ஓவியம்: சித்ரன் ரகுநாத்
ஓவியம்: சித்ரன் ரகுநாத்

தற்சித்திரங்கள்

தவைத் திறந்து, “உள்ளே வாங்க.” என்ற காமினி அவனுடைய அமெரிக்க காதலி எமிலியை விட பல மடங்கு அழகாக இருந்தாள்.

காமினிக்கு முப்பத்தெட்டு வயதிருக்கலாம். சிக்கென்ற உடல்வாகுடன் அந்த அடர் சிவப்பு டேங்க் டாப்ஸில் பார்த்தபோது அப்படிச் சொல்லவே முடியாது. இப்போது தனியாகத்தான் இருக்கிறாள் என்று அம்மா சொல்லியிருந்தாள்.

விஸ்தாரமான பச்சைப் புல்வெளிக்கு நடுவே அமைந்திருந்த மிகப்பெரிய வீடு. அம்மா கொடுத்தனுப்பியிருந்த ஸ்வீட் கிஃப்ட் பாக்சை அவளிடம் தந்து விட்டு சோஃபாவில் அமர்ந்தவன், “இப்ப உங்களைப் பார்த்தா நீங்க செங்கம்பட்டி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவங்கன்னு யாரும் நம்ப மாட்டாங்க. அமெரிக்கனைஸ் ஆயிட்டிங்க.”

முகத்தில் வந்து விழுந்த கேசத்தை ஒதுக்கிக் கொண்டே ஒரு புன்னகையை மட்டும் பதிலாக அவள் அளித்தபோது, பேச வேண்டும் என்பதற்காக எதையோ பேசித் தொலைத்து விட்டேனா? ஒரு விநாடி வெட்கப்பட்டான்.

அவனை சகஜமாக்கும் வகையில், “காபி ஆர் ஜூஸ்? என்ன சாப்பிடறிங்க?” என்றாள். சட்டென பதில் எதுவும் வராமல் போகவே - அவன் முகத்துக்கு முன்னால்  ஆப்பிள் வாட்ச் கையை அசைத்து, “நீங்க ஏதோ பலமா யோசிக்கிற மாதிரி இருக்கு. ஐ ஆஸ்க்ட், யு லைக் டு ஹேவ் காபி ஆர் ஜூஸ்?”

அவன் இங்கே வந்த காரணம் விநோதமானது. அதை எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பத்தோடு யோசித்துக் கொண்டிருந்தான்.

எம்.எஸ். படிப்பதற்காக அமெரிக்காவுக்கு வந்த ஆறாவது மாதத்திலிருந்தே உடன் படிக்கும் எமிலி என்கிற அமெரிக்கப் பெண்ணுடன் காதல் மலர்ந்து விட்டது. லைப்ரரியில் ஒன்றாக உட்கார்ந்து ஒரு அசைன்மென்ட்டின் இறுதிக்கெடுவுக்காக வேலை செய்து கொண்டிருந்தபோது எமிலிதான் திடீரென்று அச்சம் மடம் நாணம் போன்ற எந்த பம்மாத்தும் இல்லாமல், “உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. உனக்கும் அப்படித் தோணுதா?” என்றாள்.

எமிலி போன்ற மெழுகுச்சிலை அப்படிக் கேட்டு விட்டால் ஓர் இளம் வாலிபனால் வேறு என்ன பதில் சொல்லி விட முடியும்? அவனுடைய தமிழ் நண்பர்கள், “மச்சம்டா மச்சான்.” என்றார்கள். அவளுடன் ஜிம்முக்குப் போகும் போது - மரத்தடியில் நின்று ஒரு ஹாலிவுட் முத்தம் பரிமாறிக் கொள்ளும்போது - கர்வமாகத்தான் இருந்தது. 

ஆனால் ஒவ்வொரு விநாடியும் உள்ளுக்குள் ஓயாமல் ஓர் உதறல். 

