அந்நிய துக்கம்
அந்நிய துக்கம்

அந்நிய துக்கம்

ச்சனாரி ரயில்வே கேட் சாத்தியிருந்தால். பஸ்ஸில் வருபவர்கள் சலிப்புத் தட்டுவார்கள். அழகுவின் முகத்தில் சந்தோஷம் வந்து குதிக்கும். கிழிந்த அரை டவுசரை அரைஞாண் கயிற்றால் இறுக்கிக் கொண்டு, வட்டமான தட்டைக் கூடையைத் தோளில் தூக்கிக் கொள் ளுவான். கேட் சாத்தியதால் தங்கி விட்ட பஸ் ஸில் ஒரு வீரனைப்போலப் பாய்வான்.

"கல்லே... கல்லே... வேர்க்கல்லே."

"உச்சி வெய்யிலுக்கு எப்படி வேர்த்து வடியுது. வேர்க்கல்லேங்கறியே தம்பி!" - சில பேர் ஜோக் மட்டும் அடிப்பார்கள். வேர்க் கடலை வாங்கமாட்டார்கள். பாலிதீன் பைகளில் அடைத்த சின்ன சின்ன வேர்க் கடலைப் பாக் கெட்டுகள். சின்தடிக் சர்ட் ஜேபியில் நூறு ரூபாய் நோட்டுகள் கண்ணாடிபோலத் தெரி கின்றன. ஐம்பது பைசாவுக்கு என்னமாய் யோசிக்கிறார்கள்.

அந்த லெவல் க்ராசிங்கிற்கு அப்பா லிருக்கும் சேரிதான் அழகுவின் சாக்கடைகளும், சகதிகளும் நிரம்பிய அன்னை பூமி. அவன் பெயருக்கும் உருவத்துக்கும் மயிரிழை சம்பந்தமு மில்லை. நாலாங்கிளாஸ் வரை பள்ளிக்கூட வாசனை. ஸ்கூலில் தமிழ் வாத்தியார் மட்டும் தான் அவனை அழுத்தந்திருத்தமாய் உச்சரிப் பார். மற்றவர்கள் எல்லாருமே, 'அளகு.. அளகு...' சமயத்தில், 'அலகு'.

போன வாரம் அவன் அப்பா வாயில் நுரை தள்ளி செத்துப்போனார். அழகுக்கு அதில் சொற்பமும் துக்கமில்லை. அவர் என்ன வேலை பார்த்தார் என்று இன்றைய தேதி வரை அவனுக்குத் தெரியாது. அவனைப் பொறுத்தவரை அநேக நேரங் களில் கள்ளச் சாராயபோதையுடன் வாய் குழறுபவர். பல சமயம் மொக்கைக் காயங்களுடனும், சில சமயம் ரத்தக் காயங்களுடனும் வீடு திரும்புபவர். நள்ளிரவில் அம்மாவின் கூந்தலைக் கொத்தாகப் பற்றி உலுக்குபவர். அவளை அடித்து, உதைத்து, வயிற்றில் மிதித்து துவம்சம் செய்பவர். பின்னிரவுகளில் அவர் அம்மாவிடம் கொஞ் சலாகவும், கெஞ்சலாகவும் பேசுகிற மாதிரி குரல் கேட்கும். கனவு என்று நினைத்து தூக்கத்தில் கரைந்துபோவான் அழகு.

அம்மா கறுப்பாயிருந்தாலும் அவனுடைய மிகச் சின்ன வயதுகளில் விக்கிரகம் மாதிரி அழகாய் இருந்ததாய் ஞாபகம். இப்போது நோஞ்சான் விக்கிரகம். இருமல் சத்தம் அப்பாவிட மிருந்து தொற்றிய குடும்ப கீதம். அடிவயிற்றை எக்கிக் கொண்டு கிளம்பும் அதே பாணி இருமல் குளிர் காற்றடித்தால் அழகுக்கும் வரும்.

அம்மாதான் பாதி கிளாஸ் நடக்கையில் ஒரு நாள் பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிப்போனாள். "இனிமே இஸ்கூல் வேணாம் அளகு.."

ஏன் எதற்கு என்று கேட்கவில்லை. அவனுக்கு விடுதலை... சந்தோஷம்.... அண்ணாச்சி கடையில் கொண்டுபோய் விட்டாள்.

"அண்ணாச்சி (இருமல்) எனக்கும் இப்பல்லாம் ஆவற தில்லை. இவங்கப்பன் வெவகாரந்தான் ஒங்களுக்குத் தெரியுமே. ஒரு செல்லாக்காசு சம்பாதிச்சுப்போடத் துப்பில்லாத ஆளு. இனிமே அளகு கொண்டாந்தாத்தான் அடுப்புல பொங்கிப்போட முடியும்."

