மாய வேலி
ஓவியம்: சித்ரன் ரகுநாத்

மாய வேலி

வாஷிங்டன் டிசி ஏர்போர்ட்டில் நகம் கடித்தபடி காத்திருந்தான் மனோ.

ஏன் இவ்வளவு டென்ஷன்?” என்றாள் வித்யா.

இமிக்ரேஷன் & கஸ்டம்ஸ் முடித்து பயணிகள்  வெளியே வரும் கருப்புப் பெயிண்ட் அடித்த அந்த பிரம்மாண்டமான கதவையே பார்த்தபடி, “அம்மா அமிஞ்சிக்கரையைத் தாண்டினதில்லை. ஃபர்ஸ்ட் டைம் அமெரிக்காவுக்கு தன்னந்தனியா வர்றா. அதான் டென்ஷன்.”

வித்யா அவன் பதட்டத்தை அவ்வளவாய் ரசிக்கவில்லை. “டிக்கட் போடறதுக்கு முன்னால யோசிச்சிருக்கணும். ஃப்ரெண்ட்ஸ் யாராவது வராங்களான்னு பார்த்து அதே ஃப்ளைட்ல அழைச்சிட்டு வந்திருக்கணும். அப்படி என்ன அவசரம்?”

மனோ பார்வை எங்கோ நிலைகுத்தி நிற்க பதில் சொன்னான். அவன் மனசு இளம்பிராயத்துக்குச் சென்றிருக்க வேண்டும். “அம்மாவோட உலகம் ரொம்பச் சின்னது வித்யா. அப்பாவையே சுத்திச் சுத்தி வந்த உலகம். அவளுக்கு அவளோட அம்மா, அப்பா... அவ்வளவு ஏன் நான் கூட அவ்வளவு முக்கியமில்லை. அப்பாவுக்காக சமைச்சு, அப்பாவுக்காக எல்லா பணிவிடைகளும் செஞ்சுபோன மாசம் அப்பா பொசுக்னு ஹார்ட் அட்டாக்கில் இறந்துட்டது அவளுக்கு எவ்வளவு பெரிய வெற்றிடம்ன்னு எனக்குத்தான் தெரியும். விசா இருந்திருந்தா காரியம் பண்ணப் போனப்பவே கூட்டிட்டு வந்திருப்பேன். இந்த  வாரம்தானே கிடைச்சது. அவளுக்கு ஒரு சேஞ்ஜ் வேணும்.”

அப்போ அவங்க வர வரைக்கும் அமைதியா இருங்க.”

எழுந்து போய் காபி வாங்கிக் கொண்டு வந்தான். வெளியே வந்த ஓரிருவரிடம் அம்மாவின் அடையாளங்களைச் சொல்லி, “டிட் யு ஸீ ஹர்?” என்று கேட்டு அவர்கள் உதடு பிதுங்குவதை பதிலாக வாங்கினான். 

வித்யா, அம்மாவுக்கு இங்கே எல்லாமே புதுசா இருக்கும். பொறுமையா சொல்லிக்குடு. லேசா முகம் கோணினாலும் அப்செட் ஆயிருவாங்க.”

சரி என்றோ, இல்லை என்றோ எதுவும் சொல்லாமல் மொபைல் ஃபோனை நோண்ட ஆரம்பித்தாள் வித்யா.

பயணிகள் பலரும் பெரிய பெரிய சூட்கேஸ்களோடு வெளியே வந்து அந்த இடத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கவே - நேரம் செல்லச் செல்ல அவன் பதட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. 

போன் நம்பர் எழுதிக் கொடுத்திருக்கிங்க இல்லே? ஏதாவதுன்னா கூப்பிடுவாங்க. அமைதியா இருங்க.” என்றாள் வித்யா மறுபடியும். 

அவள் சொல்வது சரிதான் என்று பட்டது. ஆனாலும் இதுவே அவள் அம்மா என்றால் அவள் இப்படி உட்கார்ந்திருக்க மாட்டாள். இந்நேரம் தான்தான் அவளுக்கு இது மாதிரி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தான்.

தோவராங்க.” என்று கை காட்டினாள்.

அம்மா புடவைக்கு மேலே ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு - டிராலியைத் தள்ளிக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். அவளுடன் ஓர் இளைஞனும் அவனுடைய பேகேஜ் டிராலியைத் தள்ளிக் கொண்டு வந்தான்.

