9-5
ஓவியம்: சத்யராஜ்குமார்

திரை

ரண்டாயிரத்தின் துவக்கத்தில் அமெரிக்காவில் அடித்த ஜாவா மென்பொருள் அலையில் வந்து விழுந்தவன்தான் தரணி. 

இன்று கோடியில் ஒருவன் ஆகி விட்டான்.

எல்லோரையும் போல க்ரெடிட் கார்டு வாங்குவதிலும், சம்பள உயர்வுக்காக கான்ட்ராக்ட்டுக்குக் கான்ட்ராக்ட் தாவுவதிலும், முப்பது வருட லோன் வாங்கி வீடு வாங்குவதிலும், இரண்டு வார லீவில் ஊருக்குப் போய் சடுதியில் பெண் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வருவதிலும், தேனிலவு முடிந்த கையோடு மனைவியைக் கர்ப்பிணியாக்கி மாமனார், மாமியாரை சுற்றுலா விசாவில் அழைத்து வந்து ஆஸ்பத்திரி, வால்மார்ட், நயாகரா, பிட்ஸ்பர்க் பாலாஜி கோயில் எல்லாம் சுற்றிக் காட்டுவதிலும், பர்த்டே பார்ட்டிகளில் பேஸ்மென்ட்டில் கூடி கேக் வெட்டுவதிலும், குழந்தையை கோச்சிங் வகுப்புகளுக்கு அனுப்பி அதன் மேல் கிஃப்டட் & டேலென்ட்டட் சைல்ட் என்று முத்திரை குத்த படாதபாடு படுவதிலும் கவனம் செலுத்தவில்லை.

ஒரே ஒரு சமூகவலைத்தள செயலியை உருவாக்கினான். உலகத்தின் முதல் ஐம்பது பணக்காரர்களில் ஒருவனாக ஆகிவிட்டிருக்கிறான்.

SOL.

மிஸ்டர் தரணி. ஒய் டிட் யூ நேம் திஸ் ஆப் ஏஸ் ஸொல்?”

கேட்ட நிருபரைப் பார்த்துச் சிரித்தான். “அது ஸொல் இல்லை. சொல். என்னுடைய தாய்மொழியில் அதற்கு Say என்று பொருள் உள்ளது. இட் ஆல்ஸோ மீன்ஸ் அ வர்ட். ஆங்கிலம் பேசுபவர்களுக்காக Say it in One Line என்று அதற்கு விரிவாக்கம் தந்து விட்டேன்.”

எக்ஸலன்ட். உங்கள் செயலியை ஒரு வரியில் சொல்லி விடுகிறது. ரொம்பப் பொருத்தமான பெயர்.”

அது ஒரு எளிமையான அப்ளிகேஷன்தான். தினமும் ஒரு சொல்லை அந்தச் செயலி வெளியிடும். அந்தச் சொல்லை வைத்து எல்லோரும் அவரவருக்குத் தோன்றியதை ஒரே ஒரு வரியில் எழுதி போஸ்ட் செய்வார்கள். அதிகம் பேரால் விரும்பப்பட்ட வரி லீடர் போர்டில் முன்னால் நிற்கும். அதிகம் பேரால் பகிரப்பட்ட வரிக்கும், அதிகம் எதிர்வினையாற்றப்பட்ட வரிக்கும் கூட தனியாக லீடர் போர்டு உண்டு. 

ரொம்பவும் எளிமையான ஒரு செயலி. எப்படி இது புரட்சிகரமான ஒன்றாக ஆகி விட்டிருக்கிறது?”

தரணி சிரித்தான்.

இரண்டு மணி நேர சினிமா பார்த்தாலும் சரி, இருநூறு பக்க நாவல் படித்தாலும் சரி அதனுடைய ஒன் லைனர்தான் தாக்கம் ஏற்படுத்துகிறது. அப்படியே மனதில் தங்கி விடுகிறது. அதுதான் இந்தச் செயலியின் வெற்றி ரகசியம் என்று நினைக்கிறேன். இந்தத் தளத்தில் எழுதப்படும் பெஸ்ட் ஒன்லைனர் ஒவ்வொன்றும் ஒரு நாவல் மாதிரி, ஒரு சினிமா மாதிரி விரும்பப்படுகிறது.”

மிகப்பெரிய சமூகப் புரட்சிக்கும், அரசியல் மாற்றங்களுக்கும் கூட இந்தச் செயலி காரணியாக அமைவதாய் நியூயார்க் டைம்ஸ் எழுதியிருக்கிறதே?”