அண்ணாச்சி இரண்டு நாள் அவனைக் கடையில் வைத் திருந்தார். அன்பாக, பொறுமையாக, தெளிவாக, நிதானமாக கடைசி யில் பொறுமை இழந்து ஒரு குட்டுக்குட்டி சொல்லிக் கொடுத்தும் அழகுக்குப் பொட்டலம் கட்டும் கலை சுலபத்தில் கை வரவில்லை.

"சும்மா வெச்சு காசு தரமுடியுமா? கூட்டிட்டுப்போயி ரம்மா. இங்க இவனுக்கு வேலையில்லை."

"அண்ணாச்சி... அண்ணாச்சி..." அழுது அரற்றினாள் அம்மா. என்ன இது இழவாகப்போயிற்று என்று யோசித்த அண்ணாச்சிக்கு நிர்ப்பந்தத்தில் அந்த யோசனை பிறந்தது. தட்டைக் கூடையை எடுத்து அழகுவின் கையில் கொடுத்தார். பாட்டிலின் தகரமூடியை சுழற்றிக் கழற்றி கடலைப் பாக்கெட்டுகளைத் தட்டைக் கூடையில் கொட்டிப் பரப்பினார்.

"ரயில்வே கேட்டுக்குப்போ. ஒரு பாக்கெட் வித்தீன்னா உனக்குப் பத்துக்காசு."

கட்டிப்போட்ட மாதிரி கடைக்குள் கிடப்பதை விட அழகுக்கு இது பிடித்தது.

தட்டைக்கூடையைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு ஈச்சனாரி ரயில்வே கேட்டுக்கு ஓடினான். கோவை-கொச்சின் எக்ஸ் பிரஸ் ரயில்கள், சரக்கு ரயில்கள் குறைந்தது ஒரு மணி நேரத்துக் கொரு தரமாவது அந்த வழியாகச்செல்லும். முணுக்கென்றால் கேட்டை சாத்திவிடுவார்கள். கேட் சாத்தினால் அந்தப்பக்கமும், இந்தப்பக்கமும் சில லாரிகள், பத்துப் பதினைந்து பஸ்களாவது தேங்கிப்போகும்.

"கல்லே... கல்லே... வேர்க்கல்லே..."

அழகுவின் சத்தம் கேட்டால் சில குழந்தைகள் அடம் பண்ணி வாங்கும். பெரும்பாலான வெள்ளுடுப்பு ஆசாமிகள் இவனைப் பார்ப்பதே பாவம் என்கிற மாதிரி விறைப்பாய் முகத் தைத் திருப்பிக் கொள்வார்கள். பஸ்ஸில் வரும் கிராமத்து ஜனங்கள் தான் கல்மிஷமில்லாமல் பேசி அவனிடம் கடலைப் பாக்கெட்டுகள் வாங்குவார்கள்.

சில சிடுமூஞ்சிக் கண்டக்டர்கள் அவன் படிக்கட்டில் காலை வைத்தாலே நாயை விரட்டுகிற மாதிரி விரட்டித்தள்ளுவார்கள். வேறு சில கண்டக்டர்கள் தயவான்கள்போல் அவனை பஸ்சுக்குள் அனுமதித்து விட்டு, இறங்கிப்போகையில் ஒரு வேர்க்கடலைப் பாக்கெட்டை முழுசாய் லவட்டிக்கொள்வார்கள். ஐந்து பாக்கெட்டு கள் விற்றால் அழகுக்குக் கிடைக்கக் கூடிய ஐம்பது பைசா அநியா யமாய்ப் பறிபோகும்.

"அண்ணே... அண்ணே..." என்று கண்டக்டரிடம் கெஞ்சு வான். குழைவான்.

"பஸ்சுக்குள்ளே எவ்வளவு பாக்கெட் விக்கறே? ஒண்ணு தந்தா கொறஞ்சாபோய்டுவே? அப்றம் நாளைலேர்ந்து இந்த கேட்ல ஒரு பஸ்ல காலை வைக்க முடியாது... ஜாக்ரதை. அங்க பாரு எஸ்ஸார்ட்டி வந்து நிக்குது. ஓடு."

அந்த நிமிஷம்தான் காத்திருப்பு வரிசையில் கோத்துக் கொண்ட அந்த பஸ்சுக்கு ஓடுவான். தினமும் அடித்துப் பிடித்து எழுபத்தைந்திலிருந்து நூறு பாக்கெட்டுகள் வரை விற்று விடுவான்.