மனோ ஓடிப் போய் அம்மாவைக் கட்டிக் கொண்டான். “பயந்துட்டேன் மா. ஏன் இத்தனை நேரம்? எல்லாம் ஓக்கேவா?”

இந்த தம்பிதான் ஹெல்ப் பண்ணார். தமிழ்தான்.”

மனோ அந்த இளைஞனுக்கு நன்றி சொன்னான். “தேங்க்யூ. அம்மாவுக்கு ஒண்ணும் தெரியாது. பயந்த சுபாவம் வேற. தனியா வராங்களேன்னு ரொம்ப பதட்டமாக இருந்தேன்.”

இங்க வந்து ஃபார்ம் நிரப்ப உதவி கேட்டாங்க. அவ்வளவுதான் ஸார். மத்தபடி ஷி ஈஸ் ஃபைன்.”

கையசைத்து அவன் அந்தப்பக்கம் செல்ல - அம்மாவை அழைத்துக் கொண்டு பார்க்கிங் கராஜ் பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

வித்யாவைப் பார்த்ததுமே கண்டு பிடித்து விட்டாள். “சொல்லவே இல்லை? எத்தனை மாசம்?”

வித்யா கொஞ்சம் திகைத்துத்தான் போனாள். “இது ரெண்டாவது மாசம் அத்தை. மாமா வேற படுத்துட்டாரா? சொல்லவே சந்தர்ப்பம் வாய்க்கலே.”

மனோ பேச்சை மாற்றினான்.

அம்மா, உனக்கு நம்ம ஊர் இங்கிலீஷே புரியாது. இமிக்ரேஷன்ல என்ன கேட்டான்? எப்படி சமாளிச்சே? சில சமயம் ரொம்ப டிரபுள் குடுத்துருவாங்க.”

அம்மா வெகுளியாய்ச் சிரித்தாள். “அவன் என்னவோ புஸ்ஸு புஸ்ஸுன்னு கேட்டான். நான் மய்யமா மண்டையை ஆட்டி சிரிச்சிட்டே நின்னேன். பாஸ்போர்ட் புஸ்தகத்துல சீல் வெச்சு நமஸ்தேன்னுட்டான். இவங்களுக்கு ஹிந்தி எல்லாம் தெரியுமா?”

மனோ சிரித்துக் கொண்டே அவள் பேகேஜ்களை காரில் ஏற்றினான். வித்யா அம்மாவை கார் சீட்டில் உட்கார வைத்து பெல்ட் போட்டு விட்டாள்.

என்னது கார்லயும்  ஏரோப்ளேன் மாதிரி பெல்ட் எல்லாம் போட்டுகிட்டு.”

சேஃப்டிக்குத்தான் அத்தை.”

நெடுஞ்சாலையில் கார் விரைந்து செல்லும்போது மிரர் வழியே அம்மாவைப் பார்த்தான். 

ஒரு குழந்தை மாதிரி ஜன்னலில் முகத்தைப் பதித்து அமெரிக்காவின் பிரம்மாண்டமான நிலப்பரப்பையும் - முகப்பு விளக்குகள் மின்ன வரிசை கட்டி ஓடும் கார்களையும், ஆங்காங்கே விருட்டென கடந்து செல்லும் உயர உயரமான கட்டிடங்களையும் அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டு வந்தாள்.

போன மாசம் அப்பா இறந்த போது அவள் இடிந்து போய்க் கதறிய கதறல் நினைவுக்கு வந்தது. தெருமுனையில் இருக்கும் அண்ணாச்சி கடையைத் தாண்டி அப்பா அவளைச் செல்ல விடவில்லை. எல்லாவற்றையும் தானே பார்த்துக் கொண்டார். எப்போதும் கடுகடுவென்றே இருப்பார். தான் எப்படிப்  பிறந்தேன் என்பதே அவனுக்குப் பிரதான ஆச்சரியம். தான் செய்வதே சரி என்பதில் அவருக்கு அசாத்திய நம்பிக்கை. தானே பெரிய அறிவாளி மற்ற எல்லோருமே கடைந்தெடுத்த முட்டாள்கள் என்பது போல திட்டிக் கொண்டிருப்பார். சின்ன வயசிலிருந்து அவனை மனோ என்று கூப்பிட்டதை விட முட்டாள் என்று அழைத்ததே அதிகம். அவன் அமெரிக்கா போனது அவருக்குப் பிடிக்கவில்லை. அதற்கப்புறம் பேச மறுத்து விட்டார். வித்யாவைக் காதலித்துக் கல்யாணம் பண்ணினது அந்தக் கோபத்தில் பெட்ரோல் ஊற்றி விட்டது. அதன் பிறகு அம்மாவுடன் போனில் பேசுவதோடு சரி. அவரைப் பிணமாகத்தான் பார்த்தான்.

