உள்காயம்
உள்காயம்

உள்காயம்

நாக்கில் நரநரவென்று உறுத்தல். பூஞ்சோலை சுவரோரமாய் இருந்த தொட்டியில் உமிழ்ந்தாள். எச்சில் கறுப்பாய் ரசாயன மண் கலந்து வந்தது.

சற்று தள்ளி ஜோல்ட்டிங் இயந்திரத்தின் அருகே நிற்கிற பதினெட்டு வயது இளைஞ னுக்குக் குரல் கொடுத்தாள்.

''ரத்தினம். கடைசி பேட்ச் பெட்டிங்க வருது பாரு. மெஷின்ல ஏத்து.''

காலையிலிருந்து இந்த நிமிஷம் வரை பூஞ்சோலையை அதிஅதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த அந்த ரத்தினம் சுதாரித்து தன் னருகே ஓடும் தண்டவாளத்தில் பார்வையைப்போட்டான்.

கனத்த மோல்டிங் பெட்டிகள் வேக மாய் ஓடி வந்தன. இயந்திரத்தின் அருகே வந்த பெட்டியைத் தடுத்து நிறுத்தினான். பெட்டியின் கனமும், அதன் உலோக உடம்பில் ஒட்டியிருந்த மண் துகள்கள் உண்டாக்கிய சிராய்ப்பும் அவன் கையைச் சிவக்க வைத்தன.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் நிற்கிறபோது, அவள் அருகில் வந்து விட்டாள்.

''காலைலேர்ந்து நான் வேலை செய் யறதை எத்தனை வாட்டி பார்த்திருப்பே. செயின் புல்லி பிளாக்கைத் தட்டி விடு. ''

பச்சையாய் இருந்த பொத்தானை அழுத்த.. இரும்புச்சங்கிலி சலசலவென கீழிறங்கியது. சங்கிலியின் நுனியில் இருந்த கொக்கியை மோல்டிங் பெட்டியில் மாட்ட முயற்சித்துத் தோற்றான் ரத்தினம்.

''தள்ளிக்க. இன்னும் உனக்கு பழக்கமாகலை.''

''இன்னொரு தடவை முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்க்கா.''

''அதுக்குள்ளே மெட்டல் வந்துடும். மோல்டிங் ரெடி ஆகலைன்னா சூப்பர்வைசர் கத்துவாரு.''

கொக்கியைப் பெட்டியோடு இணைத்தாள். புல்லி பிளாக் கில் மாட்டிக்கொண்ட பிணமாய்க் கனக்கும் அந்தப் பெட்டியைப் படுலாவகமாய் ஒரு சுழற்று சுழற்றி, இயந்திரத்தின் படுக்கையில் உட்கார வைத்தாள்.

மேலிருந்த திறப்பை விடுவிக்க கறுத்த சிலிகான் மண் மழையாய்க் கொட்டியது. மோல்டிங் பெட்டிக்குள் விழுந்ததுபோக ஏராளமாய் சுற்றிலும் துகள்களாய்ப் பரவியது.

மூக்கைப் பொத்திக் கொள்ள முயலும் ரத்தினத்தைப் பார்த்துச் சிரித்தாள்.

''மூக்கைப் பொத்திக்கிட்டெல்லாம் ஃபவுண்டரிக்குள்ளே வேலை பார்க்க முடியாது தம்பி. உள்ளே வந்தாலே நீ மண்ணைத் தான் சுவாசிச்சாகணும்.''

அவள் சிரிப்புக்குப் பயந்து மூக்கருகே கொண்டுபோன கையை விலக்கிக் கொண்டான்.

