காதல் பொட்டலம்
ஓவியம்: சத்யராஜ்குமார்

காதல் பொட்டலம்

விமானப் பயணத்தை விட அசௌகரியமான விஷயம் இந்த உலகத்தில் எதுவும் இல்லை. அசௌகரியத்துக்கும் மேலே கொஞ்சம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி விட்டார்கள்  ஏர்லைன்ஸ்காரர்கள்.

தவிப்புடன் கையைப் பிசைந்தான் பரணி. 

ஒரு வாரம் பிசினஸ் ட்ரிப்பாக நியூயார்க் வந்திருந்தவன் இந்த விமானம் கிளம்பும் தருணத்துக்காக நேற்றிலிருந்தே காத்துக் கொண்டிருந்தான். 

க்ளையண்ட் மேனேஜர் எமிலி நேற்று அவன் பரபரப்பைக் கவனித்தவளாக, “பரணி, யு ஸீம்ஸ் டு பி ரெஸ்ட்லெஸ். என்ன விஷயம்?” என்றாள்.

ஸாரி எமிலி, இந்த மீட்டிங் முடிகிற மாதிரி தெரியவில்லை. ஐ ஹாவ் ஏ ஹார்டு ஸ்டாப் அட் ஃபோர் பி எம். அதான் கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கேன்.”

வழக்கமா நீ நேரத்தைப் பத்தி கவலைப்படற ஆள் இல்லையே? நான் போகணும்ன்னு சொன்னாலும் பிடிச்சு உக்கார வெச்சு வந்த நோக்கம் நிறைவேறாம கிளம்ப மாட்டியே?”

ஆமாம். இந்த மீட்டிங்கை அடுத்த வாரம் வெச்சிக்க சொல்லியிருந்தேன். டைம் க்ரிட்டிகல்ன்னு  இப்பவே கட்டாயப்படுத்தி என்னை அனுப்பி வெச்சிட்டாங்க. நாளைக்கு நான் வாஷிங்டன் டி.சிக்குத் திரும்பிப் போயே ஆகணும். அங்கே எங்கள்  வீட்டில் இருந்தாகணும்.”

எனி திங் ஸ்பெஷல்?”

எஸ் வெரி ஸ்பெஷல். நாளை மறுநாள் எங்களோட அஞ்சாவது திருமண நாள். ஐ ஹாவ் டு பி தேர் வித் மை ஒய்ஃப் நிஷா.”

எமிலி விழிகள் விரிய அவனைப் பார்த்தாள். “வாவ். ஸச் அ லவ்லி ஹஸ்பெண்ட். இப்படி அக்கறையான கணவன் கிடைக்க உன் மனைவி கொடுத்து வைத்திருக்க வேண்டும். ரெண்டாவது வருஷத்திலிருந்தே என் கணவருக்கு நான் நினைவுபடுத்த வேண்டியதாகி விட்டது. கோவிச்சுக்குவேன்னு இப்ப ஃபோன்ல ரிமைண்டர் போட்டு வெச்சிருக்கார்.” - கண்களைச் சிமிட்டிக் கொண்டே, “அதையும் சில சமயம் மிஸ் பண்ணிருவார்.” என்றாள்.

பரணி பொதுவாகச் சிரித்து வைத்தான்.

எமிலியே தொடர்ந்து கேட்டாள். “ஸோ, சாயந்தரம் ஃப்ளைட் பிடிக்கணுமா?”

இல்லை. நாளைக்குக் காலையில் ஆறு மணிக்கு ஃப்ளைட்.”

அப்போ இன்னிக்கும் நீ ஹோட்டல் வாசம்தான். அப்புறம் ஏன் அவசரப்படறே?”

அவள் க்ளையண்ட் மேனேஜர் என்றாலும், அலுவலகப் பேச்சைக் கடந்து எப்போதும் தோழமையாகவே பழகி வந்திருக்கிறாள். 

அந்தத் தோழமை தந்த உரிமையில் பரணி தயக்கமில்லாமல் சொன்னான். “கல்யாண நாளுக்காக ஷாப்பிங் பிளான் பண்ணியிருக்கேன். நிஷாவுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட்.” 