அன்பாலதாண்டா அவர் கடிஞ்சி பேசறார். அவருக்கு அன்பைக் காட்டத் தெரியல.” என்று அம்மா பல தடவை சமாதானம் சொல்வாள்.

எதற்கெடுத்தாலும் அடிப்பது, திட்டுவதுஎதற்குமே அவளை நம்பாமல் இருப்பது, எல்லா நேரத்திலும் உர்ர்ரென்று சிடுமூஞ்சியோடு இருப்பது இதையெல்லாம் அன்பு என்ற போர்வையில் பார்க்க அம்மாவால் மட்டும்தான் முடியும். 

கூட்டுப்புழு வாழ்க்கையை வாழ்ந்து விட்ட அம்மாவுக்கு வெளி உலகம் மாறுதலாக இருக்கும். அதுவும் அமெரிக்கா. இங்கே பெண்கள் சுதந்திரமாகவும், சுய மரியாதையோடும் வாழ்வதைப் பார்க்கட்டும். கடைசி காலத்திலாவது கொஞ்சம் புதிதாகக் கற்றுக் கொள்ளட்டும். உலக ஞானம் பெறட்டும்.

அதற்கு - தான் முதலில் பழைய ஞாபகங்களை அசை போடுவதை நிறுத்த வேண்டும் என்று தீர்மானித்தான் மனோ.

அந்த வீடு அம்மாவுக்குப் பிடித்திருந்தது. நாற்பது வருடங்கள் பழைய வீடு. வீட்டை மனோவுக்கு விற்ற அமெரிக்கப் பாட்டி வீட்டின் முன்னாலும், பின்னாலும் வளர்த்திருந்த பூச்செடிகளின் கொள்ளை அழகு பிடித்திருந்தது. வித்யா வேலைக்கும் போய்க்க் கொண்டு மூக்கால் அழுது கொண்டேதான் அந்தப் பூச்செடிகளை அழகு குன்றாமல் அதே மாதிரி பார்த்துக் கொண்டிருந்தாள். தண்ணீர் விடுவது அவள் பொறுப்பு. களைகள் எடுப்பது இவன் பொறுப்பு.

லியோ ஓடி வந்து அவளை நக்கியது. இரண்டு வயதான வீஸ்லா ஜாதி நாய்க்குட்டி. 

நாயெல்லாம் வெச்சிருக்கியாடா?”

வித்யாவுக்குப் பிடிக்கும்மா.”

பார்க்க பயமுறுத்துகிற மாதிரி இருந்தாலும் அதன் கண்களில் இருந்த குழந்தைத்தனத்தை  உடனே புரிந்து கொண்டாள் அம்மா. அதன் முதுகை அவள் வாஞ்சையாய்த் தடவிக் கொடுக்க அவளிடம் ஒட்டிக் கொண்டது. 

குளித்து சாப்பிட்டவுடன் கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிய விமானக் களைப்பில் தூங்கி விட்டாள். முன் ஜாமத்திலேயே பளிச்சென விழிப்பு வந்து விட்டதாக காலையில் சொன்னாள். 

இங்கே ராத்திரின்னா அங்கே பகல். அந்தக் குழப்பம்தான். ஒரு நாலு நாளாச்சுன்னா ஜெட் லேக் சரியாயிடும்மா.”

ஃப்ரிட்ஜிலிருந்த உணவுப் பொருட்களை அவளுக்குக் காட்டி மைக்ரோவேவ் அடுப்பில் சூடுபடுத்த சொல்லிக் கொடுத்தாள் வித்யா. 

