வித்யா ரங்கா மாமாவிடம் ஆசையாய் உட்கார்ந்து பேசுகிறாள் என்று முரளிக்குத் தோன்றியது. அவரும் வித்யா மேல் அநாவசியமாய்க் கரிசனம் காட்டுகிறார். இவர் ஏன் அமெரிக்கா வந்தார் என்று முரளிக்கு எரிச்சலாக இருந்தது.
அவன் ஆஃபிசிலிருந்து திரும்பியபோது சமையலறையை ஒட்டிய டெக்கிலிருந்து பெரும் சிரிப்புச் சத்தம் கேட்டது.
வித்யா காற்றில் சைன் வேவ் போலப் பரவி அசையும் கூந்தலை நளினமாய் ஒதுக்கி கொஞ்சம் வெட்கம் கலந்த குரலில் சிரித்துக் கொண்டிருந்தாள். ரங்கா மாமா அப்படி என்ன ஜோக் அடித்தாரோ.
அவர் இங்கே இருக்கப் போவதே மொத்தம் நான்கு நாட்கள்தான்.
யாரிடமும் உடனே வளவளவென்று பேச ஆரம்பித்து விடுவார். பி.ஹெச்.இ.எல்லில் ஜியெம்மாக இருந்து ரிட்டயராகிய கையோடு சும்மா இருக்காமல் உதிரி பாகங்கள் ஏற்றுமதி செய்யும் கம்பெனி ஆரம்பித்து – இப்போது பிசினஸ் காரியமாய் அமெரிக்கா வந்திருக்கிறார்.
டெக்ஸாஸில் அவர் நண்பரின் வீட்டில் பத்து நாள் தங்கி ஆயில் கம்பெனி வேலைகள். அவை முடிந்த கையோடு பழைய சொந்தம் விட்டு விடக் கூடாது என்று ஈஸ்ட் கோஸ்ட்டில் இருக்கும் முரளி வீட்டுக்கும் விசிட்.
“அறுபதுகளில் சில வருஷங்கள் இங்கே வேலை பார்த்திருக்கேன்.” என்று அவனிடம் பழைய கதைகள் மட்டுமே பேசினார். “அமெரிக்கா இப்ப சுத்தமா மாறிப் போச்சு. அப்பல்லாம் இங்க லைஃபே இல்லை. வெள்ளைக்காரன் நம்மை மதிக்க மாட்டான். மெக் டொனால்ட்ஸ் மாதிரி இடத்துக்கு சாப்பிடப் போனா சர்வ் பண்ண மாட்டான். ஓட்டல்ல அவங்களோட உக்கார முடியாது. நமக்கெல்லாம் தனி இடம். வேண்டாம்டா சாமின்னு திரும்பிப் போய்ட்டேன்.”
டின்னருக்கு வெளியே போன போது – உணவில் பன்றிக் கறி கலந்து விட்டதற்காக ஆக்ரோஷமாய் சண்டை பிடித்துக் கொண்டிருந்த இந்தியனையும், மிக பவ்யமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்த வெள்ளைக்கார ஹோட்டல் மேனேஜரையும் மிக ஆச்சர்யமாய்ப் பார்த்தார்.
வானேஜ் ஃபோனில் நினைத்த நேரம் லோக்கல் கால் போல இந்தியாவைக் கூப்பிட்டுப் பேசுவது அவருக்கு இன்னோர் ஆச்சரியம்.
“ஃபோன் அப்போ யார் கிட்டே இருந்தது. லெட்டர் போடறதைத் தவிர வேற வழி இல்லேடா முரளி. தனிமை கொன்னிருச்சு.”
தெருவுக்குத் தெரு துவரம்பருப்பும், அப்பளமும் விற்கும் இந்தியன் ஸ்டோர்ஸ் கூட அவருக்கு ஆச்சர்யம்தான்.
“இவ்வளவு இண்டியன் ஸ்டோர்ஸா!”
“இவங்க எல்லாம் இப்ப திணறிட்டிருக்காங்க மாமா. வால்மார்ட், ஜயண்ட் மாதிரி அமெரிக்கன் க்ரோசரி ஸ்டோர்ஸ்ல கூட நம்ம மளிகை சாமான் விக்க ஆரம்பிச்சிட்டாங்க.”