ஐ ஸீ... தங்க ஆபரணமாகத்தான் இருக்கும். கரெக்ட்? அதுதானே இந்தியக் கணவர்களின் ஃபேவரைட் பரிசு?”

இந்திய மனைவிகளின் ஃபேவரைட் என்றும் வைத்துக் கொள்ளலாம்.” சிரித்தபடியே சொன்ன பரணி, “ஆனா நான் வாங்கப் போறது தங்க நகை இல்லை. யூ நோ வாட் எமிலி, இது வரைக்குமே எங்கள் திருமண நாட்களை கிராண்ட் செலிப்ராஷனாகத்தான் மாத்தியிருக்கேன். ஒவ்வொரு திருமண நாளுமே மறக்க முடியாத நாளாக மனதில் பதிஞ்சிருக்கணும்ன்னு ஆசைப்படுவேன். அதுக்குத் தகுந்தாற்போல என்னோட சர்ப்ரைஸ் கிஃப்ட் இருக்கும். ‘இந்த வருஷம் எப்படி என்னை அசத்தப் போகிறான் இந்த பரணி?’ன்னு நிஷா எதிர்பார்க்கிற அளவுக்கு இதை ஒரு சம்பிரதாயமா ஆக்கிட்டேன்.”

எமிலி போலியான ஓர் ஏக்கத்தைக் கண்களில் காட்டி அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். “ஏய் நீ என்னைப் பொறாமைப்பட வைக்கிறே.”

ஐயாம் வெரி பர்ட்டிகுலர் அபவுட் இட். அதிலும் போன வருடத்தை விட இந்த வருடம் அவளுக்குத் தரும் பரிசு ஒரு படி மேல இருக்கணும். அப்போதானே அது நினைவில் நிற்கும்படி இருக்கும்?”

உண்மை. ஸோ, உன்னோட முதல் வருட கிப்ட் என்ன?”

முதல் வருஷம் நீ சொன்னது போல ஒரு தங்க நகைதான் பரிசளிச்சேன். ஆனா ரெண்டாவது வருஷத்திலிருந்துதான் போன வருஷத்தை விட பெஸ்ட்டா இந்த வருஷம் என்ன செய்யலாம்ன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.”

அப்படின்னா உன்னோட ரெண்டாவது வருஷ கிஃப்ட் என்னன்னு கேட்டிருக்கணும்.”

ரிஸ்ட் வாட்ச் வாங்கிப் பரிசளித்தேன். சாதாரண வாட்ச் இல்லை. ரொம்ப விலை உயர்ந்த hublot வாட்ச்.”

ஓ மை காட். ஒரு கார் வாங்கற விலை இருக்குமே?”

இருக்கும். ஆனா இன்னிக்கு நீ கேட்டதும் என்னால டக்ன்னு சொல்ல முடியுதே? வாழ்நாள் முழுக்க அவளுக்கும் நினைவு இருக்கும்.”

மூணாவது வருஷம்?”

கிச்சன், பார், படுக்கைன்னு சகல வசதிகளோட இருக்கிற லிமோசின் காரில் நயாகராவுக்குக் கூட்டிப் போனேன். அங்கே ஒரு ஓவர் தி வாட்டர் ரிசார்ட்டில் ஒரு வாரம் தங்கியிருந்தோம். போன வருஷம் பார்ட்டி டிரஸ் வாங்கி கிஃப்ட் பண்ணினேன். அதிலே டாப் டு பாட்டம் தங்க வேலைப்பாடுகள் உண்டு. வெரி யுனிக். ஸ்பெஷல் ஆர்டர் பண்ணி வாங்கினது.”

வாவ், வாவ். உன் ஒய்ஃப்போட எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்கட்டும். இப்ப எனக்கு பிபி ஏறுகிற மாதிரி இருக்கு. இந்த வருஷம் என்ன வாங்கிப் பரிசளிக்கப் போறே?”

ஒரு மாசமாவே ஆபிஸ்ல படுத்தி எடுத்துட்டாங்க. மாத்தி மாத்தி ஏகப்பட்ட வெளியூர் ட்ரிப். இப்ப கூட லாஸ்ட் மினிட்ல நான் நியூயார்க்கில் உன் கூட மாட்டிகிட்டிருக்கேன் பாரேன். என்னால ரொம்ப  யோசிச்சு பிளான் பண்ண முடியலை.”