மனோ காய்கறி நறுக்கிக் கொண்டிருந்ததை ஆச்சரியமாய்ப் பார்த்தாள். “உங்க அப்பா ஒரு நாள் கூட இதெல்லாம் பண்ணதில்லைடா.”

ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம். ஒருத்தருக்கொருத்தர் உதவி செஞ்சாத்தான் முடியும்மா. இதெல்லாம் அப்பாவுக்குப் புரியாது. துணியெல்லாம் துவைச்சு மடிச்சு வெக்கறது கூட நான்தான். பார்த்திருந்தா பத்து வருஷத்துக்கு முன்னமே அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கும். அவருக்கு ஆயுசு கெட்டிம்மா. அதான் என் கூட பேச்சு வார்த்தையே வெச்சுக்கல.” 

சிரித்துக் கொண்டே மனோ சொன்னாலும் - ப்ரெட் டோஸ்ட்டில் ஜாம் தடவிக் கொண்டிருந்த வித்யா அவன் தோளில் இடித்துக் கிசுகிசுத்தாள். “மறக்கறதுக்குத்தானே கூட்டிட்டு வந்திங்க? வேற ஏதாச்சும் பேசுங்க.”

அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் ஆளுக்கொரு காரில் கிளம்பி விட்டார்கள்.

வர்றதுக்கு சாயந்தரம் அஞ்சு மணி ஆயிடும்மா. பசிச்சா சாப்பிடு. தூக்கம் வந்தா ரெஸ்ட் எடு. யார் கதவைத் தட்டினாலும் திறக்காதே. மார்க்கெட்டிங் ஆட்கள் சில சமயம் வந்து கதவைத் தட்டுவாங்க. அவங்க பேசற இங்கிலீஷ் உனக்குப் புரியாது. நீ பேசறது அவங்களுக்குப் புரியாது.”

மனோவும், வித்யாவும் கொடுத்த எல்லா அறிவுறுத்தல்களுக்கும் அம்மா சரி சரி எனத் தலையாட்டினாள். முப்பது நாற்பது வருடப் பழக்கம். அவளுக்கென்று தெரிவுகள் எதுவும் இல்லை. அப்பா சொல்வதை அப்படியே அடி பிசகாமல் செய்வாள். அவளாகவே ஏதும் செய்ய நேர்ந்தாலும் கூட அப்பாவுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று ப்ரொக்ராம் செய்யப்பட்ட ரோபோவாகவே அவள் செயல்கள் இருக்கும். 

அவள் அப்பாவை மீறி அவருக்குத் தெரியாமல் செய்த அதிகபட்ச காரியம் அவர்  பேச்சு வார்த்தையை நிறுத்திய பிறகும் மனோவுடன் பேசிக் கொண்டிருந்ததுதான். 

மாலையில் அவர்கள் திரும்பி வந்த போது நேற்றை விட புத்துணர்ச்சியோடு இருந்தாள். 

இந்த நாய்க்குட்டி மட்டும் இல்லைன்னா தனியா இந்த வீட்ல பைத்தியம் பிடிச்சிருக்கும்டா!”

லியோ அவர்கள் மேல் பாய்ந்து அவர்களை நக்குவதும், முகர்வதுமாக சிறிது நேரம் விளையாடியது. 

மனோ, தக்காளி மிளகா மாதிரி காய்கறி விதை கிடைக்குமா? இவ்வளவு பெரிய இடம் இருக்கு. பூச்செடி மட்டும்தானா? கொஞ்சம் காய்கறி போட்டா பறிச்சு சமைக்கலாமே?”

மனோ எதுவும் பதில் சொல்வதற்கு முன்னால் பக்கத்து ரூமில் என்னவோ பண்ணிக் கொண்டிருந்த வித்யா ஓடி வந்து விட்டாள்.

அதெல்லாம் இங்கே சரி வராது அத்தை. முயல், மான் எல்லாம் காய்கறிச் செடிகளை கடிச்சு குதறிடும்.”

ஆமா சொன்னாங்க. ஆனா வேலி போட்டுக்கலாமாமே? என்னவோ கடை பேரு சொன்னாங்க. ஆங் ஹோம் டிப்போ. அங்கே வேலி போட தேவையான எல்லாமே கிடைக்குமாமே?  இந்தா இந்த லிஸ்ட்ல உள்ள சாமானெல்லாம் வாங்கினா போதும்.”