“நீங்க எல்லாம் கம்ப்யூட்டரை குலதெய்வமாக்கி தினமும் மூணு வேளை பூஜை பண்ணலாம்டா. ஒய் டூ கே -வுக்கு அப்புறம்தானே இவ்வளவு கும்பல்! ஐ.டி-ல இன்டர்நெட்டை மேய்ஞ்சிகிட்டு சம்பளம் வாங்கற நீங்க ரியல் எஸ்டேட்டையும் விட்டு வெச்சிருக்க மாட்டிங்களே?”
“கரெக்ட்தான் மாமா. அது அதலபாதாளத்தில் சரிஞ்சும் கூட சலிக்காம வீடு வாங்கித் தள்ளறது நாமளும், சைனீஸும்தான். ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் நம்மைப் பத்தி நல்லாப் புரிஞ்சு வெச்சிட்டாங்க. வாஸ்து படி வீடு கட்டி எக்ஸ்ட்ரா பணம் அடிக்கிறாங்க. நார்த் ஃபேஸிங் வீடுன்னா முப்பதாயிரம் டாலர் ஜாஸ்தி. பெட் ரூமில் ஒன்பது அடி சீலிங் வெக்க பத்தாயிரம்.”
“ஸோ, கலர்… ரேஸ்… எதுவும் முக்கியமில்லை. டிமாண்ட் டிரைவ்ஸ் தி பிசினஸ்.”
“எக்ஸாக்ட்லி.”
இப்படி இண்ட்டெலெக்ச்சுவல் மாதிரி இவனிடம் பேசுகிறவர் – வித்யாவிடம், “நீ அமலா பால் மாதிரி இருக்கேடா கண்ணா!” என்று சொல்லி அவளைச் சிவக்க வைக்கிறார். “சிம்ப்பிள் பியூட்டி. உன்னோட கண்ணும், உதடுகளும் ஆயுதம். இவனை அப்படியே கத்தி முனையில் வெச்ச மாதிரி கட்டிப் போடலாம்.”
வித்யா குப்பென்று சிவந்து, கெசினோ ஸ்லாட் மெஷின் போல ஜல்லென்று சிரித்து, “நெவெர் மாமா.” என்றாள்.
இவன் பேச்சை வேதவாக்காய்க் கேட்டுத்தான் அவளுக்குப் பழக்கம். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன். அப்படித்தான் அவளுக்குச் சொல்லி வளர்த்தெடுத்திருக்கிறார்கள்.
“ஆச்சரியம்டா வித்யா. எனக்குத் தெரிஞ்சு எவ்வளவு பசங்க இப்போ பொண்ணு கிடைக்காம திண்டாடறாங்க. அமெரிக்காவில் வேலை பார்க்கிறான்னா இன்னும் கஷ்டம். பாங்க் அக்கவுண்ட்டிலிருந்து, பேக்கிரவுண்ட் செக் வரைக்கும் பண்ணிட்டும் பதில் தராம தவிக்க விடறாங்க. இவனுக்கு எங்கேயோ மச்சம். வேலைக்குப் போகாம வீட்டில் உக்காந்து அதிர்ந்து பேசாம இருபத்திநாலு மணி நேரமும் கணவனுக்கு சேவகம் பண்ணிட்டு – லக்ஷ்மிகரமா புடவை கட்டிட்டு, சான்சே இல்லை. நீ ஒரு ஐடியல் இண்டியன் ஹவுஸ் ஒய்ஃப்.”
முரளிக்கு உள்ளுக்குள் எரிந்தது.
இந்த கம்ப்பேரிசன் சார்ட்டெல்லாம் இவரிடம் யார் வரைந்து தரச் சொல்லிக் கேட்டார்கள்.
அவளுக்குள் இதுவரை இல்லாத எண்ணங்களை விஷ விதைகள் மாதிரி விதைத்து வைத்து விட்டுப் போய் விடுவாரோ என்று பயம் எழுந்தது.
