சதுரங்கத்து தேவதை
ஓவியம்: சித்ரன் ரகுநாத்

சதுரங்கத்து தேவதை

ன் பெயர் ராணி!” என்றாள். 

அந்தக் காபிக் கடையில் அவளைப் பல முறை பார்த்து விட்டான். மூலையிலிருக்கும் மேஜையில் செஸ் போர்டோடு உட்கார்ந்திருப்பாள். வெள்ளைக் காயை நகர்த்துவாள். ஒரு வாய் காபியை உறிஞ்சிக் கொண்ட பின், போர்டை வெறித்தபடியே யோசித்து முடித்து, கருப்புக் காயையும் அவளே நகர்த்துவாள்.

வெகுநாள் தூரத்திலிருந்தபடி சின்ன புன்னகைப் பரிமாறல். சமீப காலமாகக் கொஞ்சம் அருகிலுள்ள மேஜையில் அமர்வதை வாடிக்கையாய் வைத்திருந்தான். அப்போதும் பேசத் துணிந்ததில்லை. அவளாகப் பேசுவாள் என்று காத்திருந்து பொறுமையிழந்து அவனே சிறு சம்பாஷணைகளைத் துவக்க முயற்சி செய்தான். இன்றைக்கு பெயர் கேட்கும் அளவுக்கு நெருங்கி வந்திருக்கிறான். 

அமெரிக்காவில் சில சமயம் பெண் பார்க்கும் படலம் இப்படித்தான் இயங்குகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி நாட்களில் ஆண்/பெண் நட்பைத் தவற விட்டவர்கள் பிற்பாடு துணை தேடுவது அத்தனை சுலபமில்லை. மது அருந்தும் ஸ்போர்ட்ஸ் பாரிலோ, இது போன்ற காபிக் கடைகளிலோ நட்பைப் பிடிக்க வேண்டும்.

“The Queens Gambit டிவி தொடரோட எஃபக்ட்டா?” என்று கேட்டான். அவள் முகம் சட்டென மாறியதால் பதட்டம் உண்டானது. 

அந்த நெட்ஃப்ளிக்ஸ் வெப் சீரிஸ் வந்த பிறகு அதிகமான பெண்கள் செஸ் விளையாடுவதில் ஆர்வம் காட்டத் துவங்கியதாகப் படித்திருந்தான். செஸ் டாட் காம் தளத்தில் மட்டும் இரண்டரை மில்லியன் பேர் அந்த வெப் சீரீஸ் பாதிப்பினால் புதிதாக இணைந்தார்களாம். 

ஸாரி, அந்தக் கேள்வி ஒரு ஜோக்தான். பிடிக்கலைன்னா திரும்ப எடுத்துக்கறேன்.”

அவன் பதட்டம் கண்டு ராணியின் முகத்தில் அரும்பியது மெலிதான ஒரு புன்னகை. “எஸ், சிரிப்பு வரலை. ஏன்னா நான் அஞ்சு வயசில் இருந்து செஸ் விளையாடுகிறேன்.”

இப்படித் தனியாவா?”

இந்த விளையாட்டின் சிறப்பம்சமே அதுதான். என்னோட வெள்ளைக் காய் நகர்த்தலுக்கு சவாலான கருப்புக் காய் நகர்த்தலை நானே யோசிக்கணும். அதை முறியடிக்க மறுபடியும் வெள்ளைக் காயை நகர்த்த யோசிக்கணும். எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கணும்ன்னா மத்தவங்களோட அல்ல; முதலில் உங்களோட நீங்களே போட்டி போடணும்ன்னு சொல்வாங்க கேட்டிருக்கீங்களா?”

பெரிய தத்துவமா இருக்கே?” என்றான் புன்னகையோடு. 

செஸ்ஸை விளையாட்டா பார்த்தா விளையாட்டு. ஆர்ட்டா பார்த்தா இது ஒரு ஆர்ட். சைக்காலஜிஸ்ட்களுக்கு இது ஓர் உளவியல் கருவி. ஹங்கேரியைச் சேர்ந்த சைக்காலஜிஸ்ட் போல்கர் உளவியல்ரீதியா ஆராய்ந்து, பரிசோதிச்சு தன்னுடைய மூன்று மகள்களையே உலகத்தின் தலை சிறந்த செஸ் ஆட்டக்காரர்களாக உருவாக்கியிருக்கார். அஃப் கோர்ஸ் சின்ன வயசிலிருந்தே செஸ் எனக்கு தத்துவக் களம். வாழ்க்கையைக் கத்துக் கொடுத்திட்டிருக்கு.”

அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். லேசாக அடிபட்ட மாதிரி அவளைப் பார்த்தான். “ஸாரி, இதுக்கு மேல இந்த விளையாட்டைப் பத்தி நான் ஏதாவது கேட்டேன்னா என்னோட அறியாமை எல்லாமே வெளிப்பட்டு விடும் போலிருக்கு. ஆனா இன்னும் தெரிஞ்சிக்கணும்ன்னு ஆர்வமாகவும் இருக்கு.”

அவனுடைய சரணாகதியை அவள் ரசித்த மாதிரிதான் தோன்றியது. புன்னகைத்தாள். “விளையாடத் தெரியுமா?”

இல்லைஎன்று தலையசைத்தான்.

இரண்டு கைகளையும் மடக்கி அவன் முன்னால் நீட்டினாள். “இரண்டில் ஒண்ணைத் தொடுங்க.”

சற்றே தயக்கத்தோடு அவளுடைய வலது கை முஷ்டியைத் தொட்டான். ஸ்பாஞ்சின் மேல் கை வைத்தது போல மென்மை. அவன் தொட்டதும் அப்படியே இரண்டு கைகளையும் 180 டிகிரி திருப்பி விரல்களைத் திறந்தாள். ஒரு கையில் கருப்பு சிப்பாயும், இன்னொரு கையில் வெள்ளைச் சிப்பாயும் இருந்தது. 

உங்களுக்கு வெள்ளை வந்திருக்கு. எனக்குக் கிடைச்சது கருப்பு. நீங்கதான் முதலில் ஆடணும்.  ஒயிட் ஆல்வேஸ் ஹேஸ் லிட்டில் அட்வான்ட்டேஜ். இப்படித்தான் வாழ்க்கையோட ஆரம்பமும் அதிர்ஷ்டவசமா சிலருக்கு வசதியோட துவங்குது. மத்தவங்க பிறப்பால் ஒரு படி முன்னால் இருப்பவங்களோட போட்டி போட வேண்டியிருக்கு. போட்டியில் ஜெயிக்கலாம், இல்லை தோற்கலாம். நிச்சயமில்லை.”

சொல்லிக் கொண்டே இரண்டு பக்கமுமாகக் காய்களை அடுக்கினாள். 

இது ஒரு குட்டி உலகம். மொத்தம் அறுபத்திநாலு கட்டங்கள்தான் இதன் பரப்பளவு. அதுக்குள்ளே உங்க பக்கம் பதினாறு பேர், என் பக்கம் பதினாறு பேர். அவங்களை நீங்கதான் இயக்கணும்.”

கடவுள் மாதிரியா?” என்றான்.

இயற்கை மாதிரின்னும் வெச்சிக்கலாம்.” எனச் சிரித்தாள். “ஆனால் அந்தக் காய்களை நீங்க இயக்கறதா நினைச்சா தோத்துருவீங்க. ஒரு சிப்பாயோ, ஒரு யானையோ அல்லது குதிரையோநகர்த்தும்போது அதுவாகவே நீங்க மாறணும். அதன் பலம், பலவீனம் உங்களுக்குப் புரிஞ்சிருக்கணும். அப்போதான் வெற்றி உங்க கிட்டே வரும்.” 

வாவ். ஐ கான்ட் வெய்ட் டு ஹியர் மோர்.”

எஸ். நாம எல்லாருமே ஒரே மாதிரி திறமைகளோட படைக்கப்படலை. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பர்ப்பஸ் இருக்கு. அதைப் புரிஞ்சிகிட்டு எல்லாரையும் சரி சமமா மதிக்கணும். சிப்பாய்தானேன்னு அலட்சியப்படுத்தி இழந்துட்டா ராஜாவும், ராணியும் தோத்துருவாங்க.”

ராணி எப்படி நகரும். யானை எப்படி நகரும். குதிரை எப்படி நகரும். ஆர்வமாகச் சொல்லிக் கொடுத்தாள். 

அவளுடைய காபிக் கோப்பை காலியாகி விட, “இன்னொரு காபி? நான் வாங்கித் தரவா?” என்றான்.