இந்தியாவில் தனியாக இருக்கும் அம்மாவை எண்ணித்தான். சின்ன வயதிலேயே தன் கணவனை - அவனுடைய அப்பாவைப் பறி கொடுத்து விட்டு இவன்தான் உலகம் என்று வாழ்ந்து வந்தவள். எம் எஸ் படிக்க அமெரிக்கன் யுனிவர்சிட்டி ஒன்றில் ஸ்காலர்ஷிப் கிடைத்தபோது அவன் நிறைய தயங்கினாலும், “ரெண்டு  வருஷம்தானே! ரெண்டு நிமிஷம் போல ஓடிடும்.” என்று அனுப்பி வைத்தது அவள்தான். ஏர்போர்ட்டில் அவன்பைசொல்லும் வரை திரள்கிற கண்ணீரை கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டிருந்தாலும் - அவன் மறைந்த பிறகு எவ்வளவு அழுதிருப்பாள் என்று அவனுக்குத் தெரியும். 

இந்த அமெரிக்க வாழ்க்கை என்பது ஒரு மாயச் சுழல்.  கொஞ்ச நாள் என்றுதான் முதலில் வருகிறார்கள். அதற்குப்பிறகு ஒரு மலைப்பாம்பு மாதிரி மெதுவாக அது உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்கிறது. இந்த எலாஸ்டிக் வாழ்விலிருந்து தப்பித்துச் சென்றவர்கள் வெகு சொற்பம். 

எம்.எஸ் முடிந்ததும் அமெரிக்காவிலேயே ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலை, கடனில் கார், கடனில் வீடு என்று இந்தச் சுழலில் முறையாக சிக்கிக் கொண்டான். இப்போது அம்மாவே கூப்பிட்டாலும் திரும்பிப் போகிற நிலையில் அவன் இல்லை. 

அவளுக்கு விசா எடுத்து கூட்டி வந்து விடுவதாக கடந்த இரண்டு வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான். இமிக்ரேஷன் சிஸ்டம் அதற்கு ஒத்து வருகிற மாதிரி தெரியவில்லை. மூன்று முறை அவள்  விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. ஹவுஸ் ஒய்பாக இருக்கும் விதவைத் தாய்மார்களுக்கு விசா கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். இங்கே வந்து நிரந்தரமாக தங்கி அரசுக்கு பாரமாகி விடுவார்கள் என்று இமிக்ரேஷன்காரர்கள் அஞ்சுகிறார்கள். 

போடா நீயாச்சு. அமெரிக்கா ஆச்சு. வாட்ஸாப் வீடியோல பேசினாப் போதும். இனிமே விசா கேட்டுப் போக மாட்டேன்.” - பிடிவாதமாகச் சொல்லி விட்டாள். 

எமிலியுடனான காதல் வளர்வதற்கு சவுகரியமாகவே போய் விட்டது. 

எப்ப  வீட்ல சொல்லப் போறே? எப்ப என்னை உன் அம்மாவுக்கு அறிமுகப்படுத்தி வைக்கப் போறே?” எமிலி கேட்டுக் கொண்டேதான் இருந்தாள். 

ஒரு பிரளயத்துக்கு பயந்து தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான். 

கல்யாணம் பண்ணிக் கொள்ள அவள் நெருக்கடி தர ஆரம்பித்ததும்தான் வேறு வழியே இன்றி அம்மாவிடம் சொன்னான்.  ஒரே ஒரு செல்ல மகனை முதலில் அமெரிக்கா பிரித்து எடுத்துக்கொண்டது. அவனை இப்போது ஓர் அமெரிக்காக்காரியும் பங்கு போட்டுக் கொள்கிறாள் என்பது அவளுக்கு எத்தனை பெரிய அதிர்ச்சியாக இருக்கும்?

ஒரு போர்க்களத்தை எதிர்பார்த்தவனுக்குப் பூச்செண்டை எடுத்து நீட்டினாள் அம்மா. 

என்னைப் பத்தி கவலைப்படாதேடா. உன் வாழ்க்கையை உனக்குப் பிடிச்ச மாதிரி நீதான் அமைச்சுக்கணும். உனக்குப் பிடிச்ச ஊர். உனக்குப் பிடிச்ச வேலை. உனக்குப் பிடிச்ச பொண்ணு. அவ எந்த நாட்டுக்காரியா இருந்தாலும் பரவாயில்லை.”