சதுரமாய் மஞ்சளாய் இருந்த ஒரு ஸ்டிக்கி நோட்டை அவனிடம் நீட்டினாள் அம்மா.

அவன் துணுக்குறலோடு அதைப் பார்த்தான். “யாரும்மா எழுதிக்குடுத்தா? யாரும்மா இதெல்லாம் உனக்கு சொன்னா?”

பக்கத்து வீட்டுப் பாட்டி. தோட்டத்துல வேலை செஞ்சிட்டிருந்துது. வேலி ஓரமா போய் நின்னு பேச்சுக் குடுத்தேன்.”

என்னது நீ அவங்க கிட்டே பேசினியா?”

முதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது. ரெண்டு பேருமே திணறினோம். அப்புறம் பழக்கமாயிருச்சு. டேய் நான் அந்தக் காலத்துல நாலாவது ஃபெயிலுடா! என்ன ஈஸு வாஸு எல்லாம் எங்கே போடணும்ன்னு தெரியாது.”

ஹோம் டிப்போ என்ற வார்த்தையைச் சொல்லுவாள் என அவன் எதிர்பார்க்கவே இல்லை. அம்மா என்ன படித்திருக்கிறாள் என்று இது வரைக்கும் அவளிடம் கேட்டதும் இல்லை. அதற்கான அவசியம் எதுவும் ஏற்பட்டதில்லை.

அடுத்த நாள் வீட்டிலிருந்த சமையல் பொருட்களை வைத்து ஏதோ கஷாயம் பண்ணி வித்யாவுக்குக் கொடுத்தாள். “கர்ப்பிணிப் பொண்ணுங்க இதைக் குடிச்சா சளி, இருமல் எதுவும் அண்டாது. இன்னும் பத்து மாசத்துக்கு உன்னோட உடம்பு ஆரோக்கியமா இருக்கணும் பாரு. நல்ல வேளை சரியான சமயத்துலதான் நான் வந்திருக்கேன்!”

அத்தை, நாங்க ரெண்டு வாரத்துக்கு ஒரு வாட்டி டாக்டர் கிட்டே போறோம். ஜெனரல் ஹெல்த்துக்கு மல்ட்டி விட்டமின்ஸ் குடுத்துருக்காங்க. கண்டதெல்லாம் சாப்பிட்டா ரியாக்ட் ஆயிடும். ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்புறம் பண்ணுங்க.”

அம்மாவின் முகம் சற்றே வாடிப் போனாலும் - உடனே சமாளித்து சிரித்தாள். “பரவால்லம்மா. வேண்டாம்ன்னா குடிக்க வேண்டாம். வெறும் சுக்கு, மிளகுதான்.” அவளுக்கு அப்பாவிடம் கிடைக்காத மூக்குடைப்புகளா! இருந்தாலும் ஒரு சின்னப் பெண்ணின் உதாசீனத்தையும் அதே போல அவளால் எடுத்துக் கொள்ள முடியுமா?

மனோ வித்யாவிடம் தனியாகச் சொன்னான். “முகத்துல அடிச்சாப்ல சொல்லத் தேவை இல்லை வித்யா. நீ குடிக்கிறயா இல்லையான்னு அம்மா செக் பண்ணப் போறதில்லை. பாவம் சட்ன்னு முகம் சுருங்கிட்டாங்க.”

பொய் சொல்லிப் பழக்கமில்லை. முகஸ்துதிக்காக பொய் சொல்லிட்டு அதை மெயிண்ட்டெயின் பண்ண மெனக்கெட முடியாது.”

மனோ அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை. அம்மாவுக்குத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். 

நயாகரா, ஃப்ளோரிடா எல்லாம் அம்மாவைக் கூட்டிச் செல்லத் திட்டமிட ஆரம்பித்தான். இதற்கிடையே அம்மா ஒரு நாள், ‘இங்கே ஒரு ரேடியோ கம்பெனி இருக்கே அது பேர் என்ன?” என்றாள்.

முதலில் மனோவுக்கு ஒன்றும் புரியவில்லை. பல பெயர்களை மாற்றி மாற்றிக் கேட்க, அவள் மறுத்துக் கொண்டே வந்தாள். கடைசியில் வித்யாதான் கண்டு பிடித்தாள். “வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா?”