ஸோ, இட்ஸ் கோயிங் டு பி ஏ சிம்ப்பிள் கிஃப்ட் திஸ் இயர்? ஒரு சாதாரண பரிசுப் பொருள்தானா?”

நோ நெவர். எப்படியும் இந்த வருஷ கிஃப்ட் போன வருஷ கிஃப்ட்டைத் தூக்கி சாப்பிடற மாதிரிதான் இருக்கணும். ஹேரி வின்ஸ்டன்ல வைர நெக்லஸ் ஒண்ணு வாங்க முடிவு செஞ்சிருக்கேன்.”

எமிலி அப்படியே திறந்த வாய் மூடாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

நான்கு மணிக்கு ஊபர் வரச் சொல்லி, மயக்கம் தரும் மஞ்சள் வெளிச்சத்தில் குளித்துக் கொண்டு ஒரு மினி தேவ லோகம் போல இருந்த ஹேரி வின்ஸ்டன் ஷோ ரூமில், ஏசி குளிரில், ஏராளமான டிசைன்களை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் புரட்டிப் புரட்டிப் பார்த்து விட்டு, கடைசியில் மெல்லிசான செயினில் டாலடிக்கும் அழகான ஒரு வைர நெக்லஸைத் தேர்ந்தெடுத்தான்.

ஹோட்டலில் தூங்கி எழுந்து, காலை நாலரை மணிக்கு அலாரம் வைத்து, ஏர்போர்ட் போய்ச் சேர்ந்து, செக்யூரிட்டி வரிசையில் காத்திருந்து, ஆப்பிள் வாலட்டில் போட்டு வைத்த போர்டிங் பாஸை ஸ்கேனருக்குக் காட்டி விட்டு, முனகிக் கொண்டே ஷூ, லாப்டாப் இத்யாதிகளை செக்யூரிட்டி பெல்ட்டில் போட்டு, ஸ்கேன் முடிந்ததும் திரும்ப கேரி ஆன் பெட்டியில் அள்ளிப் போட்டுக் கொண்டு அவன் செல்ல இருக்கும் டெல்டா ஏர்லைன்ஸ் ஃப்ளைட்டுக்கான கதவை அடையும் வரை எல்லாமே சரியாகவே இருந்தது.

கேட்டுக்குப் போகும் வழியிலேயே ஒரு காபியையும் வாங்கிக் கையில் வைத்துக் கொண்டிருந்தான். போர்டிங் ஆரம்பித்திருப்பார்கள் என்றுதான் நினைத்தான். ஆனால் ஏர்லைன்ஸ் கவுன்ட்டரில் சலனம் எதுவுமே இல்லை. 

விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகக் கிளம்பும் என்ற ஃப்ளைட் ஸ்டேட்டஸை தலைக்கு மேலிருந்த டிவியில் அப்போதுதான் கவனித்தான். 

ஃபோனை எடுத்துப் பார்க்க அந்தச் செய்தி எப்போதோ டெக்ஸ்ட்டாக வந்திருந்தது. நோட்டிஃபிகேஷனை அணைத்திருந்ததால் ஃபோன் அவனைத் தொந்தரவு செய்யவில்லை. முதல் வேலையாக அதை ஆன் செய்தான். 

இசையைக் காதில் மாட்டிக் கொண்டு கிண்டில் மின்னூல் ஒன்றை எடுத்து வைத்துப் படிக்க ஆரம்பித்தான். காலை ஆறு மணி விமானம் புக் செய்தது நல்லதாகப் போயிற்று. கொஞ்சம் முன்னே பின்னே தாமதமானாலும் வாஷிங்டன் போய்ச் சேர்ந்து விடலாம். இதுவே சாயந்தரம் என்றால்  அரை மணி தாமதம் கூட டென்ஷனை ஏற்றி விடும். 