அதற்கப்புறம் பாத்திரம் தேய்க்கவும் துணி துவைக்கவும் வீடுகளுக்குப்போவதை அம்மா நிறுத்திவிட்டாள். அந்த எலும்பை உருக்கும் இருமலால் நிறுத்தப்பட்டு விட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். அவளால் உடம்புக்கு முடியவில்லை என்பது ஒருபுறம். எச்சில் தெறிக்க அவள் இருமுவதை மற்றவர்கள் அசூசையாய்ப் பார்த்தார்கள் என்பது இன்னோர்புறம்.

அழகுவின் வியாபார நிம்மதி ஒரு மாதம் கூட நீடிக்க வில்லை. அன்றைக்கு கேட் சாத்தி பஸ் ஒன்று வந்து நின்றதும் -

"கல்லே... கல்லே... வேர்க்கல்லே..."

பஸ்சுக்கு அந்தப்பக்கம் அசரீரி மாதிரி புதிய குரல். அழகு திடுக்கிட்டு பஸ்ஸை சுற்றிக்கொண்டு அந்தப்பக்கம்போய்ப் பார்த் தான். அவனை மாதிரியே இன்னொரு பொடியன், அவனிடம் ஐம்பது காசு கொடுத்து ஜன்னல் வழியாக ஒருவர் வேர்க்கடலைப் பாக்கெட்டை வாங்கிக் கொண்டிருந்தார்.

அழகுக்குள் ஆத்திரப்புயல். தன்னுடைய காசை இன்னொ ருவன் தட்டிப் பறிக்கிற உணர்வு. அவன் தோளைத் தொட்டுத் திருப்பினான்.

"யார்ரா நீ?"

"ராக்கப்பன்."

"இங்க எதுக்கு கடலை விக்கறே?" 

"வித்தா உனக்கென்ன?"

"நாந்தான் மொதமொதல்லே இங்கே வந்தது. ஒரு மாசமா விக்கறேன் தெரியுமா?" 

"செட்டியார் கேட்டாண்டபோய் என்னைக் கடலை விக்கச்சொன்னார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். கல்லே... கல்லே... வேர்க்கல்லே...." 

"டேய் மரியாதையா வேற எங்கயாச்சும்போய்டு."

"போவலைன்னா?"

"கை வெச்சா கன்னம் பிஞ்சுரும்." 

"இந்த மிரட்டலெல்லாம் இளிச்சவாயன் எவன்கிட்டயாச்சும் வெச்சுக்க. என்கிட்ட வாணாம். கல்லே... கல்லே... வேர்க்கல்லே..."  

"தம்பி, இங்க ஒரு பாக்கெட் குடு."

ராக்கப்பன் வேர்க்கடலைப் பாக்கெட்டை எடுத்துக் கொடுக்க, அழகு உட்சபட்ச கோபத்தைத் தொட்டான். அந்தப் பாக்கெட்டைத் தட்டி விட்டான். ராக்கப்பன் அழகுவின் கூடை யைத் தள்ளினான். பாக்கெட்டுகள் சிதறின. அழகு அவன் சட்டைக் காலரைப் பற்றி உலுப்பி, அவன் இவன் கன்னத்தில் அறைந்து, காலை இடறி, இருவரும் தரையில் புரண்டு, புழுதியில் குளித்து... 

ரயில் இரைச்சலுடன் கடந்து, கேட் திறந்தது. பஸ்கள் ஒவ்வொன்றாய்க் கரைந்தன. ஒரு பாக்கெட் கூட விற்கவில்லை.

அதற்கப்புறம் ஒரு ஒப்பந்தம் பண்ணிக் கொண்டார்கள். கேட்டுக்கு இந்தப் பக்கம் அழகு விற்பது. அந்தப் பக்கம் ராக்கப்பன். நிலைமை சரியானது. விரோதம் கலைந்து ஸ்நேகம் தழைத்தது. ராக்கப்பனை ராக்கு என்று செல்லமாய்க் கூப்பிட்டான் அழகு. கேட் திறந்திருக்கும் சமயங்களில் மர நிழலில் உட்கார்ந்து இருவரும் ரஜினி படம் பற்றி அரட்டை அடிப்பார்கள்.

அம்மாவின் உடம்பு சற்று மோசமாயிற்று. இருமல் சூரணம் வாங்க ஒன்றோ, இரண்டோ பணம் பத்தலை என்றால் சில சமயம் ராக்கு இரக்கப்பட்டுக் கைமாற்றுத் தருவான்.