பூஞ்சோலை சுவிட்சைத் தட்ட ஜோல்ட்டிங் இயந்திரம் தடதடவென அதிர்ந்தது. பேட்ச் பேட்டனின் வடிவத்தை மண்ணில் அச்சாய்ப் பதிந்து அடைத்தது. அதே பழைய லாவகத்தோடு மோல்டிங் பெட்டியை ட்ராலியில் திரும்ப வைத்து அதன் மேல் ரைசர் பெட்டியைக் கவிழ்த்தாள். அசுர வேகத்தில் பத்துப் பெட்டி கள். மெல்ட்டிங் செக்ஷனை நோக்கி அவைகளைத் தள்ளி விட்டு விட்டு வழியும் வியர்வைக் கோடுகளைத் துடைத்தபடி ரத்தினத்தைப் பார்த்தாள்.

''இந்த வேகம் வேணும் ரத்தினம். இல்லைன்னா வீட்டுக்கு அனுப்பிருவாங்க. ஃபர்னஸ்ல மெட்டல் ரெடியாகறப்போ மோல்டிங் தரலைன்னா அத்தனை மேலதிகாரிகளும் நம்ம மேல புலிப்பாய்ச்சல் பாய்ஞ்சிருவாங்க.''

அவள் சொன்னபோது பெரிய சைரன் ஒலி கேட்டது.

''ஷிப்ட் முடிஞ்சது. வா கையைக் கழுவலாம்.''

ரத்தினம் அவள்  பின்னே நடந்தான். இரும்பை உருக்கும் மின்சார உலையின் அனல் வெப்பத்திலிருந்தும் ஷாப் ப்ளோரின் மண் புழுதியிலிருந்தும் மீண்டபோது விடுதலை சந்தோஷம் கிடைத்தது.

குழாயடியில் தண்ணீரில் கையை நனைத்துக் கொண்டே சொன்னான் ரத்தினம்.

''இங்க ஒரு பொம்பளையை எதிர்பார்க்கலைக்கா நான்.''

சோடியம் சிலிக்கேட்டால் கை அழுக்கைச் சுத்திகரித்த படியே அவனைப் பார்த்தாள்.

''ஏன்?''

''ரொம்ப கஷ்டமான வேலை. ஆம்பளைங்க செய்யற வேலை.''

''ஆம்பளைங்க செய்யற வேலைதானே உன்னாலே ஏன் முடியலை?''

''இன்னிக்கு மொத நாள்.போகப்போக சரியாயிடும்.''

''அதான். பழக்கம்தான். இந்தக் கஷ்டமான வேலையைச் செய்ய நான் பழகிட்டேன். இங்க வேலை பார்க்கிற ஆம்பளைங் களை விட அதிகமா ப்ரொடக்ஷன் தர்றேன் தெரியுமா?''

''இங்கே எப்படிக்கா சேர்ந்திங்க?''

''குடும்ப சூழ்நிலை. சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தம். நான் வேலை தேடினப்போ இந்த கம்பெனி விளம்பரம் வந்தது. மோல்டர் அசிஸ்டண்ட் தேவை. தகுதி ப்ளஸ்டூ. முன் அனுபவம் தேவை யில்லை. ஒரு வருட பயிற்சிக்குப் பின் பணி நிரந்தரம்ன்னுபோட் டிருந்தாங்க. சம்பளம் ஆயிரம் ரூபான்னுபோட்டிருந்ததுதான் என்னைத் தூண்டிச்சு. ஏதாவது துணிக்கடையில அலுங்காம துணி கிழிச்கிட்டிருக்கலாம்தான். ஆனா சம்பளம் எவ்வளவு குடுத்துடப்போறாங்க? கொஞ்சம் கஷ்டப்பட்டு உழைச்சா ஆம்பளைக்குச் சமமா சம்பாதிக்கலாமே? முயற்சி பண்ணினேன். மானேஜர் ரொம்ப யோசிச்சாரு. நீ இப்ப சொன்ன மாதிரி இது ஆம்பளைங்க செய்யற வேலைம்மா. ஆபீசுக்குள்ளே  வேலை காலி ஆச்சுன்னா உனக்கு தபால்போடறேன்னு தட்டிக் கழிக்கப் பார்த்தார். நான் விடலை. ஆபீஸ் வேலைக்கு இதே சம்பளம் தருவீங்களா? மாட்டீங்க. ஏன் சார் ஆம்பளை, பொம்பளைன்னு பிரிச்சுப் பார்க்கிறீங்க. எனக்கு வேலை குடுங்க. எந்த விதத்திலாவது நான் குறைச்சலா இருந் தேன்னா அந்த நிமிஷமே என்னை வீட்டுக்கு அனுப்சிருங்கன்னு சொன்னேன். என் தைரியத்தை மதிச்சு பாதி நம்பிக்கையோடதான் வேலை கொடுத்தார். இன்னிக்கு ஒரு பெட்டி கூட உன்னால தனியா அடிக்க முடியலை. ஆனா நான் வெறியோட இல்ல வேலைக்குச் சேர்ந்தேன். மொத நாளே  தன்னந்தனியா இருபத் தஞ்சு பெட்டி அடிச்சுக் காட்டினேன்.''