சே! இதற்காகவா இத்தனை வருஷமாக மறைத்து மறைத்துக் காதலித்தேன்! தன்னைத் தானே நொந்து கொண்டு இனி எல்லாம் சுபம் என எண்ணியபோது அந்தக் கண்ணி வெடி.

அம்மாவா எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள்தான் இருக்கு. அதுவும் உன்னோட நல்ல வாழ்க்கையை உத்தேசிச்சுத்தான்.  அந்தப் பொண்ணோட ஜாதகம் வேணும். அது பொருந்தி வரணும்.”

என்னம்மா உளர்றே? அவ வெள்ளைக்காரப் பொண்ணு. அவ கிட்டே ஏது ஜாதகம்?”

அவ பொறந்த தேதியையும் நேரத்தையும் வாங்கிக் கொடு. கம்ப்யூட்டர்ல போட்டு ஜாதகத்தை எடுத்துக்கலாம்.”

அம்மா மார்ஸுக்கு மனுஷனை அனுப்பலாமான்னு சயன்ஸ் போயிட்டிருக்கு. நீ என்னடான்னா... அதுவும் கம்ப்யூட்டர்ல ஜோசியம்.”

அம்மா அவ்வளவு சீரியசாகப் பேசி அவன் அதுவரை பார்த்ததில்லை. “இது ஜோசியம் இல்லை. ஜாதகப் பொருத்தம். எனக்கு மாங்கல்ய தோஷம் இருக்குன்னு சொன்னாங்க. வேற யாரும் இல்லை. உன்னோட தாத்தாதான். அவர் பெரிய ஜோதிடர். நான் அதை நம்பலை. அவரை எதிர்த்து உங்க அப்பாவை கல்யாணம் பண்ணினேன். அதோட பலனை நீ பொறந்த ரெண்டாவது மாசமே அனுபவிச்சேன்.”

அம்மா குழப்பிக்காதிங்க. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது அவரோட உடல்கோளாறு. ஹெரிடிட்டி. தற்செயல். அதை ஜாதகம் தோஷம்ன்னு தொடர்பு படுத்தாதிங்க. நான் அறிவியலை நம்பறவன்.”

நீ என்னை நம்ப  வேண்டாம். அப்பா இறந்தது தற்செயல்ன்னே இருக்கட்டும். நம்ம ஊர்ப் பொண்ணு காமினி. இப்ப அமெரிக்காவில் இருக்கா. அவளுக்கும் இதே தோஷம்தான். அவ கிட்டே பேசிட்டு ஒரு முடிவுக்கு வா.”

அம்மா இதுவரை எதையுமே வேண்டுகோளாக வைத்ததில்லை. இப்போது காமினியை சந்தித்து விட்டான். இந்தக் கேள்வியில் ஆரம்பிக்கலாமா?

தனியாதான் இருக்கிங்களா?”

ஆமா.”

அம்மா சொன்னாங்க. அவர்...”

டேவிட். அவர் இறந்து ஒரு வருஷமாச்சு.”

வெரி சாரி. பட் யு ஹேவ் டு மூவ் ஆன்.”

எப்படி? டேவிட் என்னோட மூணாவது கணவர்ங்கிற தகவலையும் அம்மா சொல்லியிருப்பாங்களே?” சிரித்துக் கொண்டேதான் அவள் கேட்டாள்.

சங்கடமாகத் தலையசைத்தான். “வெரி அன்ஃபார்ச்சுனேட். அம்மா ஜாதகம், மாங்கல்ய தோஷம்ன்னு ஏதோ அர்த்தமில்லாம பேசினாங்க. நீங்க அதையெல்லாம் நம்பறிங்களா?”