இந்தக் கூட்டணி விற்பனைக்கும் விரைவில் இடிவிழுந்தது. புற்றீசல் மாதிரி மேலும் சில வேர்க்கடலை விற்கும் பையன்கள் அங்கே தோன்றினார்கள். அங்கு கேட் சாத்தும்போது வியாபாரம் ஆவது புரிந்து சுந்தராபுரத்துக் கடைக்காரர்கள் எல்லாரும் ஆளுக் கொரு அன்றாடங்காய்ச்சிப் பையனை அனுப்பி வைத்தார்கள்.

இந்த ஜனங்களுக்கு ஒரு பழக்கம். செடி சத்தையை அகற்றி, முள் புதர்களை விலக்கிப்போடும் வரை வேடிக்கை பார்ப்பார்கள். பாதை கிடைத்து விட்டால் மந்தை மந்தையாய்ப் புகுந்து பாதைபோட்டவனையே மிதித்துக் கொண்டு முன்னால்போவார்கள்.

அதற்கப்புறம் கேட்டுக்கு இங்குமங்கும் பஸ்கள் வந்து நின்றால் -

"கல்லே... கல்லே... வேர்க்கல்லே..."

"கல்லே... கல்லே... வேர்க்கல்லே..."

"கல்லே... கல்லே... வேர்க்கல்லே..."

ஏகப்பட்ட குரல்கள்.

ஒரு பாக்கெட் விற்பது கூட ஜாக்பாட் விழும் மாதிரி, லாட்டரி அதிர்ஷ்டம் மாதிரி ஆகிப்போனது. அதற்கும் எத்தனை சர்க்கஸ்கள், மாரத்தான்கள்.

அண்ணாச்சி பாக்கெட்டுக்குப் பதினைந்து பைசா என்று கமிஷனை உயர்த்திய பின்னும் அழகு திணறினான். ஒரு நாளைக் கெல்லாம் நாற்பது பாக்கெட் விற்றால் அது பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.! ஒரு பஸ் வந்து நின்றால் எல்லோரும் பறந்தடித்துக் கொண்டு ஓடி னார்கள். கடலை வாங்கும் ஆசாமிக்கு எந்த மூஞ்சி பிடிக்கிறதோ அவனுக்கு ஒரு பாக்கெட் விற்கும். ஐம்பது பைசாவுக்கு என்னமாய் அடிதடி!

அஞ்சுக்கும் பத்துக்கும்போராட்ட நாட்கள் நகர்ந்தன.

அன்றைக்கு அழகு ரொம்ப படபடப்பாயிருந்தான். எந்த வண்டி வந்தாலும் பேய்த்தனமாக ஓடிப்போய், கல்லே... கல்லே... என்று வெறி பிடித்த மாதிரி கத்தினான். அவன் சத்தத்தையும், வேகத்தையும் பார்க்க ராக்குவுக்கே பயமாய் இருந்தது.

"அளகு, ஏன் ஒரு மாதிரி இருக்கே? வெறி பிடிச்ச மாதிரி அலையறே?"

"இன்னிக்கு ஒண்ணல்ல... ரெண்டல்ல... நூத்தம்பது பாக் கெட்டை நா வித்தாகணும் ராக்கு!" 

"விளையாடறியா? அம்பது வித்தா அதிசயம். தட்டைக் கூடையைத் தூக்கிக்கிட்டு பத்துப் பேராச்சும் சுத்தறோம். வாங்கற வனை விட விக்கறவன் அதிகமா இருப்பான்போலிருக்கு. யாரைக் குத்தஞ் சொல்றது! எல்லாரும் வயத்துப் பசிக்காகப் பறக்கறாங்க." 

அழகுவின் கண்ணில் கண்ணீர் சுரந்து மின்னியது.

"நா இன்னிக்கு வயத்துப் பசிக்காக விக்கலை ராக்கு. அம்மா இருமல் முத்திப்போய் தர்மாஸ்பத்திரில கிடக்கறாங்க. மருந்து வாங்கணும். ஊசி மருந்து இருவத்தஞ்சு ரூபா. ஆஸ்பத்திரில ஸ்டாக்கு இல்லியாம். அதைப்போட்டாத்தான் அம்மா பிழைக்கும்."

கேட் சாத்தினார்கள்.

ஒரு பஸ் கேட் அருகே வந்து ஓய பாய்ந்தான் அழகு.  

"தம்பி, சாயந்திரத்துக்குள்ள ஊசி மருந்து வாங்கிட்டு வா."

"கல்லே... கல்லே... வேர்க்கல்லே..."