ரங்கா மாமா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அமெரிக்க மாப்பிள்ளைப் பசங்களுக்கு பெண் கிடைப்பது இன்று மிகப் பெரிய லக்சரி. அப்படியே கிடைத்தாலும் அவர்களின் மனதுக்குகந்த மாதிரி பெண்கள் இருப்பதில்லை. மனைவிகளுக்கு அட்ஜஸ்ட் செய்து போகும் கணவன்களே பிழைக்கிறார்கள். இந்தப் பெண்கள் தங்களுக்கென்று தனித்துவம் இருப்பதாகக் கருதுகிறார்கள். யுகம் யுகமாய் இருந்த ப்ரையாரிட்டியைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டு கரியருக்கு அப்புறம்தான் குடும்பம் என்கிறார்கள். மாமியாராவது நாத்தனாராவது கொஞ்சம் ஜம்பம் காட்டினாலும் நறுக்கென்று பிளேடு மாதிரி வார்த்தைகளை உடனுக்குடன் திருப்பி வீசி விடுகிறார்கள். சுமையாகிப் போகும் என்றால் தாய்மையே வேண்டாம் என்கிறார்கள். பொறுமை என்பது மில்லிகிராம் கூட இல்லை. அவனுடைய நண்பர்கள் பல பேர் கல்யாணம் ஆன கையோடு விவாகரத்தும் ஆகித் தனி மரமாக நிற்கிறார்கள்.
வித்யாவிடம் அந்த மாதிரி எந்தப் பிரச்சனையும் இல்லை. இவனுக்குப் புடவை பிடிக்கும் என்றால் வேறு டிரஸ்சையே நாடுவதில்லை. அவனுக்கு ருசிகரமாய் சமைத்துப் போடுவதே தன் வாழ்க்கை லட்சியம் போல செயல்படுவாள். இவன் விருப்பமே அவள் விருப்பம். அவன் பேச நினைப்பதெல்லாம் அவள் பேசுவாள்.
சாயந்தரம் ஆபிஸ் விட்டு வந்ததும் புடவைத் தலைப்பில் காபி டம்ளரை ஏந்தி வந்து, அதே தலைப்பின் நுனியினால் வாஞ்சையாய் முகத்தை ஒற்றி, ஆசையுடன் தலைமுடியைக் கோதி இதம் தரும் மனைவி இன்றைக்கு அமெரிக்காவில் எங்கே இருக்கிறாள்.
அப்பேற்பட்ட பொறுமையின் சிகரத்தின் மீதும் சில சமயம் முரளிக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும். உணவில் காரம் கொஞ்சம் தலைக்கேறிப் போனால் கூட டென்ஷனாகி விடுவான். தட்டத்தைத் தூக்கி எறிவான். அவன் அப்பா அப்படித்தான் செய்வார். அதற்காக அவள் வருத்தப்பட்டு கண்ணீர் உதிர்க்க மறந்தால் திமிரோ என்று இன்னமும் கோபம் ஏறி முகத்தில் சட்டென்று அறைந்து விடுவான்.
அன்றைக்கு இரவு அப்படி ஒரு களேபரம் நடந்து விட்டது.
ரங்கா மாமா தூங்கி விட்டாரென்று நினைத்திருந்தான். இல்லை. அவருக்குக் காதுகளும், கவனமும் பூராவும் இங்கேயே இருந்திருக்கும் போலும்.
அடுத்த நாள் அவனிடம் நேரடியாகவே கேட்டு விட்டார். தனியாகக் கேட்டிருந்தால் பரவாயில்லை. ப்ரேக் ஃபாஸ்ட் மேஜையில் வித்யா முன்னாலேயே கேட்டு விட்டார்.