லிப்ஸ்டிக் உதட்டைக் கடித்து சின்ன விரக்தியுடன் பதில் சொன்னாள். “நம்பியிருந்தா மூணு கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேனே? ஆனா இப்ப என்னோட மூணாவது கணவர் டேவிட்டையும் பறி கொடுத்தபிறகு இதுக்கு எப்படி விளக்கம் கொடுக்கிறதுன்னு தெரியலை. மைக்கேல்ன்னு ஒருத்தர் ஆறு மாசமா டேட் பண்ண ஆரம்பிச்சிருக்கார். ஆனா எனக்கு பயமா இருக்கு. இதெல்லாம் உங்க கிட்டே ஏன் சொல்றேன்னா உங்க அம்மா என்கிட்டே  வாட்ஸப்பில் எல்லாமே சொன்னாங்க. உங்க காதலி எமிலியின் பிறந்த நாள் விபரங்களை அம்மாவுக்கு அனுப்பி  வைங்க. ஜாதகத்தில் கோளாறு இருந்தால் தயவு செஞ்சு பிரிஞ்சிடுங்க. அது உங்க ரெண்டு பேருக்குமே நல்லது.”

காமினியைப் போன்ற ஓர் அமெரிக்க வாழ் அல்ட்ரா மாடர்ன் பெண்ணிடமிருந்து இப்படி ஓர் அறிவுரையைக் கேட்பது பெரிய முரணாக ஒலித்தது. 

அவள் தொடர்ந்தாள். “நாம படிச்சதுதான் சயன்ஸுன்னு நம்பறோம். படிக்காததிலும் நம்மால விளங்கிக் கொள்ள முடியாத அறிவியல் இருக்கலாம்ன்னு இப்ப எனக்குத் தோணுது.”

அவளுடன் மேலும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தால் எமிலியைக் கை விட்டு விடுவேன் என்று பயந்தான். அவள் கொடுத்த காபியை அவசரமாய்க் குடித்து விட்டு விடை பெற்றான்.

திரும்பிப் போகிற போது ஒரு சிவப்பு நிறக் கார் அவனையே பின் தொடர்ந்தது. அவ்வப்போது ரியர்வியூ கண்ணாடியில் கவனித்தான். அபார்ட்மெண்ட்டில் பார்க் செய்த போது அந்தக் காரும் பக்கத்தில் வந்து நின்றது. அதிலிருந்து பொன்னிற தலைமுடியுடன் முகமெல்லாம் தாடியாக இறங்கி வந்த தடிமனான அமெரிக்கர், “ஹாய், அயாம் மைக்கேல்.”என்று கையை நீட்டி தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

மைக்கேல் என்றதுமே அவனுக்கு சட்டென ஃபிளாஷ் அடித்து விட்டது. காமினியின் நான்காவது கணவர் ஆகப் போகிறவர். இவர் ஏன் என்னைப் பின் தொடர்ந்து வந்தார்? புதிராக அவரைப் பார்த்துக் கொண்டே பதில்ஹாய்சொல்லிக் கையைக் குலுக்கினான்.

அவன் புதிர்ப் பார்வையை உணர்ந்து கொண்டவராக, “நான் காமினியோட…”

தெரியும். காமினி உங்களைப் பத்தி சொன்னாங்க.”

என்னன்னு?”

நீங்க அவங்களை ஆறு மாதமா விரும்பறதாக…”

மைக்கேல் சிரித்தார். “அப்படிச் சொல்லித்தான் காமினியோட பழகிட்டிருக்கேன். ஆக்ச்சுவலி நான் ஒரு எஃப் பி ஐ இன்வெஸ்டிகேட்டர்.” தன் அடையாள அட்டையை அவனுக்கு முன்னே நீட்டினார்.

அவன் திடுக்கிட்டுப் போய் அவரைப் பார்த்தான். 