இப்படி யோசனைக்கு நடுவே ஒரு பத்து பக்கங்கள் தாண்டி இருப்பான். அதற்குள் ஃபோன் டொடொய்ங் என்றது. இன்னொரு தாமத அறிவிப்பு. விமானம் புறப்படும் நேரத்தை ஏழு மணியிலிருந்து  ஒன்பது மணிக்கு மாற்றி விட்டிருந்தார்கள். பரணி சட்டெனக் கடுப்பானான். கவுன்ட்டருக்கு எழுந்து போய் லிப்ஸ்டிக் துருத்திக் கொண்டிருக்கும் விமானப் பெண்ணிடம், “என்ன ஆச்சு?” என்றான். 

அவளுக்கு அநேகமாய் இவன் பதினைந்தாவது ஆள். எல்லோருக்கும் வைத்திருந்த அதே ரெடிமேட் பதிலை இவனுக்கும் விநியோகித்தாள். “நீங்கள் அடிக்கடி பயணிப்பவர் என்றால் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். கோவிட் ஆரம்பித்ததிலிருந்தே எல்லா இடங்களிலும் ஸ்டாஃப் பற்றாக்குறை. அதனால் கேட் இன்னும் க்ளியர் செய்ய முடியவில்லை. அசௌவுகரியத்துக்கு வருந்துகிறோம். காத்திருங்கள் சார். எப்படியும் ஒன்பது மணிக்கு புறப்படுகிற மாதிரி தயாராகி விடலாம் என நம்புகிறோம்.”

ஜூவி, நக்கீரன் போன்ற புலனாய்வு இதழ் கட்டுரைகளைப் போல றோம், லாம் விகுதிகளைக் கவனமாகச் சேர்த்த நழுவலான பதில். பரணி மறுபடி போய் அமர்ந்து மின்னூல் படிக்க ஆரம்பித்தான். 

எட்டு மணி ஆன போது நிஷா கூப்பிட்டாள். தூக்கத்தில் முங்கிய குரலில், “இப்பதான் எழுந்தேன். ஃப்ளைட் டிலேன்னு போட்டிருக்கான்?”

ஆமா நிஷா. ரெண்டு மணி நேரம் டிலே. எப்படியும் ஒன்பது மணிக்குக் கிளம்பிடும். லன்ச்சுக்கு வந்து சேர்ந்துருவேன்.”

ஓக்கே. ஏன் டென்ஷனா இருக்கு உங்க குரல்?”

இல்லைநாளைக்கு நமக்கு ஸ்பெஷல் டே இல்லையா? அதுக்குள்ளே வந்துரணுமேங்கிற தவிப்பு.”

நீங்க பதட்டப்பட்டா ஃப்ளைட் கிளம்பிருமா? ஜஸ்ட் ரிலாக்ஸ்.” என்று சொல்லி ஃபோனை வைத்தாள்.

ஒரு வழியாக ஒன்பதரைக்குத்தான் போர்டிங் ஆரம்பித்தார்கள். போர்டிங் பாஸை சோதிக்கும் டெஸ்க்கைக் கடந்ததும் இரண்டு பணியாளர்கள் அளவில் சற்றே பெரிய பெட்டிகளுடன் வருபவர்களைத் தடுத்து நிறுத்தி பெட்டியை எடுத்துக் கொண்டார்கள்.

பரணியும் நிறுத்தப்பட்டான். “எக்ஸ்க்யூஸ்மீ சார். ஃப்ளைட் கன்ஃபிகரேஷன் மாறி விட்டதால் கொஞ்சம்  பெரிய சைஸ் பெட்டிகளை உள்ளே கொண்டு போக முடியாது. வி வில் டேக் கேர். இதை கார்கோ பகுதியில் வைத்து கொண்டு வருகிறோம். நீங்கள் வாஷிங்டன் டி.சியில் இறங்கும்போது பத்திரமாக உங்கள் கைக்கு வந்து விடும்.”

முன்னாலும் பின்னாலும் பெரிய வரிசை. அவன் எதுவும் யோசிக்கும் முன்பே பெட்டி கை மாறியது. டேக் போட்டு சிப்பந்தி ஒருவர் அவனுடைய பெட்டியை எங்கோ தள்ளிக் கொண்டு போனார். விமானத்துக்குள் நுழைந்து இருக்கையைக் கண்டு பிடித்து அமர்ந்த பிறகுதான் நிஷாவுக்கு வாங்கிய வைர நெக்லஸ் ஞாபகம் வந்தது. 