''ஆயிரம்தான் சொல்லுங்க. காலையிலேர்ந்து நீங்க படற கஷ்டத்தைக் கண்ணாலே பார்த்தவன் நான். காலைல கோத்த மல்லிகைச் சரம் மாதிரி லட்சுமிகரமா வந்திங்க. இந்த முரட்டு வேலைல ஃபர்னஸ் வெப்பத்தில் வாடிப்போய் இப்போ கசங்கின சருகு மாதிரி தெரியறீங்க.''

சிரித்தாள்.

''மறுபடி காலைல மல்லிகைச் சரமாத் திரும்பி வருவேன்.''

''அக்கா சிரிச்சு மழுப்பாதிங்க. உங்க மனசைத் தொட்டுச் சொல்லுங்க. ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை. தினந்தோறும் இந்த வேலையைச் செய்யறது கஷ்டம் இல்லையா?''

டைம் ஆபிசுக்குள் நுழைந்தார்கள்.

''பூஞ்சோலை. ஸ்டாம்ப் மேலே கையெழுத்தைப்போடு.''

அக்கவுன்ட்டன்ட் தடிமனான கவரை நீட்டினார்.

''பிடித்தம்போக ஆயிரத்து ஐநூறு ரூபா. எண்ணிப் பார்த் துக்க. இந்தப் பையன் யாரு? ஓ புதுசா சேர்ந்த அஸிஸ்டண்டா?''

வெளியே வந்தவள் ரத்தினத்திடம் புன்னகைத்தாள்.

''கஷ்டமான்னு கேட்டியே. கஷ்டம்தான். ஆனா இப்படி ஒண்ணாந்தேதி கத்தையா வாங்கறப்போ அத்தனை கஷ்டமும் இலவம் பஞ்சு மாதிரி காத்துல பறந்துடுது.''

கைப்பைக்குள் பணக்கவரைத் திணித்தாள். சாலையைக் கடந்து எதிர்சாரி பஸ் ஸ்டாப்புக்கு வந்தார்கள். கேள்விகளே இல்லாமல் வாயடைத்துப்போயிருந்தான் ரத்தினம்.

''நீ எங்கேபோகணும்?''

''காந்தி பார்க்.''

''நான்போக வேண்டிய பஸ் வந்துடுச்சு. நாளைக்கு பார்க்கலாம் ரத்தினம்.''

பூஞ்சோலை ஜனக்கூட்டத்தால் பிதுங்கி வழியும் அந்த டவுன் பஸ்ஸை வேகமாய் நெருங்கினாள். முண்டியடித்து உள்ளேபோனாள். கால் வைக்க இடமில்லை. மேல் கம்பியைப் பிடிப்பதற் குள் திணறிப்போனாள். சுற்றிலும் முளைத்த அக்குள்களின் வியர்வை நாற்றம் குடலைப் புரட்டியது. அரவை இயந்திரமாய் அரைத்துப்போடும் இந்த டவுன் பஸ் பிரயாணத்தை விடவா ஃபாக்டரி வேலை கஷ்டமானது?