அங்கே வேலை பார்த்த ரங்கநாதன் என்பவரின் மகன் நிக். முடிந்தால் அவனைப் பார்க்க வேண்டும் என்றாள். 

யாரும்மா அது?”

என்னோட ஃப்ரெண்டு.” என்றாள். 

கூட்டுப் புழு அம்மாவுக்கு அமெரிக்காவில் ஒரு ஃப்ரெண்டா? இடுப்பில் சுமந்து நிலாச் சோறு ஊட்டி வளர்த்திய அம்மா என்னும் நிலாவுக்கு ஒரு மறுபக்கம் இருக்கும் என்று தோன்றியதே இல்லையே. தோன்றியிருந்தால்தானே அவளிடம் அவளுடைய கதை என்ற ஒன்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முயன்றிருப்பான்?

ஃபேஸ்புக், லின்க்டு இன் என்று தன்னுடைய சமூகவலைத் தொடர்புகள் வழியே விசாரித்து வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவில் பணி புரியும் நண்பரின் நண்பர் ஒருவரைக் கண்டு பிடித்தான். நாலைந்து நாள் வரை அவரால் ரங்கநாதன் என்று யாராவது அங்கே இருக்கிறார்களா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. வார இறுதிவாக்கில் அவர் சொன்ன தகவல் மனோவை உற்சாகப்படுத்தியது. 

ரங்கநாதனை இங்கே நேதன் என்று அழைத்து வந்திருக்கிறார்கள். அமெரிக்காவில் அப்படித்தான். நிகில் நிக் ஆகி விடுவான். கிருஷ்ணா கிறிஸ் ஆகி விடுவார். ஷண்முகம் ஷான் ஆகி விடுவார். கூப்பிட வசதியாக ஒத்த ஒரு ஆங்கிலப் பெயரில் அடையாளப்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

அவர் ரிட்டயர் ஆகிப் பல வருஷங்கள் ஆகி விட்டதாம். அவருடைய மகன் நிக் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு ஃப்ளோரிடாவில் செட்டில் ஆகி இருக்கிறாராம். 

அம்மாவிடம் வந்து சொல்ல அவள் முகம் பளிச்சென்று மலர்ந்தது.

யாரும்மா அது? உனக்கு எப்படித் தெரியும்?”

ஃப்ரெண்டுன்னு சொன்னேனே! சின்ன வயசு ஃப்ரெண்டு.”

அதற்கு மேல் அவள் எதுவும் சொல்லவில்லை.

பார்க்க முடியுமா?” - என்றாள் அம்மா.

உனக்கு  ஃப்ளோரிடா எல்லாம் சுத்திக் காமிக்க பிளான் பண்ணியிருக்கேன். நிக் கிட்டே ஃபோன்ல பேசிப் பார்க்கறேன். அங்க போறப்போ மீட் பண்ண முடியுமான்னு!”

அம்மா அப்படியே கனவுலகில் மூழ்கினாள். அவள் அஞ்சாவதோ, ஆறாவதோ படிக்கிறபோது ஏற்பட்ட நட்பு. அமெரிக்காவிலிருந்து கிராமத்துக்கு விடுமுறைக்கு வருவார்கள். நிக்குக்கும் அவள் வயதுதான் இருக்கும். அவனைக் கூட்டிக் கொண்டு புழுதிக் காட்டில் சுற்றுவாள். புளியங்காய் அடித்து சாப்பிடுவார்கள். ஆற்றில் குதித்து விளையாடுவார்கள். மரங்களில் தொங்கி விளையாடும்போது - கிளை முறிந்து விழுந்து கையை உடைத்துக் கொண்டு - இவன் புழுதிக்காட்டில் விளையாடுவது ரங்கநாதனுக்கு அப்போதுதான் தெரியும். செமத்தியாய் அடி. இவளுக்கும் வீட்டில் திட்டு. 

நிக் ஊருக்குப் போகும் முன் அவளிடம் ஓடி வந்து சொல்லி விட்டுத்தான் போனான். “அமெரிக்கா வந்தின்னா என்னை வந்து பாரு. அங்கே பார்க்ல விளையாடலாம். ஸ்விங் இருக்கு. ஸ்லைடு இருக்கு. க்ளைம்பர்ஸ் இருக்கு. ஜாலியா விளையாடலாம்.”