நெற்றியைக் கீறிக் கொண்டான். ‘மை குட்னெஸ். அதுவும் பெட்டிக்குள் போய் விட்டது.’

இரண்டு பக்க இருக்கைகளுக்கு நடுவே வகிடு எடுத்தது போலிருந்த குறுகலான வழித்தடத்தில் பயணிகள் ஒவ்வொருவராய் தட்டுத்தடுமாறி நகர்ந்து அவரவர் இருக்கையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

ஒரு வழியாய் எல்லோருமே அமர வைக்கப்பட்ட போது மணி பத்து ஆகி விட்டது.

குட்மார்னிங் பாஸஞ்சர்ஸ்!” - விமானியின் கரகர குரல் கேட்டதும், ‘அப்பாடா, இனி கிளம்பி விடும்!’ என்று நினைத்தான் பரணி. அவனுடைய நிம்மதிப் பெருமூச்சைப் பாதியிலேயே வெட்டிச் சாய்த்தார் அந்த விமானி. “சம்பிரதாய சோதனைகளின் போது விமானத்தின் சக்கரம் ஒன்று பழுது பட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறோம். பராமரிப்புப் பணியாளர்கள் அதை சரி செய்யும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். வீ ஆர் வெரி ஸாரி. சக்கரங்கள் சரி செய்யப்படும் வரை சற்று பொறுமை காக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.”

எரிச்சலடைந்த பயணிகளைக் குளிர்விக்க இலவசமாக ஜூஸ் வழங்கினார்கள். இந்த விமானத்தைப் பிடிப்பதற்காக அதிகாலையிலேயே எழுந்து விட்டதால் ஏற்பட்ட அயர்ச்சியில் அப்படியே தூங்கிப் போனான் பரணி. 

வெகு நேரம் கழித்து ஸ்பீக்கரில் விமானியின் குரல் மறுபடி ஒலித்ததும் - திடுக்கிட்டு எழுந்தான். இரண்டு மணி நேரங்கள் கழிந்திருந்தன. கண்ணைக் கசக்கிக் கொண்டு முட்டை வடிவ ஜன்னலில் பார்க்க, ஃப்ளைட் இன்னமும் அப்படியே நின்று கொண்டிருந்தது. விமானி என்ன சொல்கிறார் என்று காதுகளைக் கூர்மையாக்கினான். 

டியர் பாஸஞ்சர்ஸ்! பழுதடைந்திருந்த சக்கரம் சரி செய்தாகி விட்டது. ஏற்கெனவே அறிவித்திருந்த படி கிளம்புவதற்காக கட்டுப்பாட்டு அறையுடன் பேசினோம். ஆனால் வானிலை சற்று மோசமடைந்திருப்பதால் இப்போது கிளம்ப அனுமதி கிடைக்கவில்லை. பலத்த மழை வருமெனெ எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் மழைக்குப் பின் வானம் தெளிவாகி விடும் என்று நம்பப்படுவதால் நீங்கள் சற்று பொறுமை காக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்!”

வாட்சைப் பார்த்தான் பரணி. மணி பனிரெண்டு ஆகி விட்டது. பணிப்பெண்கள் பயணிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியே பார்த்து, “வீ ஆர் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி. உங்களுக்கு லன்ச் பாக்ஸ் அளிக்க ஏற்பாடு ஆகிக் கொண்டிருக்கிறது.” என்றார்கள்.

இந்த விமானத்தில் உட்கார்ந்திருக்கும் நூற்றி சொச்சம் பயணிகளுக்கு நேரம் சரியில்லையா அல்லது இந்த விமானக் குழுவினருக்கு நேரம் சரியில்லையா என்று பரணிக்குப் புரியவில்லை. 