ஃபாக்டரி ஞாபகம் வந்ததும் வாங்கிய சம்பளத்தின் மேல் நினைப்பு சென்றது. பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாய்க் கிடக்கும் அப்பா ஞாபகம் நெஞ்சை உறுத்தியது. அண்ணா அவரைக் கவனிப்பதே இல்லை. பணம் இல்லை என்று சாக்குபோக்கு சொல்லி, ஒழுங்காய் சிகிச்சை செய்யாமல் தட்டிக் கழிக் கிறான். டவுன் பஸ் தொகைபோக இந்த மாதத்து சம்பளம் மொத்தமும் அப்பாவின் மருத்துவ செலவுக்குதான்.

சட்டென இடுப்பில் ஏதோ ஊர்கிற மாதிரி உணர்வு ஏற்பட்டு யோசனைகளிலிருந்து கலைந்தாள். கூட்ட நெருக்கத்தை சாதகமாக்கிக் கொண்டு, எந்த ராஸ்கலோ  இடுப்பில் சில்மிஷம் செய்கிறான்.

விருட்டென்று திரும்பினாள்.

அருவருப்பான முள்தாடி முகத்தோடு ஓர் ஆசாமி அவளுக்கு நேர் பின்னே நின்றிருந்தான். சாராய நாற்றம் குப்பென்று நாசியில் அறைந்தது. பூஞ்சோலை உஷ்ணப் பார்வையில் அவனை முறைத்ததும், கை பின்வாங்கியது. சாராய நெடியைத் தாங்க முடி யாமல் உடனடியாய்த் திரும்பிக் கொண்டாள். விலகிச் செல்ல வழி யில்லாமல் கூட்ட நெரிசல்.

சற்று நேரத்தில் மீண்டும் அவன் கைவரிசை துவங்கியது. இந்தமுறை கைப்பை இழுபடத் துவங்க, அவனுடைய நோக்கம் புரிந்தது.

ஆனால் யோசிப்பதற்குள் கைப்பையின் வார் அறுபட்டு - பை அவன் வசம்போயிற்று. பூஞ்சோலைக்கு உடம்பெல்லாம் நிமி ஷத்தில் பதறிப்போனது.

ஒரு மாச கடும் உழைப்பு.

''திருடன்... திருடன்...''

அவளுடைய திடீர்க் கத்தலில் கூட்டம் ஸ்தம்பித்தது. பின் சுதாரிப்பதற்குள் பை கை மாறப்போனது.

''டேய் திருட்டு நாய்களா'' ஆவேசம் வந்தவளாய்க் கத்தின படி நெரிசலில் திமிறிக் கொண்டு பையைப் பறிக்க முயற்சிப்ப வனின் சர்ட் காலரை எட்டிப் பிடித்து விட்டாள்.

''விடுடி பையை. கீசிடுவேன்.''

ப்ளேடை நீட்டியவனின் மிரட்டலுக்கு அசராமல் போராடினாள். அவன் ப்ளேடினால் அவள் உடம்பைப் பதம் பார்க்க முயல்கிறபோது, பஸ்ஸுக்குள் இருந்த சில துணிச்சல் இளைஞர் கள் உதவிக்கு வந்தார்கள். ஜேப்படி ஆசாமியின் சக ஆட்கள் நழுவி ஓடினார்கள். பூஞ்சோலை ஒரு கையில் கைப்பையும் மறு கையில் அவன் சர்ட் காலரையும் விடாமல் பற்றியிருக்கவே அவன் மட்டும்  அகப்பட்டான். வினாடிக்குள் துவைத்தெடுக்கப்பட்டான்.

''வண்டியை ஸ்டேஷனுக்கு விடுங்கண்ணே...''