அந்த பஸ்சில் அவ்வளவாய்க் கூட்டமில்லை. வேகமாய் ஒரு ரவுண்ட் அடித்தான். 'அம்மா அழாதம்மா. அண்ணாச்சி கிட்ட ஒரு கூடை நிறைய பாக்கெட்போடச் சொல்லியிருக்கேன். அத்தனையும் வித்துப்புட்டு சாயந்திரம் மருந்தோட வரேன்.' மன்னார்சாமி குறுக்கே வந்து இரண்டுபோணியைக் கெடுத்தான்.

ரயில்வே கேட்டுக்கு அந்தப் பக்கம் ஜனமூட்டையை அடைத்துக் கொண்டு இன்னொரு பஸ் விர்ரென வந்து நின்றது.. இன்று ஒரு பஸ்சை விடக்கூடாது.

'பஸ்சுக்கு நாலு பாக்கெட்.'

'சிஸ்டர், ஏழாம் நம்பர் பெட் சனியன் எப்ப இருமலை நிறுத்தும்?' 

சில பையன்கள் அந்த பஸ்சை நோக்கி ஓடினார்கள். 'முந்து அழகு. விற்பனைக்கு முந்து அழகு. ஊசி மருந்து!'

அழகு சுதாரித்து ரயில் கேட்டின் சுழலும் விக்கட் நுழைவில் புகுந்தான்.

மனசு ஆஸ்பத்திரியிலும், உடல் பஸ்சை நோக்கியும் நிலைத்தன. வேறு சிந்தனை இன்றி அந்த பஸ்சையே குறி வைத்து தண்டவாளத்துக்குக் குறுக்கே படுவேகமாய் ஓடினான்.

தட்!

ஒரு துரதிர்ஷ்ட விநாடி அழகுவின் காலை தண்டவாளத் தில் இடறிவிட்டது.

"அம்மாஆ..."

தண்டவாளத்தின் நடுவே கடலைப்பாக்கெட்டுகள் சிதற குப்புற விழுந்தான் அழகு.

ரயில் வருவதைக் கூட கவனிக்காமல் குறுக்கே பாய்கிறானே இந்த அழகு! விரைந்து வரும் ரயிலைப் பார்த்து ராக்குவின் கண்கள் பயத்தில் விரிந்தன.

"அளகு... அளகு..." - கத்தினான் ராக்கு.

என்ஜின் டிரைவர் விழுந்து கிடக்கும் அழகுவைப் பார்த்து விட்டார். பிரேக்கைப் பிரயோகித்தார். உடனே நிற்குமா அந்த ராட்சத வாகனம். எழ முயலும் அழகுவை ஆவேசமாய் சக்கரங்கள் விழுங்கின. சிவப்புத் தெறிக்க அவனை அரைத்து, அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துக் கொண்டுபோய் நின்றது நீளமான அந்த எக்ஸ்பிரஸ் ரயில்.

ரத்தத் துகள்களாய்க் கிடக்கும் அழகுவைச் சுற்றி, நிமிஷத் தில் கும்பல் கூடியது. ராக்கு சதைத் துணுக்குகளைப் பார்த்து தலை தலையாய் அடித்துக் கொண்டு அழுதான்.

றக்குறைய அதே விநாடி -

ரயிலின் கடைசி கம்பார்ட்மென்ட்களில் குரல்கள்.

  "கல்லே... கல்லே... வேர்க்கல்லே." 

"என்னாச்சு தம்பி? ஏன் ரயில் நின்னுருச்சு?" 

"ஆக்ஸிடெண்ட்டு. ஒரு பையன் ரயில்ல அடிபட்டு செத்துட்டான். கல்லே... கல்லே... வேர்க்கல்லே."◼︎

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை, கல்கி - 07 ஆகஸ்ட் 1994
You are free to share the link to this page anywhere on social media or other websites. But copying/displaying this content on other websites or reproducing this content on any other media/format including but not limited to a book/audio/video is strictly prohibited and subject to legal action.

இந்தப் பக்கத்தின் இணைப்பை சமூக வலைத்தளங்களிலோ, பிற இணைய பக்கங்களிலோ பகிரும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் இந்தப் பக்கத்தில் உள்ள படைப்பை நகலெடுத்து வேறு தளங்களில் வெளியிடுவதோ, அல்லது இந்தப் படைப்பை நூலாகவோ, ஒலி அல்லது அசைபடம் உட்பட வேறெந்த வடிவத்திலும் மறு உருவாக்கம் செய்யும் உரிமை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அது சட்டப்படி குற்றமாகும்.

கதைகளில் வரும் சம்பவங்களும், பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.
சத்யராஜ்குமார்
சத்யராஜ்குமார்
A writer who cares about readability...