அவர் தொடர்ந்தார். “டேவிட்டோட மரணத்தில் சந்தேகம் இருக்கு.ஏதோ ரெஸ்டாரெண்ட்டில் புட் பாய்சனாகி இறந்துட்டதா மெடிக்கல் ரிப்போர்ட் வந்திருந்தாலும் காமினி கொஞ்சம் கொஞ்சமா பாய்சன் பண்ணி அவரைக் கொன்னிருப்பான்னு ஒரு சந்தேகம் எழுந்திருக்கு. டேவிட்டோட உடம்பில் டெட்ரோஹைட்ரோசலைன்னு ஒரு கெமிக்கல் டிரேசஸ் இருக்கிறதா பின்னர் தெரிஞ்சது. அது கண்ணுக்கு விடற சாதாரண சொட்டு மருந்தில் இருக்கக்கூடிய ரசாயனம்தான். ஆனா கொஞ்சம் கொஞ்சமா செலுத்தினா அதுவே உடம்பில் கலந்து பாய்சனாக வாய்ப்பிருக்கு. அவளைப் பத்தி மேலும் கிளறிப் பார்க்கிறப்போ சொந்த கிராமத்தில் இருந்த முதல் கணவன் கிணத்தில் தவறி விழுந்து இறந்ததுஅப்புறம் அவள் மெட்ராஸ் வந்து ஆப்டோமெட்ரிஸ்ட் ஆகி இன்னொரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்டது. அவனும் திடீர்ன்னு ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போனதும் அமெரிக்கா வந்தது. எல்லாமே வாழ்க்கைல ஒவ்வொரு கட்டமா தாண்டி வர ஒவ்வொருத்தரையா பயன்படுத்தியிருக்கான்னு சந்தேகப்படறோம். நீங்க காமினியோட ரிலேட்டிவ்வா?”

இல்லை. ஒரே ஊர்.”

உங்க கிட்டே ஒரு அரை மணி நேரம் விசாரிக்கணும்.” என்றார் மைக்கேல்.

அவர் போன பிறகு மணி பார்த்தான். சாயந்தரம் நாலரை மணி. இந்தியாவில் இப்போதுதான் நடுநிசியைத் தாண்டியிருக்கும். எப்போது அங்கே விடியும் என்று காத்திருந்தான். பொறுமையில்லாமல் அடிக்கடி மணி பார்த்துக் கொண்டே இருந்தான். விடிந்தும் விடியாததுமாய் அம்மாவுக்கு போனைப் போட்டான்.

உன்னோட மூட நம்பிக்கையை இத்தோட விட்டுரும்மா. காமினியைப் பார்த்துப் பேசிட்டு வந்தேன். அவ நீங்க நினைக்கிற அளவுக்கு நல்ல பொண்ணு இல்லை. அவளுக்கு எந்த தோஷமும் இல்லை. மூணு கணவன்களையும் அவளேதான் கொன்னிருக்கணும்ன்னு இங்கே ரகசியமா இன்வெஸ்டிகேஷன் போயிட்டிருக்கு.”

“உனக்கு அது மூட நம்பிக்கை. ஆனா மூணு பேரும் நிக்கலையே? மாங்கல்ய தோஷம் இல்லேன்னா காமினி ஏன் தனக்கு வாய்ச்ச மூணு புருஷன்களையும் கொன்னிருக்கப் போறா? நீ எமிலியோட ஜாதக விபரங்களை இன்னிக்குள்ளே வாங்கி அனுப்புஎன்றாள் அம்மா.

You are free to share the link to this page anywhere on social media or other websites. But copying/displaying this content on other websites or reproducing this content on any other media/format including but not limited to a book/audio/video is strictly prohibited and subject to legal action.

இந்தப் பக்கத்தின் இணைப்பை சமூக வலைத்தளங்களிலோ, பிற இணைய பக்கங்களிலோ பகிரும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் இந்தப் பக்கத்தில் உள்ள படைப்பை நகலெடுத்து வேறு தளங்களில் வெளியிடுவதோ, அல்லது இந்தப் படைப்பை நூலாகவோ, ஒலி அல்லது அசைபடம் உட்பட வேறெந்த வடிவத்திலும் மறு உருவாக்கம் செய்யும் உரிமை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அது சட்டப்படி குற்றமாகும்.

கதைகளில் வரும் சம்பவங்களும், பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.
சத்யராஜ்குமார்
சத்யராஜ்குமார்
A writer who cares about readability...

Related Articles