அடுத்தடுத்து மேலும் சில தடைகள். பெட்ரோல் அளவு குறைந்திருப்பதால் நிரப்ப வேண்டும் என்று கொஞ்ச நேரம் அலைக்கழித்தார்கள். எல்லாம் சரியாகி மெல்லமாய் ரன்வேயில் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தபோது அடுத்த குண்டு. பைலட்டின் அனுமதிக்கப்பட்ட பணி நேரம் முடிந்து விட்டதால்,  ஏவியேஷன் விதிகளின் படி விமானத்தை இன்றைக்கு இனி அவர் தொட முடியாது. ஆகவே ஃப்ளைட் கேன்சல் ஆகிறது. இரவு ஒன்பது மணிக்குக் கிளம்பும் வேறொரு விமானத்தில் எல்லோருக்கும் ரீ புக்கிங் செய்வதாகச் சொன்னார்கள்.

நிஷா இதற்குள் நான்கு முறை போன் செய்து விட்டாள். “ராத்திரி ஒன்பது மணிக்கு அடுத்த ஃப்ளைட்டா?  அது கிளம்பி இங்கே வந்து சேர மிட் நைட் ஆயிடும். பேசாம ஒரு வாடகைக் கார் எடுத்திருந்தா நியூயார்க்கிலிருந்து டி.சிக்கு நாலு மணி நேரத்தில் வந்து சேர்ந்திருக்கலாமே?”

அப்படியே செய்திருக்கலாமென தலையிலடித்துக் கொண்டான். லேட் ஞானோதயம். விமானச் சிப்பந்திகளிடம் போனான். “எக்ஸ்க்யூஸ்மீஎன்னோட விமானப் பயணத்தை மொத்தமா கேன்சல் பண்ணிருங்க. என் பெட்டியை மட்டும் எடுத்துக் கொடுத்தால் போதும். ஐ வில் டேக் ஏ ரென்ட்டல் கார்.”

அந்தப் பெண் லிப்ஸ்டிக் கலைந்து விடாதபடி ஜாக்கிரதையாக உதட்டைப் பிதுக்கினாள். “ஸாரி சார். கார்கோவிலிருந்து எந்தப் பெட்டியையும் எடுக்க முடியாது. ஒன்பது மணி ஃப்ளைட்டில் உங்கள் லக்கேஜ் வாஷிங்டன் வந்து விடும். நாளைக்குக் காலையில் உங்கள் வீட்டுக்கே பெட்டியைக் கொண்டு வந்து தர ஏற்பாடு செய்கிறோம்.”

பரணி தவிப்புடன் தலையை ஆட்டினான். வேறு வழியில்லை. வைர நெக்லஸ் பத்திரமாக வந்து சேர வேண்டும். மாலையில்தான் நண்பர்களுடன் பார்ட்டி. அப்போது சர்ப்ரைசாக நிஷாவின் கழுத்தில் மாட்டி விட்டால் போதும். அதற்குள் பெட்டியை டெலிவரி செய்து விடுவார்கள்.

ஏர்போர்ட்டிலேயே ஹெர்ட்ஸ் வாடகைக் கார் கிடைத்தது. ஸ்பாட்டிஃபையில் அனிருத் பாடல்களை ஓட விட்டுக் கொண்டு நெடுஞ்சாலை 95-ல் ஆக்சிலேட்டரை அழுத்திப் பிடித்தான். இரண்டு தடவை காபிக்கு நிறுத்தியதையும் சேர்த்து ஐந்தரை மணி நேரம் பிடித்தது வீடு வந்து சேர.

உப்புமா செய்து வைத்திருந்த நிஷா அவனைப் பார்த்து கேலியாகச் சிரித்தாள். “பெண்டாட்டியை விட்டுட்டு அடிக்கடி பிசினஸ் டூர் போனா இப்படித்தான் சாமி ஃப்ளைட்டை டிலே பண்ணுவார்.”

நிஷா, பெட்டி ஃப்ளைட்காரன் கிட்டே மாட்டிகிச்சேன்னு அப்செட்டா இருக்கேன். இதில் நீ வேற!”

அதிலே ரெண்டு செட் ஜட்டி, பனியன், பேன்ட், ஷர்ட், பேஸ்ட், பிரஷ் தவிர வேற என்ன இருக்கு? பெட்டி தொலைஞ்சே போனால்தான் இப்ப என்ன? ”

நீ கொஞ்சம் வாய் வெக்காம இருக்கியா?” பதட்டமானான் பரணி. 