தலையைத் தலையை ஆட்டினாள். அவளால் கல்யாணமாகி அமிஞ்சிக்கரை வரைக்கும்தான் வர முடிந்தது. அதற்கப்புறம் தலைக்கு மேல் ஏரோபிளேன் பார்த்தால் நிக் சொல்லி விட்டுப் போனது ஞாபகம் வரும். மனசுக்குள் சிரிப்பும் வரும். 

மனோ படுக்கையில் வித்யாவிடம் ஆச்சரியப்பட்டான். “லைஃப்ங்கிறது எவ்வளவு விநோதமான ஒரு விஷயம் பாரு வித்யா. அம்மாவுக்கு இங்கே ஒரு ஃப்ரெண்டுன்னு என்னால கற்பனை கூட பண்ண முடியலை. நிக் கிட்டே பேசினேன். அம்மாவை ஞாபகம் வெச்சிருக்கார். மீட் பண்ணலாம்ன்னார். லெட்ஸ் மேக் இட் ஏ சர்ப்ரைஸ். அம்மா கிட்டே இப்போ ஒண்ணும் சொல்ல வேண்டாம்.”

மூன்றே வாரத்தில் அம்மா இங்கே தினப்படி வாழ்க்கையைப் பழகி விட்டாள். இன்னமும் சில புதிர்களும் ஆச்சரியங்களும் கற்றுக் கொள்ளல்களும் இருக்கவே செய்தன. நேற்றைக்குக் கூட பரபரப்பாய் வாசலில் லியோவோடு உலாத்திக் கொண்டிருந்தவள் திடீரென பதட்டத்தோடு கத்திக் கொண்டு ஓடி வந்தாள். 

மனோவித்யாசீக்கிரம் வாங்களேண்டா. எருமை மாடு மாதிரி ஒரு நாய். லியோவைப் பார்த்து குரைச்சிட்டே ஓடி வருது. லியோவைக் கடிச்சிரப்போகுது. இதுவும் லூசு மாதிரி அது கிட்டே ஓடுது. செயின் போட்டுக் கட்டி வெக்க மாட்டிங்களா?”

மனோ சிரித்தான். “அம்மா. லியோ நம்ம வீட்டு புல்வெளியைத் தாண்டி எங்கேயும் போகாது. வேற நாய் எதுவும் இங்கே வரவும் வராது. இன்விசிபிள் டாக் ஃபென்ஸ் இருக்கு. அதைத் தாண்டிப் போக முடியாது.”

அப்படின்னா?”

கரண்ட்டுல கண்ணுக்குத் தெரியாத வேலி. கிட்டே போனா லேசா ஷாக் அடிக்கும்.”

அப்படியே கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து விட்டாள் அம்மா. துள்ளி ஓடும் லியோ ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தொட்டதும் விலுக்கென குலுங்கி பயந்து உடம்பை உதறிக் கொண்டே திரும்பி வருவதைப் பார்த்த போது அவள் முகத்தில் இனம் புரியாத ஒரு சோகம் படர்ந்தது போலிருந்தது. இது  ஒரு மாய வேலியா? சுதந்திரம் போல ஒரு சிறை.

ஜூலை நாலு அமெரிக்க சுதந்திர நாள் விடுமுறையின் போது வந்த மூன்று நாள் விடுமுறையில் மேலும் ஓரிரு நாள் சேர்த்துக் கொண்டு ஃப்ளைட்டில் அம்மாவை, வித்யாவோடு ஃப்ளோரிடா கூட்டிப் போனான். 

நிக் டிஸ்னி லேண்டில் வைத்து சந்திக்கலாம் என்றார்.

அம்மாவும் நிக்கும் கொஞ்ச நேரம் பேச்சு மூச்சில்லாமல் நின்றிருந்தார்கள். அமெரிக்க அக்செண்ட்டில்ஏய் ரெட்டை ஜடைஎன்றார் நிக். “பார்க்ல விளையாடலாம் அமெரிக்கா வான்னு கூப்பிட்டேன். க்ரெக்டா தீம் பார்க்குக்கே வந்துட்டியே!”

