்று நம்புகிறேன்.
நேற்று நான் ஆண்ட்ராய்ட் ஃபோனுக்காக உருவாக்கப்பட்ட உலக வரைபடம் என்ற செயலியை நிறுவி டிவி திரையில் என் மகளுக்கு உலகப் பந்தை ரிமோட் என்ற நெம்புகோல் கொண்டு புரட்டிப் புரட்டிக் காட்ட முடிந்தது.
ஆக மொத்தம் இது கூகிள் டிவிக்கு வெற்றியா? சொல்ல முடியாது. போன வருஷம் ஆர்ப்பாட்டமாய் அறிமுகமான போதே கூகிள் இந்த வசதியோடு டிவியை வெளியிட்டிருக்க வேண்டும். அப்போது தும்பை விட்டு விட்டு, இப்போது வாலைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள்.
இருந்தாலும் தனிப்பட்ட முறையில் – கூகிள் ஏமாற்றி விடாது – என்கிற என் உள்ளுணர்வுக்குக் கிடைத்த வெற்றி. ■
தமிழோவியம் மின்னிதழில் எழுதிய கட்டுரை
You are free to share the link to this page anywhere on social media or other websites. But copying/displaying this content
on other websites or reproducing this content on any other media/format including but
not limited to a book/audio/video is strictly prohibited and subject to legal action.
இந்தப் பக்கத்தின் இணைப்பை சமூக வலைத்தளங்களிலோ, பிற இணைய பக்கங்களிலோ பகிரும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் இந்தப் பக்கத்தில் உள்ள படைப்பை நகலெடுத்து வேறு தளங்களில் வெளியிடுவதோ, அல்லது இந்தப் படைப்பை நூலாகவோ, ஒலி அல்லது அசைபடம் உட்பட வேறெந்த வடிவத்திலும் மறு உருவாக்கம் செய்யும் உரிமை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அது சட்டப்படி குற்றமாகும்.
கதைகளில் வரும் சம்பவங்களும், பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.
இந்தப் பக்கத்தின் இணைப்பை சமூக வலைத்தளங்களிலோ, பிற இணைய பக்கங்களிலோ பகிரும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் இந்தப் பக்கத்தில் உள்ள படைப்பை நகலெடுத்து வேறு தளங்களில் வெளியிடுவதோ, அல்லது இந்தப் படைப்பை நூலாகவோ, ஒலி அல்லது அசைபடம் உட்பட வேறெந்த வடிவத்திலும் மறு உருவாக்கம் செய்யும் உரிமை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அது சட்டப்படி குற்றமாகும்.
கதைகளில் வரும் சம்பவங்களும், பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.