உண்மைதான். இந்தச் செயலி பிற்பாடு அடைந்த மிகப்பெரிய உருமாற்றம் அது. ஆர்ட்டிஃபிஷியல் இன்ட்டெலிஜென்ஸ், மெஷின் லேர்னிங் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்த பிறகு அவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்தோம். அன்றைய நாளுக்கான சொல்லை இந்தத் தொழில்நுட்பங்கள் உதவியுடன் செயலி தானே கண்டறிந்து வெளியிட வழிவகை செய்தோம். அந்த நாளில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சொல் எதுவாக இருக்கும் என்று உலக அரசியல் நிகழ்வுகளைக் கொண்டு செயலி தானாகவே தீர்மானிக்கத் துவங்கியதும் இன்றைக்குத் தவிர்க்க இயலாத சமூக ஊடகமாகசொல்உருவாகி விட்டது.”

நான்காவது முறையாக அலாரம் அடித்ததும் ஆங்கில சேனலில் அன்றைக்கு வெளியாகியிருந்த வீடியோ பேட்டியை அணைத்து விட்டு படுக்கையிலிருந்து எழுந்தான். சுவரிலிருந்த பெரிய திரையில் ஒரு டேஷ்போர்டு தனது வரைபடங்களையும், புள்ளி விபரங்களையும் புதுப்பித்துக் காட்டியது. அன்றைய நிலவரப்படி அவனுடைய சொத்துமதிப்பு சில பில்லியன்கள் நேற்றைக் காட்டிலும் உயர்ந்திருப்பதாகச் சொல்லியது. 

சேனலை மாற்றியதும் அவனுக்காக நேரலையில் காத்திருந்த உதவியாளர், “காலை வணக்கம் சார். ஐந்து குளியலறைகள் தயார் செய்து வைத்திருக்கிறோம். உங்கள் மூடுக்கு தகுந்த மாதிரி ஒன்றை நீங்களே தேர்வு செய்யலாம்.” 

படங்களில் அவற்றைப் பார்த்தவன் பபுள் பாத் இருந்த குளியலறையைத் தேர்ந்தெடுத்தான். குளித்து முடித்தபோது சுமார் முப்பது உடைகள் அவன் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்த மிகப்பெரிய மாளிகை வீட்டின் டைனிங் ஹாலில் நான்கு வகை காலை உணவுகள் தனித் தனி மேஜைகளில். ஏழெட்டு செஃப்கள் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலைப் போல ஷிஃப்ட் போட்டு அவன் ஒருவனுக்காக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

அவன் சாப்பிட்டு முடித்தபோது உதவியாளர் கையில் டேப்ளட்டோடு அவன் முன் தோன்றினார்.

ரொம்ப பிசியான டே சார்.”

ஒரு ஓவர்வியூ தாங்களேன். ஐ வில் கெட் அன் ஐடியா.”

ஷ்யூர் சார். வழக்கமான இன்ட்டர்னல் மீட்டிங்குகளை விட்டுடறேன். வெளி நபர் சந்திப்புகளை மட்டும் சொல்கிறேன்.”

மொத்தம் எத்தனை?”

நாலு. ஒயிட் ஹவுஸ் மீட்டிங் இருக்கு.”

பிரசிடென்ட்டோடவா?”

வைஸ் பிசிடென்ட்டோட. நாட்டின் வேலைவாய்ப்பு மேம்பாடு சம்பந்தப்பட்ட மீட்டிங்தான். ஆனா அவங்க கட்சிப் பிரமுகர் ஒருவரின் அக்கவுன்ட்டை நம்ம பிளாட்பார்மில் சஸ்பென்ட் பண்ணியிருக்கோம். ஆஃப் தி ரெகார்டில் அது பத்தி மேலதிக தகவல் பெற முயற்சி செய்யலாம்.”

சிரித்தான் தரணி. “நான் பிறந்த தேசமானாலும் சரி, என்னோட திறமைகளை அங்கீகரிச்சு என்னைத் தத்தெடுத்துகிட்ட தேசமானாலும் சரிஅரசியல்வாதிகளின் அடிப்படை குணாதிசயங்களில் அதிக மாற்றமில்லை.”