அவள் புன்னகையுடன் தலையசைத்தாள். கிராண்ட் மாஸ்டர் ஆகி விட்டதைப் போல ஒரு மகிழ்ச்சிப் பெருக்கு முகத்தில் பரவ, கவுன்ட்டருக்கு ஓடிப் போய் கார்டைத் தேய்த்து ஆர்டர் பண்ணி, சூடான கருப்புக் காபியில் சர்க்கரையையும், வெளீரென்றிருந்த பாலையும் கவனமாய்க் கலந்து, ஒரு காதல் பவ்யத்தோடு அவளிடம் கொண்டு வந்து வைத்தான். 

ராணி ஒரு ராணி மாதிரி கம்பீரத்துடனே அவனைப் புன்னகையோடு பார்த்தாள். 

அவன் செஸ் பலகையின் முன்னால் அமர்ந்தான். “நீ சொன்ன மாதிரி கவனமா காய்களை நகர்த்துகிறேன். என்னோட ராஜாங்கத்தில் சோஷியல் ஜஸ்டிஸ் இருக்கும். எல்லாரையும் சமமா நடத்தப்போகிறேன். யாரையும் சுலபத்தில் விட்டுக் கொடுக்க மாட்டேன்.”

அவள் சிரித்துக் கொண்டே மறுத்தாள். “அது ஐடியல். ஆனா யதார்த்த உலகம் அப்படி இருக்கிறதில்லை. பை தி வே உங்க பேர் என்ன?”

ஸ்காட்.”

ஸ்காட், நிஜ உலகம் கொடூரமானதுன்னு எனக்கு செஸ்தான் புரிய வெச்சது. தேவை இருக்கிற வரைதான் உங்களுக்கான முக்கியத்துவம். நீங்க சிறப்பாவே கூட செயல்படலாம். ஆனா ஒரு கட்டத்துல உங்களோட தேவை தீர்ந்து போகும். நீங்க பாரமாயிடுவீங்க. ஒரு சிப்பாயாக இருக்கலாம். யானையாக இருக்கலாம். ஏன் ராணியாகக் கூட இருக்கலாம். ராஜாவின் வெற்றிக்காக பலியாக்கப்படுவீங்க. ரூக் ஸேக்ரிஃபைஸ்குயீன் ஸேக்ரிஃபைஸ்னு அழகா ஒரு பேர் குடுத்திருப்பாங்க. நிஜ வாழ்க்கைல தியாகிப் பட்டம் குடுத்து ஓரமா உக்கார வெச்சிடறதைப் போல. ஃபோட்டோவுக்கு மாலை கூட போட்டு விடலாம் அல்லது சிலை வெச்சு விடலாம்! ஸோ, எல்லா காய்களும் போர்டில் நிரந்தரமா இருக்கப் போறதில்லை. வெட்டப்பட்டு பெட்டிக்குள் போகத்தான் வேணும். அந்த நேரம் எப்ப வேணா வரும்.”

அவள் ஒரு யானையை வேண்டுமென்றே தியாகம் செய்து, அதனால் கிடைத்த வழியில் மற்ற காய்களை நகர்த்தி அடுத்த சில மூவ்களில் எதிராளி செக்மேட் ஆவதை செயல்முறையாக அவனுக்குக் காட்டினாள். 

ப்ரில்லியண்ட்.” என்றான் ஸ்காட்.

அப்படி சந்தோஷப்படும் போதுதான் நிறைய தவறு செய்து விடுகிறோம் ஸ்காட். எப்பவெல்லாம் நாம புத்திசாலின்னு நினைச்சிட்டு விளையாடறோமோ அப்போவெல்லாம் இங்கே சுலபமா தோத்துடறோம். இந்த விளையாட்டில் ஜெயிக்க எப்பவுமே அடி மனசில் ஒரு பயம் தேவைப்படுது.” 

யூ ஆர் ஒன் ஹண்ட்ரட் பர்சண்ட் ரைட் ராணி. வாழ்க்கையிலும் ஜெயிக்க ஜெயிக்க திமிர் வருது. அந்த திமிரே தோல்விக்கு காரணமாயிடுது. பயம் வேணும்.”