“டேய் முரளி, இங்கிதமில்லாம பர்சனல் சங்கதிகளில் மூக்கை நுழைக்கிறேன்னு நீ என்னைத் தப்பா நினைச்சிகிட்டாலும் பரவாயில்லை. சாயந்தரம் ஃப்ளைட் பிடிச்சுப் போனதுக்கப்புறம் ஏன் கேக்காமப் போனேன்னு எனக்கு உறுத்திட்டே இருக்கும். நீ வித்யாவை ரொம்ப எக்ஸ்பிளாய்ட் பண்றே. அவ பொறுமையா இருக்காங்கிறதுக்காக கன்னத்தில் கை வெக்கிற அளவுக்குப் போறது காட்டுமிராண்டித்தனம். வரம் மாதிரி உனக்குக் கிடைச்சிருக்கும் மனைவியைத் தவற விட்டுராதே. குடும்ப வன்முறையெல்லாம் போன தலைமுறை சமாசாரம். நம்ம ஊர்ல கூட அதை மவுனமா ஏத்துக்கிற காலமெல்லாம் போயாச்சு. இதே நம்ம ஊரா இருந்தா வித்யாவே இன்னேரம் பிறந்தகத்துக்குப் பெட்டியைக் கட்டிட்டுப் போயிருப்பா. இங்கே அவளுக்குப் போக்கிடமில்லைங்கிற தைரியத்தில்தானே நீ அத்து மீறிப் போறே?”
வித்யா முன்னால் வாதப் பிரதிவாதங்கள் எழுப்பி அவரை மேலும் பேச விடாதிருப்பது நல்லது என்று நினைத்தான்.
“ஸாரி மாமா. என் தப்புதான்.”
“ஸாரியை அவ கிட்டே சொல்லுடா.” என்றார்.
ஒரு வழியாய் அவரை அன்றைக்கு சாயந்திரம் வரை சமாளித்து பிரிட்டிஷ் ஏர்வேஸில் வழியனுப்பி வைத்து விட்டு வீட்டுக்கு வந்தால் – எப்போதும் போல் மலர்ந்த முகத்துடன் வித்யா அவனை வரவேற்கவில்லை.
எங்கே போனாள்? கிச்சனில், லிவிங் ரூமில், படுக்கை அறையில், பின் கட்டில், அருகாமை பூங்காவில் எங்குமே அவள் இல்லை.
ஸ்டடி ரூம் கம்ப்யூட்டரின் திரையில், “பிறந்தகம் meaning in english” என்று கூகிள் சர்ச் இருந்தது.
‘நம்ம ஊரா இருந்தா வித்யாவே இன்னேரம் பிறந்தகத்துக்குப் பெட்டியைக் கட்டிட்டுப் போயிருப்பா.’ ரங்ங்ங்கா மாமாஆஆ! பல்லைக் கடித்தான்.
அவசரமாய்க் காரைக் கிளப்பிக் கொண்டு டல்லஸ் மால் போனான். இரண்டாவது தளத்திலிருந்த அந்தக் கடைக்குள் நுழைந்தான். கண்ணாடி க்யூபிக்கிள்களில் சில இந்திய இளைஞர்கள் பெண்களைத் தேர்வு செய்து கொண்டிருந்தார்கள்.
இவனை வரவேற்ற கடைச்சிப்பந்தி – “உங்க வித்யா கோபிச்சுட்டு வந்துட்டா! கேஷ் கவுண்ட்டர்ல அறுநூறு டாலர் கட்டிட்டு வாங்க. ட்யூன் பண்ணித் தரோம்.” என்றார். ◼︎
- அமேசான் கிண்டிலில் 'ஸ்டிக்கர் பொட்டு' என்னும் சிறுகதைத் தொகுப்பிலிருந்து.
- பதாகை இலக்கிய மின்னிதழில் வெளி வந்தது.
இந்தப் பக்கத்தின் இணைப்பை சமூக வலைத்தளங்களிலோ, பிற இணைய பக்கங்களிலோ பகிரும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் இந்தப் பக்கத்தில் உள்ள படைப்பை நகலெடுத்து வேறு தளங்களில் வெளியிடுவதோ, அல்லது இந்தப் படைப்பை நூலாகவோ, ஒலி அல்லது அசைபடம் உட்பட வேறெந்த வடிவத்திலும் மறு உருவாக்கம் செய்யும் உரிமை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அது சட்டப்படி குற்றமாகும்.
கதைகளில் வரும் சம்பவங்களும், பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.