ரோலர் கோஸ்டில் போகலாம் என்றார் நிக். மனோ பயந்தான். அவனும், வித்யாவுமே இந்த மாதிரி சாகச ஓட்டங்களிலிருந்து அறவே ஒதுங்கி இருப்பார்கள். அவ்வளவு பயம். தலை சுற்றி உயிரே போய் விடுவதைப் போலிருக்கும். “அம்மா பயந்துருவாங்க நிக். அதுவும் இந்த வயசுல!”

நிக் அட்டகாமாய்ச் சிரித்தார். “சின்ன வயசில எனக்கு தைரியம் குடுத்ததே ரெட்டை ஜடைதான் மேன். ஆத்துல நீந்தக் கத்துக் குடுத்தா. பயமில்லாம மரமேற கத்துக் குடுத்தா. அவளா ரோலர் கோஸ்டர் பார்த்து பயப்படுவா? ஆர் யூ ரெடி?” என்றார் அம்மாவைப் பார்த்து. 

இருவரும் சிறு பிள்ளைகள் போல வரிசையில் நின்று ரோலர் கோஸ்டர் ரைடில் ஏறினார்கள். அப்படியே பின்னிப் பிணைந்து காற்றில் பறந்து குட்டிக்கரணமிட்டு  புரட்டிப் போடும் ரோலர் கோஸ்டர் ஓட்டத்தை முடித்ததும் - சிரிப்போடு வந்தாள் அம்மா. 

பயமா இல்லையாம்மா?”

என்னடா பயம்? நிக் இன்னொரு வாட்டி போலாம்.” 

அவர்கள் மறுபடியும் வரிசையில் நின்றார்கள்.

மனோ வித்யாவைப் பார்த்தான். “வித்யா, அப்பா ஒரு பெரிய சூரிய கிரகணம் மாதிரி அம்மாவை மறைச்சிட்டு நின்னுருந்திருக்கார். அவர் அவ மேல காட்டின அவநம்பிக்கைதான் எனக்குத் தெரிஞ்ச அம்மா. அவரோட குணாதிசயங்கள் என்னை அறியாமலே எனக்குள்ளே இறங்கி இருக்கறதை இந்த நிமிஷம் உணர்றேன். ஐயம் ஃபீலிங் லிட்டில் அஷேம்டு. நாம அன்னிக்கு எடுத்த முடிவை - நோ நோ நான் அன்னிக்கு எடுத்த முடிவை - இந்த நிமிஷம் மாத்திக்கணும்னு தோணுது. குழந்தை பிறந்ததும் நீ வேலையை விட வேண்டாம். ரெண்டு வாரம் மெட்டர்னிடி லீவ் போதும். எப்படியோ சமாளிப்போம். உன்னோட கரியர் உனக்கு முக்கியம். நம்ம குழந்தை நான் காட்ட விரும்பற அம்மாவைப் பார்க்க வேண்டாம். தான் விரும்பினபடி இருக்கும் தன் அம்மாவைப் பார்க்கட்டும்.”

வித்யா அவன் கையை எடுத்துத் தன் உள்ளங்கைக்குள் அழுத்திக் கொண்டு - தூரத்தில், வெகு உயரத்தில், ஹோவென்ற கூச்சலோடு உருண்டோடும் ரோலர் கோஸ்டரில் அம்மாவைத் தேடினாள். ◼︎


சங்கப்பலகை குழுமத்தில் பிப்ரவரி 2022 மாதத்தின் சிறந்த படைப்பாகத் தேர்வான கதை.

 

 

You are free to share the link to this page anywhere on social media or other websites. But copying/displaying this content on other websites or reproducing this content on any other media/format including but not limited to a book/audio/video is strictly prohibited and subject to legal action.

இந்தப் பக்கத்தின் இணைப்பை சமூக வலைத்தளங்களிலோ, பிற இணைய பக்கங்களிலோ பகிரும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் இந்தப் பக்கத்தில் உள்ள படைப்பை நகலெடுத்து வேறு தளங்களில் வெளியிடுவதோ, அல்லது இந்தப் படைப்பை நூலாகவோ, ஒலி அல்லது அசைபடம் உட்பட வேறெந்த வடிவத்திலும் மறு உருவாக்கம் செய்யும் உரிமை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அது சட்டப்படி குற்றமாகும்.

கதைகளில் வரும் சம்பவங்களும், பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.
சத்யராஜ்குமார்
சத்யராஜ்குமார்
A writer who cares about readability...

Related Articles