நம்மைச் சுத்தி எத்தனை வஞ்சகம் இருக்குன்னு தெரிஞ்சா பயம் தன்னால வந்துரும். லைஃப்ல குழந்தையா இருக்கிறப்போ அது தெரிவதில்லை. வளர வளரத்தான் புரிய ஆரம்பிக்குது. நாம பலஹீனமடையும் தருணத்துக்காகக் காத்திருக்காங்க. அதைப் புரிஞ்சிகிட்டு தாக்குதல் நடக்கிறது. உங்களை பலவீனப்படுத்துவதற்கான எல்லா உத்திகளையும் தொடர்ந்து செய்யறாங்க. உங்க பாதுகாப்பு அரண்களை உடைக்கிறாங்க. அதுக்கு ரிமூவல் ஆஃப் டிஃபென்ஸ்ன்னு பேர் கொடுத்திருக்காங்க. உங்க கண்ணு முன்னால சிரிச்சிட்டிருந்தவங்க முகமூடியைக் கழட்டி கோர முகம் காட்டற மாதிரி எக்ஸ்ரே அட்டாக். உங்களை சுத்தி வளைச்சு நிர்மூலமாக்க எத்தனை எத்தனை உத்திகள்!”

இது உன்னோட ஹோம் கன்ட்ரி இந்தியாவில் உருவான விளையாட்டுதானே?”

ஆமா. சுமார் ஆயிரத்தைநூறு ஆண்டுகளுக்கு முன்னால உருவானதுன்னு சொல்றாங்க. அங்கிருந்து மத்த நாடுகளுக்குப் பரவினது.”

இந்த விளையாட்டில் இவ்வளவு வாழ்க்கைத் தத்துவம் அடங்கி இருக்குன்னா வாழ்க்கையைப் பார்த்து உருவாக்கின விளையாட்டாகத்தானே இருக்கணும்?”

கண்டிப்பா ஸ்காட். துரோகம், வஞ்சகம், தந்திரம், தாக்குதல், வெற்றி, தோல்வி எல்லாத்தையுமே கொண்டு வந்து இந்த அறுபத்தினாலு கட்டத்துக்குள் அடைச்சிருக்காங்க. இதில் எதுவுமே புதுசில்லை. ஆயிரத்தைநூறு வருஷங்களுக்கு முன்னாலிருந்தே இருந்திருக்கு. இன்னும் அப்படியேதான் இருக்கு. மாறலை. ஆனா பண்பட்ட நாகரீகமான சமூகம்ன்னு மார் தட்டிக்கிறோம்.”

விளையாடிக் கொண்டே பேசிய ராணியைப் பார்த்து ஸ்காட் புதிரோடு கேட்டான். “ஏய், என்ன சிப்பாயைத் தூக்கிட்டு பெட்டியிலிருக்கிற ராணியைக் கொண்டு வந்து போர்டில் வெக்கிறே?”

அவள் சிரித்தாள். “இதுவும் இந்த விளையாட்டில் இருக்கு. வெட்டுப்படாம ஒரு சிப்பாய் எட்டாவது கட்டத்துக்கு வந்துட்டா அதை ராணியா மாத்திக்கலாம்.”

வாட்?”

எஸ். ஆயிரத்தைநூறு வருஷங்களுக்கு முன்னாலயே ஒரு சிப்பாய் ராணியாகலாம்ங்கிற இந்த அறிவியல் உண்மையை சகஜமா ஏத்துகிட்டிருந்திருக்காங்க.” புன்னகைத்தபடியே தொடர்ந்து சொன்னாள். “சின்ன வயசிலே என் பேர் கேசவன். ஒரு கட்டத்தில்ராணிங்கிற பெயர் எனக்கு நானே வெச்சிகிட்டதுதான் ஸ்காட்!”

அதற்கப்புறமும் ராணி அந்த காபி ஷாப்பின் மூலை மேஜையில் அன்றாடம் விளையாடிக் கொண்டுதான் இருந்தாள். தனியே. ◼︎

You are free to share the link to this page anywhere on social media or other websites. But copying/displaying this content on other websites or reproducing this content on any other media/format including but not limited to a book/audio/video is strictly prohibited and subject to legal action.

இந்தப் பக்கத்தின் இணைப்பை சமூக வலைத்தளங்களிலோ, பிற இணைய பக்கங்களிலோ பகிரும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் இந்தப் பக்கத்தில் உள்ள படைப்பை நகலெடுத்து வேறு தளங்களில் வெளியிடுவதோ, அல்லது இந்தப் படைப்பை நூலாகவோ, ஒலி அல்லது அசைபடம் உட்பட வேறெந்த வடிவத்திலும் மறு உருவாக்கம் செய்யும் உரிமை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அது சட்டப்படி குற்றமாகும்.

கதைகளில் வரும் சம்பவங்களும், பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.
சத்யராஜ்குமார்
சத்யராஜ்குமார்
A writer who cares about readability...

Related Articles