மறுநாள் காலை எழுந்ததும் முதல் வேலையாக அந்த ஒன்பது மணி விமானம் சரியான நேரத்துக்குக் கிளம்பி வாஷிங்டன் டி.சி வந்து சேர்ந்ததா என்று கூகிளில் ஃப்ளைட் ஸ்டேட்டஸ் பார்த்தான். வந்திருந்தது. நிம்மதிப் பெருமூச்சுடன் ஃபோனை நோண்ட ஆரம்பித்த போது - ஏர்லைன்ஸில் இருந்து இன்னொரு இமெயிலும் வந்திருந்தது.

உங்கள் கேரீ ஆன் பெட்டி தவறுதலாக அட்லாண்டா செல்லும் விமானத்தில் அனுப்பப்பட்டு விட்டதால் நாளை மதியத்துக்குள் உங்கள் கைக்கு கிடைக்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறோம். தவறுக்கும், தாமதத்துக்கும் மிகவும் வருந்துகிறோம்.’ 

அதைப் படித்ததுமே உச்சி வரை ஆத்திரம் ஏற படுக்கையை ணங் ணங் எனக் குத்தினான் பரணி. திடுக்கிட்டு விழித்த நிஷா, “என்னங்க ஆச்சு?” என்றாள்.

என்னோட பேகேஜ் இன்னிக்கும் வராது.”

ஸோ வாட்?அதுக்காக ஏன் இவ்வளவு கோபம்?”

இதற்கு மேல் அவனால் ரகசியம் காக்க முடியாது என்று தோன்றியது. பெட்டியில் மாட்டிக் கொண்ட சர்ப்ரைஸ் வைர நெக்லஸைப் பற்றிச் சொல்லி விட்டான். ஒரு விநாடி துணுக்குற்றாலும், மறு விநாடி சிரித்தாள் நிஷா. 

பரணி, உங்க நேசத்தை மதிக்கிறேன். ஆனா விலையுயர்ந்த பொருள்களில்தான் அன்பு இருக்கணும்ன்னு நான் நினைக்கலை. அது கொஞ்ச நேர அற்ப மகிழ்ச்சி. மத்தவங்க கிட்டே சொல்லி பெருமைப்பட உதவும். ஒரு நிமிஷம் கண்ணை மூடி நான் சொல்லுவதைக் கற்பனை பண்ணுங்க. இந்த அஞ்சாவது கல்யாண நாளன்னிக்கு இதே மாதிரி ஏதோ ஒரு ஏர்லைன்சின் குளறுபடியால ஒரு விபரீதம் ஆகி நானும், நீங்களும் யாருமே இல்லாத ஒரு தனி தீவில் மாட்டிகிட்டோம்ன்னா அப்போ எனக்கு என்ன பரிசு தருவீங்க?”

சட்டென அவளை அணைத்து நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் இட்டான் பரணி.

இதுவரை ஒவ்வொரு மணநாளும் உங்களோட ஒண்ணை ஒண்ணு மிஞ்சும் பரிசுப் பொட்டலத்தைப் பத்தின பேச்சிலேயேதான் கழிஞ்சிருக்கு. ஐ பெட் யூ. இதை விட பெஸ்ட்டா ஒரு திருமண நாள் பரிசை இனி உங்களால கொடுக்க முடியாது.” ◼︎

 

You are free to share the link to this page anywhere on social media or other websites. But copying/displaying this content on other websites or reproducing this content on any other media/format including but not limited to a book/audio/video is strictly prohibited and subject to legal action.

இந்தப் பக்கத்தின் இணைப்பை சமூக வலைத்தளங்களிலோ, பிற இணைய பக்கங்களிலோ பகிரும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் இந்தப் பக்கத்தில் உள்ள படைப்பை நகலெடுத்து வேறு தளங்களில் வெளியிடுவதோ, அல்லது இந்தப் படைப்பை நூலாகவோ, ஒலி அல்லது அசைபடம் உட்பட வேறெந்த வடிவத்திலும் மறு உருவாக்கம் செய்யும் உரிமை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அது சட்டப்படி குற்றமாகும்.

கதைகளில் வரும் சம்பவங்களும், பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.
சத்யராஜ்குமார்
சத்யராஜ்குமார்
A writer who cares about readability...

Related Articles