இது மாதிரி பொலிட்டிகல் தாட்ஸ் எதையும் எங்கேயும் பேசிடாதிங்க சார். நம்ம பிராடக்ட் பர்ஃபாமன்ஸை விட உங்க பப்ளிக் பர்ஃபாமன்ஸ்தான் இப்ப நம்ம கம்பெனி பங்கு விலையைத் தீர்மானிக்குது. இன் தி பாஸ்ட், ஒரு கவனக் குறைவான வார்த்தைக்கு விலையா பல மில்லியன்கள் இழந்திருக்கோம்.”

ஓகே. கவனமா இருக்கேன்.”

அடுத்து அமெரிக்கா வந்திருக்கும் உங்க பூர்வீக நாட்டின் அமைச்சருடன் அரை மணி நேர சந்திப்பு. அநேகமா இன்வெஸ்ட் பண்ணச் சொல்லிக் கேப்பார். சிறந்த குடிமகன் விருது தர ஏற்பாடு செஞ்சிட்டிருப்பதா ஐஸ் வைப்பார்.”

நான் இப்ப அமெரிக்க பிரஜை ஆயிட்டேன்னு அவர் கிட்டே சொன்னீங்களா?”

நம்ப மாட்டேன்னு சொல்லி பத்து உலக சாதனையாளர்கள்ங்கிற தலைப்போட ஒரு வாட்ஸாப் போட்டோ காட்டுறார் சார். கல்பனா சாவ்லா, கமலா ஹாரிஸ், நீங்க எல்லாம் அந்த போட்டோவில் இருக்கிங்க.”

கிரேசி!”

ஆமா சார். வாட்ஸாப் ஈஸ் ஃபுல் ஆஃப் கிரேசி. ஆபிரஹாம் லிங்கன் சொன்னதெல்லாம் இப்ப உங்க போட்டோ போட்டுதான் வருது.”

ஓக்கே நெக்ஸ்ட்?”

அடுத்தது ஈரோப்பியன் வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் ஒரு சந்திப்பு.”

ஓ அது கொஞ்சம் சிக்கலான விஷயம்ன்னு நினைக்கிறேன்.”

எஸ் சார். ப்ரைவசி வயலேஷன். தனி நபர் தகவல்களைசொல்அத்துமீறி சேகரித்துப் பயன்படுத்தறதா அவங்க பார்லிமென்ட்டில் பெரிய அமளி துமளி.”

சி..-வை அனுப்பிரலாமா?”

நோ சார். நீங்க சந்திக்கலைன்னா பிரசினை பெரிசாயிடும். அவங்க எல்லாரும் கோபமா இருக்காங்க. பார்லிமென்ட்டில் ஹியரிங் வெப்பாங்க. அமைச்சக அதிகாரிகளை நீங்க சந்திச்சுப் பேசிருங்க. அப்போதான் பார்லிமென்ட் ஹியரிங்க்கு சி..-வை அனுப்பி சமாளிக்க ஒத்துப்பாங்க.”

அவங்க கிட்டே என்ன பேச?”

கவலைப்படாதிங்க. பப்ளிக் ரிலேஷன்ஸ் டீம் எக்சிக்யூட்டிவ்ஸ் உங்களுக்கு கன்ட்டென்ட் குடுத்துருவாங்க.”

நாலாவது மீட்டிங்?”

அது பி.ஆர் டீம்தான் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. பி.ஆர் எக்சிக்யூடிவ்வை அனுப்பி வைக்கிறேன். ஹி வில் எக்ஸ்ப்ளெயின்.”

உதவியாளர் அந்த அறையை விட்டு வெளியே செல்ல - பிரவுன் தலை மயிருடன், முகத்தில் ஃபிரேம் இல்லாத கண்ணாடியோடு வந்தார் அந்த எக்சிக்யூட்டிவ். “குட் மார்னிங் சார். சாயந்தரம் அஞ்சு மணிக்கு நாங்க வீடில்லாத, ஆதரவில்லாத மனிதர்களோட ஹோம்லெஸ் ஷெல்ட்டர்ல ஒரு மீட் ஏற்பாடு பண்ணியிருக்கோம்.”

ஓ எதுக்கு?”

உங்க வெல்த் நாளுக்கு நாள் ஏறிகிட்டே இருக்கு. அது நமக்கு சந்தோஷமான விஷயமா இருந்தாலும் செக்கு மாடு மாதிரி தினசரி நைன் டு ஃபைவ் வேலை பார்க்கிற மிகப்பெரிய சமூகக் கூட்டம் அதைப் பார்த்து எரிச்சலோ, கோபமோ, பொறாமையோ அடைஞ்சிரக் கூடாது.”

ஸோ?”