கைப்பை கிடைத்த பின்னும் பூஞ்சோலைக்கு வெகுநேரம் உடல் நடுக்கம் அடங்கவில்லை.

 

குளிர்ந்த நீரை களைப்புத் தீர முகத்தில் வாரியிறைத்தாள் பூஞ்சோலை.

கொடியில் உலர்ந்த ஈரிழத் துண்டால் முக ஈரத்தை ஒற்றிக் கொண்டு உள்ளே வந்தாள்.

முன்னறையில் பேச்சுக் குரல் கேட்டது. கணவன் வேலு அதற்குள் வந்து விட்டானா? யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.

பூஞ்சோலை இன்லான்ட் லெட்டரை மேஜை மேல் எடுத்து வைத்தாள். அப்பாவுக்கு எழுத வேண்டிய விஷயங்களை மனசுக்குள் ஒரு தரம் ஓட விட்டாள்.

''பணம் இல்லை என்பதற்காக சிகிச்சையைத் தள்ளிப்போட வேண்டாம். உங்கள் மருத்துவச் செலவுக்காக இத்துடன் ரூபாய் ஆயிரத்துக்கான டிராஃப்ட் அனுப்பியுள்ளேன். மேலும்...''

யோசித்தபடியே பார்வை மர செல்ஃபில் வைத்திருந்த கைப் பையின் மேல் விழுந்தபோது திடுக்கிட்டுப்போனாள்.

கைப்பை ஜிப் திறந்திருந்தது.

அவசரமாய் அதை எடுத்து உள்ளே பார்க்க, சம்பளக் கவர் சருகாய் இளைத்திருந்தது.

திகைப்பும், கோபமும் உக்கிரமாய்த் தாக்கியது. வேகமாய் முன்னறைக்குப்போனாள். வேலு அந்த ஆளிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

''இந்தா உன் பிச்சைக் காசு ஆயிரம் ரூபா. நான் சம்பாதிக் கிறேனோ இல்லையோ. கணக்கை கரெக்டா பைசல் பண்ணிட் டேன். பொண்டாட்டியோட சம்பளப் பணத்தை எடுத்து ரொக்கமா உன் கையில் கொடுத்திருக்கேன். நான் மானஸ்தன்டா. இந்த தடவை எங்க கட்சி ஜெயிக்காமப்போனா என்ன? அடுத்த எலக்ஷன்ல கண்டிப்பா நாங்கதான் வருவோம் பாரு. ரெண்டாயிரம் ரூவா பந்தயம்.''

பூஞ்சோலை அதிர்ச்சியோடு. ''அடப்பாவி மனுஷா'' என வீறிட்டபோது, அந்த கரை வேட்டி ஆசாமி பணத்தோடு தலைமறைந்திருந்தான்.◼︎

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை, கல்கி 07 ஆகஸ்ட் 1996
இக்கதையையும், பிற கதைகளையும் 'ஒரு விநாடியும் ஒரு யுகமும்' சிறுகதைத் தொகுப்பில் படிக்கலாம்.

 

You are free to share the link to this page anywhere on social media or other websites. But copying/displaying this content on other websites or reproducing this content on any other media/format including but not limited to a book/audio/video is strictly prohibited and subject to legal action.

இந்தப் பக்கத்தின் இணைப்பை சமூக வலைத்தளங்களிலோ, பிற இணைய பக்கங்களிலோ பகிரும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் இந்தப் பக்கத்தில் உள்ள படைப்பை நகலெடுத்து வேறு தளங்களில் வெளியிடுவதோ, அல்லது இந்தப் படைப்பை நூலாகவோ, ஒலி அல்லது அசைபடம் உட்பட வேறெந்த வடிவத்திலும் மறு உருவாக்கம் செய்யும் உரிமை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அது சட்டப்படி குற்றமாகும்.

கதைகளில் வரும் சம்பவங்களும், பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.
சத்யராஜ்குமார்
சத்யராஜ்குமார்
A writer who cares about readability...