ஸோ, இது மாதிரி சமூகப் பிரசினைகளை டீல் பண்றவரா உங்களை அப்பப்ப ப்ரொஜெக்ட் பண்ணியே ஆகணும். அங்கே போய் இந்த ஹோம்லெஸ் பிரசினையைத் தீர்க்க விரிவான திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதா நீங்க ஸ்பீச் தரணும்.”

என்ன திட்டம் அது?”

சும்மா ஸ்பீச்தான் ஸார். திட்டம் தீட்டி அரசாங்கத்துக்கு ரெகமண்டேஷன் பண்ணுவோம்ன்னு பொதுவா சொல்லுங்க. அரசாங்கம் அதை ஏத்துகிச்சுன்னா இரண்டு பில்லியன் டொனேட் பண்ணற யோசனையும் இருக்குன்னு அடிச்சு விடுங்க.”

இது எப்படி நைன் டு ஃபைவ் கூட்டத்துக்கு என் மேல் கரிசனம் உண்டாக்கும்?”

ஒரு நிமிஷம் உங்க ஃபோனைக் கொடுங்க.”

தரணி மேஜை மேல் பளபளவென்று இருந்த ஐபோன் 13 மேக்ஸ் ப்ரோ-வை அவரிடம் நகர்த்தினான்.

அதிலிருந்த சிம் கார்டை எடுத்து இன்னொரு ஃபோனில் போட்டு அவனிடம் தந்தார். “இந்த ஃபோனை வெச்சிக்கங்க சார். இன்னிக்குப் பூராவும் இதைத்தான் நீங்க யூஸ் பண்ணனும்.”

அந்த ஃபோனைப் பார்த்து துணுக்குற்றான் தரணி. அதன் திரை பூகம்பம் தாக்கிய நிலப்பரப்பைப் போல கோடு கோடாய் நொறுங்கியிருந்தது. 

எக்சிக்யூட்டிவ் தொடர்ந்தார். “ஆன் பண்ணுங்க. உங்களால படிக்க முடியும். ஃபோன் அட்டெண்ட் பண்ண முடியும். ஹோம்லெஸ் ஷெல்ட்டர் விசிட்டை பிரஸ்ஸுக்கும் லீக் பண்ணியிருக்கோம். யாராவது நிருபர் கண்டிப்பா இந்த ஃபோனைப் பத்திக் கேப்பார். நான் வறுமையில் உழன்று மேலே வந்தவன். பல நாள் சாப்பாடில்லாம பசியோட ஸ்கூலுக்குப் போய்ப் படிச்சவன். என்னால வேற போன் வாங்கிட முடியும். ஆனா பழசை மறக்க மாட்டேன். இந்த திரை எப்ப படிக்க முடியாத நிலைமைக்குப் போய் பழுதடையுதோ அது வரைக்கும் இதைத்தான் பயன்படுத்துவேன்னு சொல்லுங்க.”

அப்படிச் சொன்னா?”

அவ்வளவுதான் சார். இது ரொம்ப நாள் தாங்கும். அந்த நைன் டு ஃபைவ் கூட்டம் நீங்க எவ்வளவு எளிமையானவர்ன்னு ஃபேஸ்புக், வாட்ஸாப்பில் அடுத்த பத்து வருஷத்துக்கு இதை ஷேர் பண்ணிகிட்டே இருப்பாங்க.”

தரணி அந்த ஓட்டை ஃபோனோடு ஃபெராரி காரில் அன்றைய நாளைத் துவக்கினான்.◼︎

 

You are free to share the link to this page anywhere on social media or other websites. But copying/displaying this content on other websites or reproducing this content on any other media/format including but not limited to a book/audio/video is strictly prohibited and subject to legal action.

இந்தப் பக்கத்தின் இணைப்பை சமூக வலைத்தளங்களிலோ, பிற இணைய பக்கங்களிலோ பகிரும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் இந்தப் பக்கத்தில் உள்ள படைப்பை நகலெடுத்து வேறு தளங்களில் வெளியிடுவதோ, அல்லது இந்தப் படைப்பை நூலாகவோ, ஒலி அல்லது அசைபடம் உட்பட வேறெந்த வடிவத்திலும் மறு உருவாக்கம் செய்யும் உரிமை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அது சட்டப்படி குற்றமாகும்.

கதைகளில் வரும் சம்பவங்களும், பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.
சத்யராஜ்குமார்
சத்யராஜ்குமார்
A writer who cares about readability...

Related Articles